டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நாடு முழுவதும் கொரோனாவைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு யார் பொறுப்பு?
நாடு முழுவதும் கொரோனா பரவியபோது, அவர்கள் மீது வெறுக்கத்தக்கக் குற்றச்சாட்டுகளும், இட்டுக்கட்டிய செய்திகளும் பிரச்சாரங்களும் முடுக்கிவிடப்பட்டன.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நிஜாமுதீன் பகுதியில் தப்ளிக் ஜமாத் நடத்திய மாநாடுதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. கொரோனாவைப் பரப்பியவர்கள் என தப்ளிக் ஜமாத்தின் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. வெறுக்கத்தக்க வகையில் ஏராளமானோர் ட்வீட் செய்தனர்.
எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 வெளிநாட்டினரை கடந்த 15 ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. முறைப்படி விசா பெற்று இந்தியா வந்த இவர்கள் மீது தான் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தினர். டெல்லி ஆம் ஆத்மி அரசுகூட, தப்ளிக் ஜமாத் தொடர்பான கொரோனா பாதிப்பை தனியாக வெளியிட்டது. டெல்லி சிறுபான்மை நல ஆணையம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தப்ளிக் ஜமாத் அமைப்பினரை மட்டும் மையப்படுத்தி கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிடுவதை டெல்லி மாநில அரசு நிறுத்திக்கொண்டது.
இப்படித் தனிப்பட்டவர்களாலும், அரசுகளாலும் தாக்குதலுக்கு ஆளான தப்ளிக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று சிறையில் வாடிய 36 பேரையும், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டெல்லி தலைமை மாஜிஸ்திரேட் அருண் குமார் விடுதலை செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 வெளிநாட்டவர்களுக்கு எதிரான ஓர் ஆதாரத்தைக் கூட காவல் துறை சமர்ப்பிக்கவில்லை.
இவர்கள் தான் கொரோனாவைப் பரப்பினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும், துன்புறுத்தும் நோக்கிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமது தீர்ப்பில் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டிருந்தார். இதே போன்று, 3 வெளிநாட்டினர் தொடர்பான வழக்கிலும் இதேபோன்ற கருத்து தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், ”கொரோனாவுக்கு யார் காரணம் என்று தேடிப்பிடித்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்காக, வெளிநாட்டினரைப் பலிகடாவாக்கியுள்ளனர்” என்று கண்டனம் தெரிவித்தது.
இதோடு, இதே குற்றச்சாட்டை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதையும் மும்பை நீதிமன்றம் கண்டித்தது. தேவையில்லாமல் தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் துன்புறுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கோபத்தை வெளிப்படுத்தியது.
தப்ளிக் ஜமாத்தைச் சேர்ந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். இது குறித்த விவாதத்தை காட்சி ஊடகங்கள் நடத்தாதது ஏன்? சிறப்புக் கட்டுரைகளை அச்சு ஊடகங்கள் ஏன் எழுதவில்லை?. தப்ளிக் ஜமாத் அமைப்பினருக்காகத் தனியாக கொரோனா அறிவிப்பை வெளியிட்ட அரசுகள் ஏன் மவுனம் காக்கின்றன.
ஒரு சமுதாயத்தின் மீது, வீண் பழி சுமத்திய ஊடகங்கள் எங்கே ஓடி ஒளிந்தன?. தவறுக்குப் பாவமன்னிப்பு கேட்கவேண்டாம். 36 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்த செய்தியையும், தீர்ப்பின் விவரத்தையும் வெளியிடுங்கள்.
இல்லையென்றால், உங்கள் மனசாட்சி காலம் முழுவதும் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்போது, உங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களே வந்தாலும் காப்பாற்ற முடியாது.