(23.1.1986 ல் தினமணியின் ஆசிரியராக திரு. ஏ.என்.சிவராமன் இருந்த போது ஆ.கோபண்ணா எழுதிய இக்கட்டுரை இரண்டாவது பக்கத்தில், தலையங்கத்திற்கு அருகில் முதலில் வெளியிடப்பட்டது. தற்போது 125வது பிறந்த நாள விழாவையொட்டி மீண்டும் வெளியிடப்படுகிறது.)
1697-ம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் அன்றைய வங்காள மாகாணத்தைச் சேர்ந்த ஒரிசாவின் மாவட்டத் தலைநகரான கட்டாக்கில் சிறந்த வழக்கறிஞரான ஜானகி நாத் போஸிற்கும், பிரபாவதி அம்மையாருக்கும் ஒன்பதாவது மகனாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.
தன் கல்லூரிப் படிப்பை கல்கத்தாவில் முடித்துவிட்டு மேல்படிப்புக்காக பெற்றோர், உறவினர் வற்புறுத்தலின் பேரில் இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்து பல்கலைக் கழகத்தில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார்.
1920-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சுபாஷ் சந்திரபோஸ் நான்காவதாக இடம் பெற்றிருந்தார். தேர்வில் வெற்றி கண்ட அவருக்கு ஐ.சி.எஸ். பணியில் சேருவதா? என்ற கேள்விக்குறி மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது.
மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவான முடிவோடு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ஐ.சி.எஸ். பணியிலிருந்து விலகினார். சொர்க்கத்தில் பணி செய்வதற்கு ஈடாக கருதப்பட்ட ஐ.சி.எஸ்., பணியை (Heaven Born Service) துச்சமென தூக்கியெறிந்துவிட்டு 1921 ஜூலை 16-ல் இந்தியா திரும்பினார். அப்போது அவருக்கு வயது 24.
பம்பாய் துறைமுகத்தில் இறங்கிய சுபாஷ் தன் வீட்டிற்க கூட செல்லாமல் காந்திஜியைச் சந்திக்கச் சென்றார். காந்திஜி இவருக்கு நல்லாசி கூறி வங்கத்தின் தனிப்பெரும் தலைவரான சி.ஆர்.தாசை சந்திக்கும்படி ஆலோசனை கூறினார்.
உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் விளங்கிய சுபாஷ் விரைவிலேயே பிரபலமானவராக உருவானதற்கு இரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். ஒன்று – 1921ல் கல்கத்தா வருகை தந்த வேல்ஸ் இளவரசர் புறக்கணிப்புப் போராட்டத்தில் முன்னணி வகுத்தது. மற்றொன்று – கல்கத்தா நகரசபை மேயராக சி. ஆர். தாஸ் பதவி வகித்த போது தலைமை நிர்வாக அலுவலராக சிறப்பாக பணியாற்றி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். !
1928-ல் மோதிலால் நேரு தலைமையில் கல்கத்தாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் தொண்டர் படைத் தலைவராக [G.O.C. of Congress Volunteers] தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த உடையில் ராணுவத் தளபதி போல் காணப்பட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் சுபாஷ் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன் உடல் நலம் பாதிக்கும் அளவில் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
1929 செப்டம்பர் 3 – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1930 ஜனவரி 23 – மீண்டும் கைது செய்யப்பட்டு ஒரு வருட தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்.
1931 ஜனவரி 18 – கைது செய்யப்பட்டு மால்டா மாவட்டச் 1 சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
1931 ஜனவரி 26 – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 6 மாத தண்டனை விதிக்கப்பட்டது.
1932 ஜனவரி 2 கைது செய்யப்பட்டு சியோனி சர்-ஜெயிலிலும், பிறகு ஜபல்பூர் மத்திய சிறைச்சாலையிலும் காவலில் வைக்கப்பட்டார். சுபாஷ் பாபுவிற்கு உடல்நிலை செவம் மோசமானதால் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னைக்கும்,பிறகு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்ராம் பூர்க்கும் கொண்டு செல்லப்பட்டார்.
காவலில் இருந்த சுபாஷ் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவிற்கு 1933 பிப்ரவரி 23-ம் தேதி சென்றார்.
ஐரோப்பாவில் சிகிச்சை பெற்று 1936 ஏப்ரல் 8-ல் தாய்நாடு திரும்பிய சுபாஷ் சந்திரபோஸை பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கியவுடன் கைது செய்யப்பட்டு அலிப்பூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1937 – மார்ச் 17-ல் விடுதலை செய்யப்பட்டார்.
1937 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சோர்வுற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நினைத்த காந்திஜி, குஜராத்திலுள்ள தப்தி நதிக்கரையில் ஹரிபுரா என்ற ஊரில் 1938 பிப்ரவரியில் கோலாகலமாக கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை தலைவராக கொண்டு வந்தார்.
சுபாஷ் தன் தலைமையுரையில் ”நாம் நடத்துகிற போராட்டத்திற்கு சர்வதேச நிலைமைகள் சாதகமாக இருந்தால் அதை நாம் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ள தயங்க மாட்டோம் என்று பேசியது அவரது ‘பாதையை’ எல்லோருக்கும் தெளிவுபடுத்தியது.
1939-ல் மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூருக்கு அருகில் உள்ள திரிபுரியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று காந்திஜி விரும்பினார்.
ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலுள்ள இளைஞர்கள் மத்தியிலும், இடதுசாரி எண்ணம்
கொண்ட முற்போக்குவாதிகள் மத்தியிலும் சுபாஷ் சந்திரபோவிற்கு உருவாகியிருந்ததால் காந்திஜியின் கருத்துக்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சுபாஷ் உறுதியாக இருந்தார்.
தலைவர் பதவிக்கு போட்டியிருந்ததால் மௌலானா ஆஸாத் போட்டியிட விரும்பவில்லை. சுபாஷ் சந்திரபோஸிற்கு எதிராக பட்டாபி சீதாராமையாவை தலைவர் பதவிக்கு காத்தின் நிறுத்தினார். தலைவர் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்று சுபாஷ் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு பற்றி காந்திஜி கருத்து கூறுகையில் பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்றது தேசத் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திரிபுரியில் மாநாடு கூடியபோது காந்திஜி ராஜ்கோட்டில் உண்ணாவிரதம் இருந்தார். சுபாஷ் சந்திரபோஸ் உடல் நலம் குன்றி ‘ஸ்டெச்சரில் மாநாட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டார்.
திரிபுரி காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜியை கலந்து கொண்டு காரியக் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற கோலிந்த வல்லயந்த் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தனது ஆதரவாளர்களை காரியக் கமிட்டியில் நியமிக்க சுபாஷ் சந்திரபோஸினால் முடியவில்லை.
காந்திஜியின் எதிர்ப்பை மீறி சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் பதலிக்கு போட்டியிட்டு பட்டாபி சீதாராமைய்யாவை தோற்கடித்தாரே தவிர, காந்திஜி ஒத்துழைப்பில்லாமல் காங்கிரஸ் மகாசபையை நடக்கிச் செல்ல அவ இயலவில்லை. வேறு வழியில்லாமல் காங்கிரசிலிருந்து வெளியேறி பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை நிறுவினார்)
1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது உலகப் போர் மூண்டது. சுபாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவரை ஆட்சியாளர்கள் விடுதலை செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
1941 ஜனவரி 26-ல் சுபாஷ் சந்திரபோஸ் வீட்டுக் காவலில் வருந்து தப்பிவிட்டார் என்ற செய்த நாடு முழுவதும் பரவியது.
காய்த்திருநாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறிய போர் மூண்டுள்ள காலமே ஏற்புடைய காலம் என்ற குறிக்கோளை உடைய சுபாஷ், அதை நிறைவேற்ற வெளிநாடு தப்பிச் சென்றார்.
ஆங்கிலேயரின் எதிரிகளோடு, தொடர்பு கொண்டு அவர்களின் உதவியால் பஹதூர்ஷாவும், தாந்தியா தோபியும், நானா சாஹீப்பும், அஜிமுல்லாகானும், குமார் சிங்கும், அஹமத் ஷாவும், ஜான்சிராணி இலட்சுமிபாயும் 1857-ல் துவக்கி வைத்த முதல் இந்திய சுதந்திரப் போரை வெற்றிகரமாக முடிப்பதை தன் கடமையாக சுபாஷ் சந்திரபோஸ் கருதினார். இந்தியாவிலிருந்து கொண்டு அதை நிறைவேற்ற முடியாது என்று சுபாஷ் நம்பினார்.
1941-ல் கல்கத்தாவை விட்டு மாறுவேடத்தில் வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து மாஸ்கோ சென்று ஜெர்மன் தலைநகரான பெர்லின் அடைந்தார். ஹிட்லரை சந்தித்து ஆதரவையும் பெற்றார். அங்கு அவருக்கு முழு ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பாரத நாட்டில் அன்றொரு நாள் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்த கிரேக்க அலெக்சாந்தருக்கு வழிவிட்டு தவறு செய்த கைபர் கணவாய், அதே பாரத நாட்டுக்கு வீரசுதந்திரம் வேண்டி நின்ற செயல் வீரன் சுபாஷ் சந்திரபோஸுக்கு இந்திய எல்லையைக் கடக்க வழிவிட்டுத் தன் தவறை திருத்திக் கொண்டது.
கிழக்காசியாவில் ஜப்பான் உலகப் போரில் இறங்கி பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாவா, மலேசியா, பர்மா முதலிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு ‘வந்தது சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்துக்கு வலுவூட்டுவதாக இருந்தது.
ஜெர்மனியிலிருந்து சுபாஷ், ஜப்பானின் உதவி கொண்டு, கீழ்த்திசையிலிருந்து இந்தியாவை நோக்கி படைகளைத் திரட்டி பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போர் தொடுக்க மிகப் பெரிய திட்டத்தோடு டோக்கியோ செல்வதென முடிவு செய்தார்.
அன்றொரு நாள் பயங்கரப் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்ட புரட்சி வீரன் ராஷ்பிகாரி போஸ் அப்போது ஜப்பானிலிருந்தார். இவர் இந்தியர்களின் பிரதிநிதிகளையும், இராணுவத் தளபதிகளையும் கொண்ட “இந்திய விடுதலைக்கழகம்” என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தார்.
அந்நாளைய ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து டோக்கியோ செல்வதென முடிவு செய்தார். அபித்ஹாசன் என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டார்.
இரண்டாவது உலகப்போர் உச்சக் கட்டம் அடைந்த காலத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் வட அட்லாண்டிக் கடல், தென் அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் வழியாக 98 நாட்கள் நெடிய பயணம் செய்து சுமித்ரா தீவை அடைந்தார். சுமித்ரா தீவிலிருந்து மலேயாவின் ஒரு பிரிவான பினாங்கு தீவிற்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவை 1943 ஜூனில் சென்றடைந்தார்.
டோக்கியோவில் ஜப்பானிய நாட்டுப் பிரதம மந்திரி டோஜோ, பிரதம ராணுவ தளபதி சூசியாமா ஆகியோரைச் சந்தித்தார். ஜப்பானிடம் தோல்வியடைந்த ஆங்கிலேயர் விட்டுச் சென்ற இந்திய வீரர்களையும், தளபதிகளையும் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்த்துப் போர் தொடங்க வேண்டும் என்ற தன் திட்டத்தை அவர்களிடம் தெரிவித்து, அவர்களுடைய முழு ஆதரவையும், உதவியையும் பெற்றார்.
ஜூலை 2-ம் தேதி சுபாஷ் போஸ் டோக்கியோவிலிருந்து முழு நம்பிக்கையுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். புரட்சி வீரர் ராஷ்பிகாரி போஸிடமிருந்து இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டார். விடுதலை கரைவத்தின் பிரதம தளபதியாகவும் பதவி ஏற்றார். அன்று முதல் அவர் “நேதாஜி” என்று அழைக்கப்பட்டார்.
அக்டோபர் 21-ம் நாள் சிங்கத்தீவு என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரில் நேதாஜி, ”விடுதலை இந்திய தற்காலிக அரசாங்கத்தை’ப் பிரகடனப்படுத்தினார். இந்த அரசை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தன.
இந்தியாவில் காங்கிரஸ் மகாசபையின் கொடியாக உள்ள கைராட்டை சின்னமுள்ள மூவர்ணக் கொடியையே இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக வானளாவப் பறக்கவிட்டனர். சிங்கப்பூரிலிருந்து வானொலியில் பேசும்போது நேதாஜி சுபாஷ், மகாத்மா காந்தியின் வாழ்த்துக்களைக் கோரினார்.
“தேசப்பிதாவே! எங்களை வாழ்த்துங்கள். இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை இந்தியாவெங்கும் எதிரொலித்தது.
மலேயாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து உணர்ச்சி மிகு உரையை நிகழ்த்தி தன் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார். பொருள் படைத்தவர்களிடம் நிதியுதவியும் பெற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் ‘ஜெய்ஹிந்த்” என முழங்கப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து செயல்பட்டு வந்த தலைமைச் செயலகம் பிறகு இரங்கூன் மாநகருக்கு மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைப் போரைத் துவங்க திட்டமிட்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவம் தாய்லாந்தின் வழியாக ”டில்லி சலோ” கோஷத்தை முழங்கிக் கொண்டு முன்னேறியது. 1944-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இந்தியாவின் வடகிழக்கு எல்லையான அரக்கான் மலைத் தொடரில் ஆங்கில ராணுவத்தோடு போர் தொடங்கியது.
மார்ச் 18-ந் தேதி பிரிட்டிஷ் ராணுவம் பின் வாங்க, விடுதலை ராணுவம் முன்னேறி பர்மா எல்லையைக் கடந்து முதன் முதலாக இந்திய மண்ணில் காலடி வைத்தது. இந்தச் சம்பவம் நேதாஜி தனி மனிதனாக சிங்கப்பூர் வந்து சேர்ந்த ஒன்பது மாதங்களில் நடந்தது. இது மாபெரும் சாதனையாக எல்லோராலும் கருதப்பட்டது.
பர்மா – இந்தியா எல்லையிலுள்ள இம்பால், விடுதலை ராணுவத்தின் வசமாகிட மூன்றே மைல்கள்தான் எஞ்சியிருந்தன.
வெற்றிக் கொடியை சில மணி நேரத்திற்குள் பறக்கவிட ஆசை கொண்டிருந்த விடுதலை வீரர்களின் முன்னேற்றத்திற்கு பெருத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பக்கம் தடையாகியது. விமானப் படையினருக்கு தேவையான உதவி கிடைக்கவில்லை. ஆங்கிலேய விமானம் ஒரு பக்கம் குண்டு மழை பொழிந்தது. சூழ்நிலை சாதகமாக இல்லாததால் நேதாஜி ராணுவ வீரர்களைத் திரும்பிவிட உத்தரவிட்டார்.
இந்தச் சமயத்தில் உலகப் போர் கடைசி கட்டத்தை எட்டியது. போரின் முடிவு பிரிட்டனுக்குச் சாதகமாகத் திரும்பியது. மீண்டும் இம்பாலைத் தாக்க விடுதலை ராணுவத்தின் இரண்டாவது பகுதி மேஜர் ஜெனரல் ஷா நவாஸின் தலைமையில் புறப்பட்டது. மேஜர் தில்லானும் கர்னல் சேகலும் உடன் சென்றனர்.
ஆங்கிலேயரின் புத்தம் புதிய பீரங்கிகள், புதுப் போர் முறைகளான இயந்திரத் துப்பாக்கிகள், குண்டு வீசும் நவீன விமானங்கள் ஆகியவற்றின் முன் விடுதலை ராணுவம் தோல்வியடைய நேர்ந்தது.
விடுதலை ராணுவத்திற்கு அது வீழ்ச்சியானாலும் இந்திய விடுதலைக்கு அந்தப் போராட்டம் எழுச்சியளித்தது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் ஜப்பான் சரணாகதி அடைந்தது. ஜப்பானியர் சரணடைந்து விட்டதால் எந்த நிமிடமும் ஆங்கிலேயர் சிங்கப்பூருக்குள் நுழைந்துவிட கூடிய சூழ்நிலையிருந்தது. இனியும் சிங்கப்பூரில் இருப்பது உசிதமல்ல என முடிவு செய்து நேதாஜி, விமானத்தில் நண்பர்களுடன் பாங்காக் பயணமானார்.
கர்னல் ஹபீபுர் ரஹ்மான், பிரீதம்சிங், மேஜர் பிக்ஹாசன், தேவநாத்தாஸ், மேஜர் சுவாமி, எஸ்.ஏ.ஐயர் ஆகிய நண்பர்களும் அந்த விமானத்தில் சென்றனர்.
ஆகஸ்ட் 17-ம் நாள் காலை 8 மணிக்கு நேதாஜி தன் சகாக்களுடன் பாங்காக்கிலிருந்து இந்தோ சீனாவின் தலைநகரான செய்கோனை நோக்கிப் புறப்பட்டார். செய்கோன் விமான நிலையத்திலிருந்து நேராக நண்பர் நாராயணதாஸின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு குளியலை முடித்து விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். செய்கோனிலிருந்து பறப்படவிருக்கும் விமானத்தில் ஒரு இடம் மட்டும் இருப்பதாக செய்தி வந்தது. தன்னுடன் ஹபீபுர் ரஹ்மானை அழைத்துக் கொண்டு, தன் சகாக்களிடம் பிரியாவிடை பெற்று மாலை 5.15க்கு விமானத்தில் புறப்பட்டார்.
இந்தோ – சீனாவிலுள்ள டுரையின் என்ற ஊரில் விமானம் இறங்கியது. அங்கு இரவு தங்கி மறுநாள் காலையில் மீண்டும் விமானம் புறப்பட்டது.
1945 ஆகஸ்ட் 18-ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு பார்மோஸா தீவிலுள்ள தைஹோகூ என்ற ஊரில் விமானம் இறங்கியது. 35 நிமிடம் கழித்து மீண்டும் பறக்கத் தொடங்கியது. 300 அடி உயரம் கூட பறந்திருக்காது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விமானம் கீழே விழுந்தது. விமானம் தீப்பிடித்துக் கொண்டதால் நேதாஜியும், ஹபீபுர் ரஹ்மானும் மிகுந்த தீக்காயங்களுடன் தைஹோகூவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இரவு ஒன்பது மணிக்கு மருத்துவமனையிலேயே நேதாஜி உயிர் நீத்தார் என்ற செய்தியை இங்கிலாந்து வானொலி அறிவித்தது.
இமயமும் நடுங்கும் வலிமை கொண்ட தோள்களும், பாரதத்தின் அடிமைத் தளைகளைச் சுட்டுச் சாம்பலாக்கும் கனல் கக்கும் ஒளிபடைத்த கண்களும் உடைய மாவீரன் நேதாஜிக்கு இன்று நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காந்திஜி – தேசத்தின் தந்தை (Father of the Nation); நேதாஜி தேசத்தின் மாவீரன் (Hero of the Nation).
நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மறைந்த மாவீரன் நேதாஜியின் புகழுக்கும், பெருமைக்கும் இழைக்கப்படுகிற மிகப்பெரிய களங்கமாகும்.
நேதாஜியின் அஸ்தி (ASHES) இன்னும் ஜப்பான் தலைநகரான டோக்கியோவிலுள்ள ரங்கோஜி ஆலயத்தில் (Rangoli Shrine) வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 74ஆம் ஆண்டு கொண்டாடும் நிலையில் நேதாஜியின் அஸ்தி இன்றும் அன்னிய மண்ணில் கேட்பாரற்று இருப்பது இந்தியர் அனைவருக்கும் மிகப்பெரிய அவமானமாகும். அந்த அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வர கடந்த காலத்தில் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் எதுவுமே வெற்றி பெறவில்லை . இதுவரை நேதாஜியின் ‘உயிரும்’, ‘அஸ்தியும்’ ஒரு அரசியலாக இருந்தது. 125வது பிறந்த நாள் விழா கொண்டாடுகிற இந்நிலையில் இனி ‘அது’ அரசியலாக இருக்க முடியாது.
நேதாஜிக்கு 125வது பிறந்த நாள் விழா கொண்டாடுகிற இந்த சமயத்திலாவது அஸ்தியை இந்தியாவுக்கு உரிய மரியாதையோடு கொண்டுவந்து எங்கு இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மீது விசாரணை (INA TRIAL) நடந்ததோ அதே தில்லி செங்கோட்டையில் (RED FORT) வைத்து எல்லோரும் பார்க்கும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்புவதே இந்திய தேசபக்தர்களின் தணியாத அவாவாகும்.
நேதாஜியின் 125வது பிறந்த நாள் விழாவை அர்த்தமுடையதாக்க அதுதான் சிறந்த வழி. இந்திய அரசு செய்யுமா? நாடு எதிர்பார்க்கிறது.