மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கான அரசு என்பதைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
சமீபத்தில் மக்களவையில் நடந்த பட்ஜெட் விவாதத்தில் கூட, ”நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போல், இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் என 4 பேர் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
மோடி ஏழைகளுக்கானதா? அல்லது பணக்காரர்களுக்கானதா? என்பதைக் கடந்த 10 மாத கொரோனா காலம் உணர்த்தி விட்டது.
எந்தவித முன்னேற்பாட்டுக்கு மக்களைத் தயாராக விடாமல், ஒரே இரவில் பொது முடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். இதெல்லாம் மக்கள் மீதான அக்கறை என நினைத்துக் கொண்டிருந்தோம். இந்த பொது முடக்கம் ஏழைகளை அழித்தொழித்து, பணக்காரர்களைச் செழிக்க வைக்க நடந்த மாபாதக திட்டம் என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
பொது முடக்கம் அறிவித்ததும் என்ன நடந்தது?
அன்றாடம் காய்ச்சிகள், கூலித் தொழிலாளர்கள் ஒரே நாளில் முடக்கப்பட்டார்கள். குறு, சிறு மத்திய தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. ஒரே இரவில் நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றியது இந்த அரசு.
இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை தான் கொடுமை. தாங்கள் வேலைபார்த்த நிறுவனங்கள் மூடப்பட்டதும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துப் போனார்கள். பல நூறு கி.மீ. தொலைவுக்கு நடந்தே செல்லும் கொடுமை நிகழ்ந்தது. பசி, பட்டினியோடு நடந்தே சென்றவர்களில், விபத்தில் சிக்கி, உடல் நலிவுற்று என நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, ”பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்” என்றார்.
பொருளாதார வல்லுநர்களின் கருத்துகளை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பேருந்து வசதி செய்து கொடுத்த பிரியங்கா காந்தியின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி, அறிவிப்புகளோடு நின்று போனது. 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். மக்கள் முழுமையாக மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 11 மாதங்களாக ஏழைகளைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ராகுல் காந்தி கூறுவதைப் போல் பணக்காரர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அரசு பாடுபட்டுள்ளது.
இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே மக்களவையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை அமைந்துள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள 2 அம்சங்கள்:
” நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல செல்வந்தர்கள் தேவை. அவர்கள் நியாயமற்ற முறையில் தாக்கப்படக்கூடாது. இரண்டாவதாக, பொது நிறுவனங்களை அரசு நடத்துவது என்ற நிலை மாறிவிட்டது. பொது நிறுவனங்களை எந்த சூழ்நிலையிலும் அதிகாரத்துவம் கையில் எடுக்கக் கூடாது”.
பூனை தானாகவே வெளியே வந்துவிட்டது.
குஜராத்தில் அதிக பணக்காரர்கள்:
கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயின்படி, மகாராஷ்டிராவில் 271 பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 21.14 லட்சம் கோடியாகும்.
டெல்லியில் 163 பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 6.7 லட்சம் கோடி.
கர்நாடகாவில் 72 பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.49 லட்சம் கோடி.
குஜராத்தில் ரூ. 1,000 கோடிக்கு அதிகமுள்ள சொத்துகளைக் கொண்ட பணக்காரர்களாக 58 பேர் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.54 லட்சம் கோடியாகும். தெலங்கானாவில் 49 பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களது சொத்து மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி.
குஜராத்தின் 5 பெரும் பணக்காரர்கள் :
- மோடிக்கு அரசுக்கு மிக நெருக்கமான முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 234 கோடி.
- திலிப் சாங்க்வியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 182 கோடி.
- கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 230 கோடி. அஜிம் பிரேம்ஜியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 251 கோடி.
- பல்லோஞ்சி மிஸ்ட்ரியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 89 ஆயிரத்து 970 கோடி. இவர், டாடா குழுமத்தின் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச பங்குதாரராக இருக்கிறார். இவரது மகன் சைரஸ் மிஸ்ட்ரி டாடா சன்ஸ் தலைவராக இருக்கிறார்.
கொரோனா கோடீசுவரர்கள்:
11 மாதங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேலை இழந்து பசியோடு தவித்துக் கொண்டிருக்க, கடந்த 2018 ஆம் ஆண்டை விட,கொரோன காலத்தில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 100 கோடி டாலர்கள் கொண்ட சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80 ஆக இருந்தது. கொரோனா கால கட்டத்தில் இது 90 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 90 கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் 33 சதவிகிதம் அதிகரித்து, 483 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 37.2 சதவிகிதம் அதிகரித்து, ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் மட்டும் இந்திய கோடீசுவரர்களின் சொத்து ரூ.12.97 ட்ரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் கோடீசுவரர்களுக்கு உயர்ந்த சொத்துகளிலிருந்து, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 94,045 கொடுக்க முடியும். கொரோனா காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்து நின்றபோது, கோடீசுவரர்களின் சொத்துகள் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கொரானா காலத்தில் இந்தியாவின் முதல் 11 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த உயர்ந்த சொத்து மதிப்பிலிருந்து, 10 ஆண்டுகளுக்குத் தேசிய வேலை உறுதித்திட்டத்துக்கும், 10 ஆண்டுகள் சுகாதாரத்துறைக்கும் செலவழிக்க முடியும்.
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி கொரோனா பரவலுக்குப் பிறகு ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மாறிவரும் நிலையில், 2017 காலாண்டிலிருந்தே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான காலாண்டு விகிதம் குறைந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 7.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
மோசமான நடவடிக்கைகளால் மத்திய அரசே பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கை முதல் அதிர்ச்சியைக் கொடுத்தது. இரண்டாவதாக, 2017 ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தியது இரண்டாவது அதிர்ச்சி. முதல் அதிர்ச்சியில் இருந்து பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இப்படியே தொடர்ந்து கொண்டு போன பொருளாதார நிலை, கொரோனா பரவலுக்கு பிந்தைய பொது முடக்கத்தால் கோமா நிலையை அடைந்துவிட்டது.
ஏழைகளின் பொருளாதார பாதிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. ஆனால், ஆட்சியாளர்களின் நெருக்கமான தொழிலதிபர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்ட ஆக்போம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் காப்ரியல் பச்சர் கூறும்போது,” இந்தியாவில் கொரோனா காலத்தில் சமமற்ற நிலை அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இந்த இடைவெளி கொரோனா வைரஸை விடக் கொடியது” என்றார்.
நூற்றுக்கு நூறு உண்மை!