காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. கட்சியின் தலைவராக, ஆட்சியின் ஆலோசகராக இந்த நாட்டு மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை இங்கு நினைவுகூரப்படுகிறது…
இந்திய தேசிய காங்கிரஸின் நீண்ட காலம் தலைவராக இருந்த பெருமையை சோனியா காந்தி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் மிகப் பழமையான மற்றும் மிகுந்த செல்வாக்குள்ள அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். ராஜிவ் காந்தி படுகொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 1998 ஆம் ஆண்டு தான் சோனியாவின் தோள்களில் தலைவர் என்று பொறுப்பு ஏற்றப்பட்டது. அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றதோடு, இந்தியாவைக் கட்டமைப்பதற்கான நம் முன்னோர்கள் கண்ட கனவை நிறைவேற்றும் பயணமாகவும் அமைந்தது.
2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு:
1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சோனியா காந்தி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், ஆங்கிலம் படிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குள்ள ட்ரினிட்டி கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ராஜிவ் காந்தியை சோனியா காந்தி சந்தித்தார்.
மனதைப் பரிமாறிக் கொண்ட இவர்கள் 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது பிரதமராக இருந்த மாமியார் இந்திரா காந்தி வீட்டில் மருமகள் என்ற பொறுப்பை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். தன் குடும்பத்தின் மீது தீவிர கவனம் செலுத்துவதிலேயே சோனியா காந்தி தன் முழு நேரத்தையும் செலவிட்டார். இருந்தாலும், அவ்வப்போது, அரிதாக அரசியலில் தலை காட்டி வந்தார்.
அதேசமயம், இந்திரா காந்தியின் அலுவலகப் பணியிலும் சோனியா காந்தி உதவியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமரானபோதும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவரான போதும் சோனியா காந்தி கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
அப்போது, ராஜிவ் காந்தியுடன் நாடு முழுவதும் அவர் பயணம் மேற்கொண்டார். ராஜிவ் காந்தி வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் சுகாதாரம் மற்றும் நலப்பணிகளை மேற்கொண்டார். இவ்வளவு பணிகளுக்கு இடையேயும் தன் குடும்பத்தின் மீதும், குடும்பத்தை வலுப்படுத்துவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.
சோனியா காந்தியின் கல்வி :
13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்த சோனியா காந்தியை, புத்திசாலி, விடாமுயற்சியுடையவர், அர்ப்பணிப்புடையவர் என அவரது ஆசிரியர்கள் பாராட்டியிருக்கின்றனர். அதன்பிறகு, வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்காக, ரஷ்யன், ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியில் சேர்ந்தார்.
சோனியாவின் அரசியல் பயணம் :
ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொண்ட புதிதில் சோனியா காந்திக்கு அரசியலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. குடும்பத்தைக் கவனிப்பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு,ராஜிவ் காந்தி பவுண்டேஷனை தொடங்கினார். அதோடு தற்கால ஆய்வுகள் குறித்த படிப்பை ராஜிவ் காந்தி பெயரில் ஆரம்பித்தார். இவற்றுக்குத் தலைமையேற்றுச் சிறப்பான நிர்வகித்தார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர், கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
1999 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது. இதனால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ரேபரலி தொகுதியிலிருந்து சோனியா வெற்றி பெற்றிருந்தார்.
தலைவராக சோனியா காந்தி :
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், வாஜ்பாய் தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின், ஒளிரும் இந்தியா என்ற கோஷத்தை, சோனியா காந்தியின் சாமானிய மனிதர் என்ற கோஷம் வெற்றி கொண்டது. மதச்சார்பின்மை, பிரதிநிதித்துவம், சமத்துவம் மற்றும் நலத்திட்டங்களில் சோனியா ஆற்றிய சேவை காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வூட்டியது. சோனியா காந்தியின் சிறந்த தலைமையின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2 முறை ஆட்சி பொறுப்பேற்றது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்:
2004 ஆம் ஆண்டு தேர்வுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி அமைக்கும்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானது. இதன் தலைமைப் பொறுப்பைச் சோனியா காந்தி ஏற்றார். அப்போது, சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அவர் பிரதமர் பதவியை ஏற்கவில்லை. அவர் வெளிநாட்டவர் என்ற காரணம் முன் வைக்கப்பட்டதால், சோனியா காந்தியே பிரதமர் பதவியை உதறித் தள்ளினார்.
அதன்பின்னர், மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். அதேசமயம், நாட்டின் சமூக பொருளாதார மேம்பாடு குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் தேசிய ஆலோசனை குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். அப்போது தான் கிராமப்புற வளர்ச்சிக்காகத் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர மறுசீரமைப்புத் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு அரசுப் பதவியில் மட்டுமே வகிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட போது, தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்பியாக தொடர்ந்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 2007 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையில் சோனியா காந்தி உரையாற்றினார். இதனையடுத்து, அக்டோபர் 2 ஆம் தேதியை வன்முறை இல்லாத சர்வதேச தினமாக அறிவித்து ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியது.
2009 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சோனியா காந்தி முக்கிய பங்காற்றினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் மட்டும் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவரான சோனியா காந்தி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், குழந்தைகள் நலனுக்காக பெரும் பங்காற்றினார். அதோடு, சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
சோனியா காந்தி பெற்ற விருதுகள்:
* 2004 ஆம் ஆண்டு உலகத்திலேயே 3 ஆவது சக்திவாய்ந்த பெண்மணி என்று ஃபோர்ப்ஸ் இதழின் அங்கீகாரம்* 2006 ஆம் ஆண்டு புருஷெல் பல்கலைக்கழக கவுரவ டாக்டர் பட்டம்*2007 ஆம் ஆண்டு சோனியாவை உலகின் ஆறாவது சக்திவாய்ந்த பெண்மணி என ஃபோர்ப்ஸ் அங்கீகரித்தது.
* 2007. 2008 ம் ஆண்டுகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற உலகின் 100 பேரில் ஒருவராக சோனியா காந்தியை டைம் இதழ் தேர்வு செய்தது.
* 2008 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
* பிரிட்டிஷ் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழ், 2010 ஆம் ஆண்டின் உலகில் மிகவும் மக்கள் செல்வாக்குள்ள 50 பேரில் ஒருவராக சோனியாவை தேர்வு செய்தது.
* சோனியா காந்தி 2 புத்தகங்கள் எழுதியுள்ளார். ராஜீவும் ராஜீவின் உலகமும் என்ற தலைப்பிட்டு ஒரு புத்தகமும், சுதந்திரத்தின் மகள் என்ற தலைப்பிட்டு, நேரு மற்றும் இந்திராவுக்கு இடையான தந்தை, மகள் உறவை அழகாக வெளிப்படுத்தி மற்றொரு புத்தகமும் எழுதியுள்ளார்.