நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இடமுண்டு. பெரும் பிரச்சினைகளில், அரசாங்கத்தை உறுப்பினர்கள் கேள்வி கேட்பது இதுவரை வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலுக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் மோடி அரசு அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டிருந்தது. அரசை கண்காணிக்க இத்தகைய கேள்வி நேரம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் முன் எப்போதும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கேள்வி நேரத்தை தவிர்க்க, ஒரு தொற்றுநோயை பயன்படுத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, அரசு செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கவும் இந்த கேள்வி நேரம் பயன்படுகிறது. உதாரணமாக, புதுடெல்லி மறுசீரமைப்பு போன்ற திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், இத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்த ஒரு கருவியாக உள்ளது. அதிகாரிகளும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பில் உள்ளனர்.
கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதால் எழுந்துள்ள கடும் விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ”கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமான கேள்விகளே அதிகம் இருக்கும். அவை, பொது நலன் சார்ந்ததாக இல்லை. இங்கிலாந்தின் கேள்வி நேரம் நடைமுறைக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் எழுப்பப்படும் குரல்களை தடுத்து நிறுத்தவும், தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளை தடுக்கவும் இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
உதாரணத்துக்கு, சுரங்க மற்றும் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட முன்வடிவுக்கு கருத்து தெரிவிக்க, வழக்கத்துக்கு மாறாக 10 நாட்கள் குறுகிய காலம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத சுரங்க வரையறையை மாற்றக்கூடியது. இந்த முக்கியமான சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் பங்கேற்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அதிகாரக் குவியல் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மோடி அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பட்சத்தில், மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு செயல்பாடும் முழுமையாக நடைபெறும் என்பதை, மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்.
( Source: Scroll.in )