( Economic Times இல் Satav’s unfulfilled dream: BJP’s defeat in Gujarat என்ற தலைப்பில் கனிஷ்கா சிங். எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் )
ராஜீவ் சதவ் எளிமையான அடிமட்ட தொண்டர். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாகிப் போனவர். கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த அவர், மத்திய மோடி ஆட்சியின் வீழ்ச்சி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தார். அதற்கான களப்பணியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், கொரோனோ தொற்று ஏற்பட்டு, 23 நாட்களாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.
டெல்லியிலிருந்தோ அல்லது குஜராத்திலிருந்தோ புறப்படும்போது, மகாராஷ்ட்டிராவில் உள்ள தன் சொந்த கிராமமான கலம்னுரிக்கு சென்று தங்குவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால், ‘நான் என் கிராமத்தில் இருக்கிறேன்…’ என்று குதூகலத்துடன் கூறுவார்.
ராஜீவ் சதவ் உண்மையான காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய சிறந்த மனிதர். மகாராஷ்ட்டிரா இளைஞர் காங்கிரஸில் நிர்வாகியாக இருந்தவர். அதன்பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் 12 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் இளைஞர் காங்கிரஸின் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.
2009 ஆம் செப்டம்பர் 21 ஆம் தேதி 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, மகாராஷ்ட்டிரா பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். ”நான் இளைஞருக்கான வயதைக் கடந்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்…” என்று குறிப்பிட்டு, கட்சித் தலைமைக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அனுப்பியவர். இளைஞர் காங்கிரஸ் தலைவராக 5 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர்.
ஜனநாயகத்தின் மூன்றடுக்குகளிலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
சட்டம் படித்திருந்தாலும், நீதிமன்றத்தில் வழக்காடியதில்லை. எனினும், சட்டத்தை இயற்றும் இடத்தில் எப்போதும் இருந்திருக்கிறார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதர். புத்திக்கூர்மையுடையவர். காங்கிரஸில் படிப்படியாக வளர்ந்து நட்சத்திரமாக ஜொலித்தவர்.
‘உங்கள் கிராமத்தில் கேஸ் ஏஜென்ஸி நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், மாநிலங்களவை பதவியை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது’ என ராஜீவுக்கு குடியரசுத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து, எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் கேஸ் ஏஜென்ஸி, பெட்ரோல் பங்குகள் இருக்கின்றன என்ற பட்டிலை சேகரித்தார். அந்த பட்டியலில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். இதன்படி பார்த்தால், அரசியல் உள்நோக்கத்தோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம் என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி மீதான ராஜீவ் சதவின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் முழுமையானது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிட்டபோது, எம்.எல்.ஏவாக இருந்தார். தான் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்தார். எம்.எல்.ஏ. தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை, தனக்குப் பிறகு அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
2022 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைய வேண்டும் என்பது தான் ராஜீவ் சதவின் கனவு. அந்த கனவு நிறைவேறாமலேயே கொரோனா எனும் கொடிய நோய்க்குப் பலியாகிவிட்டார். ”குஜராத்தில் பா.ஜ.க. தோற்றால், இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று அவர் நம்பினார்.
கொரோனாவின் இரண்டாவது அலையின் நிறைவில், ராஜீவின் கனவு நிறைவேறும் வகையில் திருப்பம் ஏற்படும். ராஜீவ் சதவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்தக் கனவை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும்.
கட்டுரையாளர் : கனிஷ்கா சிங். (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மறைந்த ராஜீவ் சதவுடன் இணைந்து பணியாற்றியவர்.)