முக்கிய அம்சங்கள்:
- இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க ‘இந்து’ நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
- சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், ” தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
- பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது.
- மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்து நாளேட்டின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. உலகத்தின் எந்த சக்தியாலும் ‘தி இந்து’ நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தின் குரலாக ஒலிக்க 1889 இல் இந்து ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது. இன்று 11 மாநிலங்களில் 21 நகரங்களில் வெளியிடப்பட்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களைப் பெற்று பீடு நடை போட்டு வருகிறது. இந்தியாவில் எத்தனையோ நாளேடுகள் வெளிவருகின்றன. இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. எந்த நாளேட்டில் எந்த செய்தி வந்தாலும், இந்து நாளேட்டில் வருவதைத்தான் வாசகர்கள் உறுதியாக நம்புவார்கள். அத்தகைய நம்பகத்தன்மைமிக்க இந்து நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி சந்தித்து, அதன் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும், தற்போதைய மக்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், “தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் பெற்ற மரபு பறிக்கப்படுவதாகக்” குறிப்பிட்டிருக்கிறார். இதையொட்டி, டிவிட்டர் பயனர் ஒருவரது கேள்விக்குப் பதில் அளித்த என்.ராம், “இந்த விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதன் மூலம் தி இந்து குழுமத்தின் மரபு மற்றும் நற்பெயரை மாலினி பார்த்தசாரதி பறிக்கிறார் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 142 ஆண்டுகளில் தி இந்து ஆங்கில ஏட்டின் கடின உழைப்பில் கிடைத்த நற்பெயர் மற்றும் மரபு பறிபோவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்குப் பதில் கூறிய மாலினி பார்த்தசாரதி, “என்.ராம் நினைப்பதைப் போல் 142 ஆண்டு கால தி இந்து நாளேட்டின் பெருமை அழிந்துவிடாது. உண்மையை எழுதியதால் தான் 142 ஆண்டுகள் கடினமாக உழைத்துப் பெற்ற நற்பெயர் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமான அல்லது அரசியல் சார்பு நிலையால் கட்டமைக்கப்படவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், எந்த இந்து நாளேட்டை உலக அரங்கில் உயர்த்தி நற்பெயரைப் பெற்றுத் தந்த திரு. என். ராம் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
மேலும் மாலினி பார்த்தசாரதி தமது பதிலில், “என்.ராம் தலைமையில் தி இந்து இயங்கியபோது உண்மையிலேயே மோசமடைந்த பாரம்பரியத்தையும் நற்பெயரையும் மீட்டெடுக்க நான் முயன்று வருகிறேன்” என்று ஆதாரமற்ற அவதூறான கருத்தைக் கூறியிருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான தி இந்து வாசகர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.
ஏற்கெனவே ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும் என்றும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நேர்மை மறுக்க முடியாததும் கேள்விக்கு அப்பாற்பட்டதும் ஆகும் என்றும் மாலினி பார்த்தசாரதி குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இன்றைக்கு பிரான்ஸ் அரசாங்கமே விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடியை சந்தித்த மாலினி பார்த்தசாரதி வெளியிட்ட கருத்துக்கள் மூலம் ‘பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது’.
பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது. இந்த சந்திப்பையொட்டி, பிரதமர் மோடியின் வகுப்புவாத கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தி இந்து பின்பற்றுகிற கொள்கைகளிலிருந்து மாலினி பார்த்தசாரதி தடம் மாறுவாரேயானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உலகத்திலேயே பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட 188 நாடுகளின் வரிசையில் 142 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள்
ஏவப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு,தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியிட்டதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அடக்குமுறையால் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை சோதனைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 65 பதிப்புகளை நடத்தி வருகிற டைனிக் பாஸ்கர் குழுமம் வருமான வரி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் என்கிற நாளேடுகளை இந்த குழுமம் நடத்துகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று, இறப்பு மூடி மறைக்கப்படுவது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடு பற்றியும்ஆதாரப்பூர்வமாக இந்த குழுமத்தின் பதிப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. அதேபோல கொரோனா தொற்றில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுவதாகவும் டைனிக் பாஸ்கர் குழுமம் செய்தி வெளியிட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அந்த குழுமத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி குரல்வளையை நெறிக்க முயற்சி செய்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிற பிரதமர் மோடியுடன், இந்து குழுமத்தைச் சார்ந்தவர் கொள்கை சமரசம் செய்து கொள்வதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சகித்துக் கொள்ளமாட்டார்கள்.
தி இந்து குழுமம் என்பது பங்குதாரர்களுக்கு மட்டுமே முழு உரிமை கொண்டதல்ல. இதை மக்களின் சொத்தாகவே கருதவேண்டும். இந்து குழுமத்திலிருந்து வெளிவருகிற நாளேடுகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிறார்கள். எனவே, இந்து குழுமத்தின் கொள்கை வழிப்பாதையை ஒரு தனிப்பட்ட மாலினி பார்த்தசாரதியால் மடைமாற்றிவிட முடியாது. அப்படி மடைமாற்ற அவர் முனைந்தால் இந்து குழுமத்தில் இருக்கிற கருத்துச் சுதந்திர காவலர்களும், அதில் பணியாற்றுகிற ஆயிரக்கணக்கான ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்களும், ஊழியர்களும், லட்சக்கணக்கான வாசகர்களும் இந்து குழுமத்தின் பாரம்பரிய நற்பெயரைக் காப்பதற்குக் கிளர்ந்தெழுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துவின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில் திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. அதற்கு ஒரு கொள்கை முகத்தை வழங்கிய அவரது பங்கை யாரும் மறுக்க முடியாது. உலகத்தின் எந்த சக்தியாலும் தி இந்து நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது.