குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனை,அவரது நூற்றாண்டு பிறந்தநாளில் நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது.
கடந்த 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரில் தலித் குடும்பத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கரைப் போலவே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தார்.
படித்து முடித்ததும், 1943 ஆம் ஆண்டு ‘தி இந்து’ நாளேட்டில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். அதன்பின், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டிலும் பணியாற்றினார். வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பின்னர், இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் சேர்ந்த அவர், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியாவுக்கான தூதுவராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், ஓராண்டில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார். அதன்பிறகு, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரானார். 1992 ஆம் ஆண்டு துணை குடியரசுத் தலைவராகவும், பின்னர், 1997 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராகவும் ஆனார்.
இன்றைக்கு இந்துத்துவா அமைப்புகளால் வெறுக்கத்தக்கக் கலாச்சாரம் மற்றும் தரம் தாழ்ந்த அரசியலால் சமரசம் செய்து கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தை, அன்றைக்குப் பாதுகாப்பதில் கே.ஆர். நாராயணன் ஆற்றிய பங்கை நாடு நினைவுகூர்கிறது.
அரசியல் சாசன சவால்களை எதிர்கொள்வதிலும், அதனை நிலைநிறுத்துவதிலும் கே.ஆர்.நாராயணன் அளவுக்கு எந்த ஒரு குடியரசுத் தலைவரும் உறுதியாகப் பங்காற்றியது இல்லை.
அரசியல் சாசனத்தை மறு ஆய்வு செய்ய அன்றைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு உத்தேசித்தபோது, அதற்கு சிவப்புக் கொடி காட்டிவிட்டு, நம்மால் அரசியல் சாசனம் தோல்வியடைந்துவிட்டதா? அல்லது அரசியல் சாசனத்தால் நாம் தோல்வியடைந்துவிட்டோமோ? என்பதை நாம் ஆராயலாம் என்று பதில் அளித்தார். அவரது அந்த நடவடிக்கை தார்மீக அடிப்படையில் அரசியலமைப்புக்கு வலுசேர்த்தது அரசியலமைப்பை மறு ஆய்வு செய்வதற்குப் பதிலாக, அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மறுபரீசிலனை செய்ய ஓர் ஆணையத்தை வாஜ்பாய் அரசு அமைத்தது.
அரசியல் சாசனம் மற்றும் அரசியல் சாசன தார்மீகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம், இக்கட்டான சூழ்நிலைகளில் அதனைப் பாதுகாக்க கே.ஆர். நாராயணன் ஆற்றிய பங்கு மக்களால் கவரப்பட்டது.
மாநிலங்களவையில் விதிகளை மீறி விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, மூத்த அரசியல்வாதிகள் பலரும் கே.ஆர்.நாராயணனை நினைவுகூர்ந்தார்கள். அவர் மட்டும் இப்போது குடியரசுத் தலைவராக இருந்திருந்தால், இந்த மசோதாவைத் திருப்பி அனுப்பியிருப்பார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அவர் ஓர் இரக்கக் குணமுள்ளவர் என்பதற்குச் சாட்சியாக நடந்த நிகழ்வும் உண்டு. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. தங்கள் சொந்த பந்தங்களை இழந்தவர்கள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்திக்க விரும்பினர். ஆனால், அவர்களைச் சந்திக்க வாஜ்பாய் மறுத்துவிட்டார். இதனையடுத்து, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனைச் சந்தித்தனர். அவர்களது வேதனையைப் பொறுமையாகக் கேட்ட அவர், ”நான் உங்களுக்குத் துணை இருப்பேன்” என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.
நம் சமுதாயத்தில் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறுகளையும், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களையும் தமது பரந்த அணுகுமுறையால் புரிந்து கொண்டவர். இந்தியாவின் விதியை மாற்றி எழுதிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் அணுகுமுறையைப் போன்றே அவரது அணுகுமுறையும் இருந்தது. மக்களின் விடுதலை, அதிகாரமளித்தல் மற்றும் முற்போக்கான சமூக மாற்றத்துக்கான உந்துதல்களை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதில் அந்த 3 தலைவர்களையே கே.ஆர்.நாராயணன் பின்பற்றினார்.
மகாத்மா காந்தியின் தார்மீகக் கொள்கையால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இந்தியத் தேசிய இயக்கம், ஜவஹர்லால் நேருவின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கை மற்றும் உலகப் பார்வை, டாக்டர் அம்பேத்கரின் சமூக சமமற்ற சமுதாயத்திற்கான போராட்டம் ஆகியவற்றைக் கவிதை நயத்தோடு கே.ஆர்.நாராயணன் விவரிப்பதுண்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நவீன இந்தியாவின் அந்த ஒப்பற்ற தலைவர்கள் பற்றிய அவருக்கு இருந்த புரிதல், அவரை நன்றாகவே செதுக்கியிருந்தது.
இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், சீர்திருத்தம், நடவடிக்கை மற்றும் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். தீர்க்கதரிசி போல இதையெல்லாம் முன்னரே அறிந்து, நலிந்த மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் சுதந்திரமான மற்றும் உலகமயமாக்கல் மூலம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்யக் கூடாது என்று எச்சரித்தார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோர் வாழத் தகுதியில்லாத நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சாதிய முறை, பற்றி எரியும் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை பெரும் வலியுடனும் தீர்க்கதரிசனத்துடனும் அணுகினார். இந்த பிரச்சினையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்க்காவிட்டால், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசியலமைப்பில் உயர் பதவிகளை வகிப்போரால், மதச்சார்பின்மை கேலிக்குரியதாவது மிகவும் துயரமானது. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் இந்திய அரசியலமைப்பைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் நெறிமுறைகளைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள், அனைத்து மதத்தினரின் நம்பிக்கையைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்று ஆவேசப்பட்டவர் கே.ஆர். நாராயணன்.
இது குறித்து அவர் கூறும்போது, ” இந்தியாவில் உள்ள பல மதங்கள், சமுதாய மதச்சார்பின்மையால் மட்டுமே மக்கள் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு வழி ஏற்படுத்த முடியும்” என்றார்.
எனவே, சமூக நவீனத்துவத்தின் நேர்மறை சிந்தனை,மதச்சார்பின்மை மற்றும் மதம், சமூகம், அரசியல் கலாச்சாரம் மற்றும் தினசரி வாழ்க்கை நடைமுறையின் விரிவான நிலைகளை அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இன்றைக்குப் பெரும்பான்மை, இந்துத்துவா மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களால் சமூக நவீனத்துவ நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் மரபு வழி அரசியலமைப்பையும், அரசியல் ஒழுக்கத்தையும், பன்முக மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளையும் உறுதிப்படுத்துவதே, 21 ஆம் நூற்றாண்டில் நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வாக அமையும்.
(Courtesy : National Herald )