வெற்றிக் கனியை பறிக்கும் நோக்கில் ராகுல் காந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். அதுவும், நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார் என, மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி குறித்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவின் மதிப்பீட்டில் தமக்கு உடன்பாடு இல்லை என, மகாத்மா காந்தியின் பேரனும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து என்.டி.டி.வி டாட்காமில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மாற்றாக இருக்கமுடியாது என்று குஹா தெரிவித்துள்ளார். அதற்கான அவர் 5 காரணங்களை முன் வைத்துள்ளார்.
முதலாவதாக, மோசமான கோஷங்களுடன் ராகுல் வருகிறார். அடுத்து, ராகுலின் பேச்சுத் திறைமை குறைவாக உள்ளது. குறிப்பாக இந்தியில் அவரது பேச்சுத் திறமையை கூறலாம் என்கிறார். மூன்றாவது, அரசுத் துறையையோ அல்லது தனியார் நிறுவனத்தையோ நிர்வகித்த அனுபவம் ராகுல் காந்திக்கு இல்லை என்கிறார். நான்காவதாக, சகிப்புத் தன்மையும், உறுதித் தன்மையும் ராகுலிடம் இல்லை, இறுதியாக, ராகுல் அரசியல் வாரிசு என்கிறார். ராகுலை வாரிசு அரசியல் என்று கூறுவதை மக்களே ஏற்கவில்லை.
இந்துத்வாவுக்கு எதிரான போர் குறித்த ஆலோசனை அவரது கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு தேர்தல் விவகாரம் என்றும் குஹா குறிப்பிடுகிறார். அடுத்த தேர்தலின் போது நிலவும் சூழலைப் பொறுத்தே, வியூகம் அமையும். இப்போதே இப்படித் தான் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.
லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகளை உள்ளடக்கிய முக்கிய வழக்குகளை நீதிமன்றம் தள்ளிவைப்பதை நாம் காண்கின்றோம். எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் தயாராக இல்லை.
ஒரு பிரதமர் நாடு முழுவதும் உள்ள அரசுக்குச் சொந்தமான ஊடகங்களை ஏகபோகமாக பயன்படுத்துகிறார். ஆனால், செய்தியாளரை எதிர்கொள்ள மறுக்கிறார். தனியார் தொலைக்காட்சிகளோ, நச்சுக் காற்றை குறிப்பிட்ட சமுதாயத்தினரை நோக்கி திருப்பி விடுகின்றன. அறிவார்ந்த சுதந்திரத்தில் சமரசம் செய்யும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மாணவர்களை காவல் துறையினரின் தடிகள் அடிக்கடி பதம் பார்க்கின்றன.
எதிர்க்கட்சிகள் பணத்துக்கு எங்கே போவார்கள்? தொலைக்காட்சி விவாதங்கள் நியாயமாக நடத்த அனுமதிக்கப்படுகிறதா? எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. வன்முறையை தூண்டியதாகவும், தேசத் துரோக குற்றச்சாட்டுகளுடன் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது ஏன்?
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் மேடைப் பேச்சுகளை விட தைரியம் முக்கியமானதாகும். அந்த தைரியமும் திறமையும் ராகுல் காந்திக்கு போதுமான அளவுக்கு உண்டு என்பதற்கு சான்றுகள் உள்ளன.
அரசியல் மற்றும் வரலாற்று ஆளுமையுள்ள அறிஞரான குஹா, ‘சூட், பூட்ஸ் அரசாங்கம்’ என்று ராகுல் பயன்படுத்திய அழகான முழக்கத்தை, தமது பகுப்பாய்வில் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், ‘சவுக்கிதார் சோர் ஹை’ (போலீஸே திருடன்) என்ற முழக்கம் வெற்றிகரமான முழக்கமாக அமையவில்லை. மேலும் அவரது ஆதரவாளர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், மோடி என்ற கட்டமைக்கப்பட்ட பெரும் தோற்றத்தை வீழ்த்துவதில் ராகுல் காந்தி தேவையான பங்கேற்பை செய்துள்ளார்.
ஓர் அரசியல்வாதியை வீழ்த்துவது தவிர்க்க முடியாதது மற்றும் ஜனநாயகத்துக்கு அது அவசியமாகக்கூட இருக்கலாம். இன்றைய இந்தியாவைப் பொறுத்தவரை நான் கூறும் ஆலோசனை என்னவென்றால், விமர்சனம் செய்வோர் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்பதுதான்.
ஜனநாயகம், கருத்து வேறுபாடு, மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் ஆகியவை அபரிதமான வளங்களைக் கொண்ட சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த மதிப்புகளை பாதுகாத்து மோதலை நேர்மையான முறையில் சந்திக்க வேண்டும். அந்த வகையில், உண்மையான போராட்டம் நடத்துபவராக காங்கிரஸிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ ராகுல் காந்தி மட்டுமே இருகிறார். அவர் நிச்சயம் போராடுவார் என்று தெரிகிறது. அதற்காக நான் அவரை நேசிக்கின்றேன். மேலும் அவர் தொடர்ந்து மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் போராடி வருகிறார். அதற்காக அவரைப் போற்றுகிறேன்.
இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக பணியாற்றும் எவருமே எனக்கு வேண்டியவர்தான். அவர் காங்கிரஸிலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ, திரிணாமுல் காங்கிரஸிலோ, திமுகவிலோ அல்லது பா.ஜ.க-விலோ இருந்தாலும் எனக்கு கவலையில்லை. அவர் பணக்காரராக இருக்கட்டும், அல்லது ஏழையாக இருக்கட்டும். அவர் தலித்தாக இருக்கட்டும் அல்லது பிரமாணர்களாக அல்லது இதர பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கட்டும். இந்து சீக்கியர், முஸ்லீம், கிருத்துவர், நாத்திகவாதி எதுவாக இருந்தாலும் கவலையில்லை.
அரசியல் வாரிசோ அல்லது வாரிசு அல்லாதவரோ யாராக இருந்தாலும் பிரச்சினையில்லை. இந்தியாவில் அதிகபட்ச சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் வேராக இருப்பேன். இவர்களின் பரஸ்பர நல்லெண்ணத்துக்காக நான் பிரார்த்திப்பேன்.
நேரம் வரும்போது, மக்களின் உந்துதலின் பேரில் அரசியல் ஒற்றுமையின் கட்டாயத்தின்பேரில் ஆதிக்கத்துக்கு எதிரான தேர்தல் கூட்டணியை வழிநடத்த சரியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
டெஸ்ட் போட்டிகள் நடப்பதற்கான நாட்கள் தொலைவில் உள்ளன. ஆனால், முக்கிய போட்டிகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. இன்று விளையாடுவது கடினமான ஆடுகளம். ஒளி மந்தமாக உள்ளது. காற்று மற்றும் மழை இருக்கிறது. நடுவர்கள் பாரபட்சமற்றவர்களா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், வெற்றிக் கனியை பறிக்கும் நோக்கில் ராகுல் காந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். அதுவும், நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார்.