முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா ராஜிவ் காந்தியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் அனைவருமே, அவரது புன்சிரிப்பாலும் நாகரீகமான அணுகுமுறையாலும் கவரப்படுவார்கள். ராஜிவ் காந்தியின் பதினோரு ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை ஆய்வு செய்தால், அதை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் முதல் கட்டம்:
1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, (சஞ்சய் காந்தி இறந்ததால் காலியான) அமேதி தொகுதிக்கான மக்களவை வேட்பாளராக 1981ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது வரையிலான நாட்களை, ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் காலகட்டமாகக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில், ராஜிவ் காந்தி ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டிருந்தார். அதாவது, 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியல் ரீதியாகச் சில உதவிகளை ராஜிவ் காந்தி செய்யத் தொடங்கினார். அத்துடன், 1981ஆம் ஆண்டு மே மாதம்வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாகவும் பணியாற்றி வந்தார்.
இரண்டாவது கட்டம்:
1981ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலத்தை இரண்டாவது காலகட்டமாகக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில்தான், அரசியல் ஈடுபாட்டை ராஜிவ் காந்தி அதிகமாக வளர்த்துக்கொண்டார் எனலாம். அத்துடன், அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்தார். அதுமட்டுமன்றி, தமது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பலரை அரசியல் களத்துக்குள் அழைத்து வந்தார்.
மூன்றாவது கட்டம்:
1984 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 1989ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலத்தை ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மூன்றாவது காலகட்டமாகக் குறிப்பிடலாம். இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் பிரதமராகவும், உலக அளவில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் அவர் உயர்ந்தார்.
நான்காவது கட்டம்!
1989ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கம்முதல் 1991ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தை ராஜிவ் காந்தியின் அரசியல் வாழ்வில் நான்காவதாக அமைந்த இறுதிக் கட்டமாகும். 1984-85ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைக்கே ராஜிவ் காந்தி மாறினார் எனலாம். ராஜிவ் காந்தியைப் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் மிக எளிதாக அணுக முடிந்தது. அதற்குமுன் கடுமையாக இருந்த சில விஷயங்கள், மென்மையானதாக மாறின. போபர்ஸ் விவகாரம் படிப்படியாக மங்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் மரியாதை மிக்க, நாகரீகமான, அன்பான ராஜிவ் காந்தி தலைதூக்கத் தொடங்கினார்.
அனுபவங்களின் காரணமாக ராஜிவுக்கு அரசியல் முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. இதனால், 1984-85ஆம் ஆண்டுகளில் ராஜிவ் காந்தியை இந்தியா அரவணைத்தபோது, எப்படி இருந்தாரோ, அதேபோன்று அன்பானவராகவும், உயர்ந்தவராகவும் அவர் மாறியிருந்தார்.
1991ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது ராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், அது அவரது அரசியல் வாழ்க்கையின் ஐந்தாவது கட்டமாக இருந்திருக்கும். அப்போது ராஜிவ் காந்தி இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றிருந்திருப்பார். 1984-89ஆம் ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படாமல் விடுபட்டிருந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றியிருப்பார். அவரது கனவை நிறைவேற்ற முடியாமல் சதிகாரர்கள் பயங்கரவாத செயல் மூலம் நம்மிடமிருந்து அவரை பறித்து விட்டார்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி போன்ற தலைவர்கள் மிகக்குறுகிய காலமே அரசியலில் இருந்தாலும், தங்களுக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்தனர். எனினும், இந்திய அரசியல் வரலாற்றில், ஓர் அரசியல் தலைவர் முத்திரை பதிக்க எடுத்துக்கொண்ட காலம் பதினொரு ஆண்டுகள் என்பது மிகவும் குறுகிய காலம்தான்!
ராஜிவ் காந்தி, ஐந்து ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராகவும், ஒன்றரை ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலங்களில், இந்தியாவுக்கு ராஜிவ் ஆற்றிய மிகச்சிறந்த பணி, பங்களிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தையும் அரசியல் சிந்தனையையும் நவினமாக்கியது எனலாம்!
ராஜிவ் காந்தியின் அரசியல் பயணத்தில் பல முட்டுக்கட்டைகள் இருந்ததால், இந்திய அரசியலில் வெற்றியும் தோல்வியும் கலந்தே இருந்தன. ராஜிவ் காந்தியே இந்திய அரசியலில் பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டுவந்தார். முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்த சவுத் பிளாக்கில் புத்துணர்வை ஏற்படுத்திப் பொருளாதாரத் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியது, இந்தியாவை முற்போக்கு எண்ணம் கொண்ட நாடாக மாற்றத் திட்டமிட்டது ஆகியவை ராஜிவ் காந்தியின் சாதனைகளாகும்.
பொருளாதாரத்தில் புதுமைகளைப் புகுத்திய ராஜிவ் காந்தி, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்தார். பங்குச்சந்தை பூத்துக் குலுங்கியது. ஐந்தாண்டுகளில் பங்குச்சந்தையின் விற்பனைக் குறியீடு 400 சதவிகிதம் அதிகரித்தது. இந்தியப் பொருள்கள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேசமயம், இந்தியாவின் எதிர்காலம் குறித்து ராஜிவ் காந்தி கண்ட கனவுகள் இன்னும் கனவுகளாகவே உள்ளன.
இந்திரா காந்தி காலத்திய வறட்சியும், பனிப்போரும் நிறைந்த இந்தியாவிற்கும் இப்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். நிறைவாகக் கூறுவதானால், அரசியலை முழுமையாக வெறுத்த ராஜிவ் காந்தி, விதியின் சதி காரணமாக அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, அவரது செயலாளராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் எழுதிய ‘இந்திராவுடனான எனது ஆண்டுகள்” என்ற நூலில், இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் காந்தி பிரதமராவதை எண்ணி அச்சமடைந்ததையும், இந்த அச்சம், சோனியாவை ராஜிவ் காந்தியுடனான கடைசி ஆறரை ஆண்டுகால வாழ்க்கையில் ஆட்டிப்படைத்தது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று பிற்பகலில், ராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றி பி.சி.அலெக்சாண்டர் தமது நூலில், “ராஜிவ் காந்தியைச் சந்திப்பதற்காக நான் அவரை நெருங்கிய போது, நான் கண்ட காட்சி மிகவும் உருக்கமானது. ஓர் அறையின் மூலையில், சோனியாவின் இரு கைகளையும் ராஜிவ் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தார்; சோனியா, ராஜிவின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தார். சோனியாவின் கண்களிலிருந்து கசிந்த கண்ணீ ர் அவரது கன்னத்தில் வழிந்தது. பிரதமர் பொறுப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்று ராஜிவ் காந்தியிடம் சோனியா கெஞ்சிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட ராஜிவ் காந்தி, சோனியாவின் நெற்றியில் முத்தமிட்டு, மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றே தீரவேண்டும் என்றும், இது தமது கடமை என்றும் கூறிச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார். அப்போது, அவசரமாகப் பேச நான் துடித்துக்கொண்டிருப்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.
நேரம் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தது. ராஜிவ் காந்தியின் முடிவைத் தெரிந்து கொண்டபின், செய்து முடிக்கப் படவேண்டிய பணிகள் நூற்றுக்கும் மேல் இருந்தன. எனவே, ராஜிவ் காந்தியைச் சோனியா விடமிருந்து பிரித்து அழைத்துவர முடிவு செய்தேன். ராஜிவின் காதருகே சென்று, மிகவும் அவசரமான சில விஷயங்களைப் பேசவேண்டும் என்றும், அதற்காக இனிமேலும் காத்திருக்க முடியாது என்றும் கூறினேன்.
அதன்பின், சோனியாவிடமிருந்து திரும்பிய ராஜிவ், ‘பிரதமர் பதவியேற்க நீ ஒப்புதல் தந்துவிட்டதாகக் கருதுகிறேன்’ என்பது போல் சோனியாவிடம் சைகை காட்டிவிட்டு என்னுடன் புறப்பட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியலில் இல்லாவிட்டாலும், மற்ற தனிப்பட்ட விஷயங்களில் ராஜிவ் குறித்த முடிவுகளை இறுதியில் தீர்மானித்தவர் சோனியாதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை . அதேநேரத்தில், ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அரசு விவகாரங்களில் சோனியா தலையிட்டார் என்பதெல்லாம், ராஜிவை நெருங்க முடியாத அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் பரப்பிவிட்ட கட்டுக்கதைகள்!
சோனியா காந்தியைப் பொருத்தவரை, கூச்சத்தன்மை நிறைந்த, தம் கணவர், இரு குழந்தைகள் மீது அளவற்ற அக்கறை கொண்ட பெண்மணி. அவர் மிகவும் மென்மையானவர்;
1987-89இல் எதிர்க்கட்சிகளால் போபர்ஸ் சர்ச்சை கிளப்பப்பட்டபோது, ராஜிவ் காந்தியின் ஆட்சி நிர்வாக விஷயங்களில் சோனியா தலையிட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை ஆகும். ராஜிவ் காந்தியின் அமேதி தொகுதியைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, சோனியாவுக்கு அப்போது அரசியலில் ஆர்வமே கிடையாது. ராஜிவுடனும் சோனியாவுடனும் நெருக்கமாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு. சமூக அரங்கில் முன்னேறத் துடிப்பவர்களுக்கோ , அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் சுற்றிவந்த அரசியல் துதிபாடிகளுக்கோ சோனியா ஒருபோதும் நேரம் ஒதுக்கியதில்லை .
உண்மையான சோனியாவை அமேதி தொகுதியில்தான் காணமுடியும். அமேதி தொகுதி மக்களிடையே மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவராகச் சோனியா செயல்பட்டார். ராஜிவ் காந்தி காலத்தில், அவரது அமேதி தொகுதிக்குச் சென்ற சோனியாவும் பிரியங்காவும் அங்குள்ள ஏழை மக்களுடனும் குழந்தைகளுடனும் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள், அவர்களின் குறைகளைக் கேட்பார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்வார்கள்.
ராஜிவ் காந்தி காலத்தில், அரசியல் மற்றும் அரசு விவகாரங்களில் சோனியா தலையிட ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒருமுறைகூட அவர் குறுக்கிட்டதில்லை. ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டி கோரிக்கை விடுத்த போதும் அதை ஏற்க மறுத்துவிட்டது. அவரது அரசியல் ஆர்வமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
சோனியா காந்தியைப் பொருத்தவரை, பிரதமரின் மனைவியாக இருப்பதைவிட மாதம் ரூ.8,000 சம்பளம் வாங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியின் மனைவியாக இருப்பதையே விரும்பினார்.
ராஜிவ் காந்தி, சோனியாவை முதன்முதலில் சந்தித்துக் காதல் கொண்டது. கேம்பிரிட்ஜ் நகரில்தான். அப்போது ராஜிவ் அங்குத் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். ராஜிவுக்கும் சோனியாவுக்கு இடையிலான உறவு பற்றி, கிரேக்க உணவு விடுதியின் உரிமையாளர் சார்லஸ் அந்தோனி குறிப்பிடும்போது, “ராஜிவ் காந்தி, சோனியா போன்று ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்ததை போல் வேறு எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. காதல் புத்தங்களில் வருவதைப் போல் அவர்கள் இருந்தார்கள்” என்று கூறியுள்ளார்.
ராஜிவ் – சோனியாவின் காதல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இறுதிவரை ராஜிவும் சோனியாவும் பிரியவே இல்லை. வெளியில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, இருவரும் கைகோர்த்துக் கொள்வது வழக்கம். அதுமட்டுமன்றி, “நான் பார்த்ததிலேயே சோனியாதான் மிகவும் அழகான பெண்” என்று வெளிப்படையாகவே பாராட்டுவது ராஜிவின் வழக்கம்.
ராஜிவ் – சோனியா இவர்களின் அன்பு, பாசம் அப்படியே அவர்களின் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டன! ராகுலும் பிரியங்காவும் அன்பும் பாசமும் நிறைந்த குழந்தைகளாகத் திகழ்கின்றனர்.
இவர்களுள் ராகுல் காந்தி, தந்தையின் அமைதி உள்ளிட்ட குணங்களைப் பெற்றிருந்தார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். எனினும், அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, 19வயது பெண்ணாக இருந்த பிரியங்காதான் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் அரசியலில் ஈடுபட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இப்போது துணைத்தலைவராகவும் உயர்ந்துள்ளார்.
ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ‘சோனியா தமது குழந்தைகளின் நலன்கருதி, அவர்களை அழைத்துக்கொண்டு இத்தாலிக்குச் சென்றுவிடுவார்’ என்று பலரும் பேசினார்கள். ஆனால், சோனியாவை நன்றாக அறிந்தவர்கள் அந்தக் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்தனர்.
‘சோனியாவைப் பொருத்தவரை, இப்போதைக்கு அவர் இந்தியர். வேறெந்த நாட்டிலும் அவரால் வாழ இயலாது. சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்காலம் இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது’ என்று அவர்கள் கூறினார்கள்.
பல வழிகளிலும் ராஜிவ் காந்திக்குப் பக்கபலமாக விளங்கியவர் சோனியா. எப்போதாவதுதான் செய்தியாளர்களிடம் அவர் பேசுவார். சோனியாவைப் பொருத்தவரை, தமது கணவரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் ஆவேசம் காட்டக்கூடியவர்.
சோனியாவின் தேசப்பற்று குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது, “இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்தியர்களைவிட சோனியா மிகச்சிறந்த இந்தியர்” என்று குறிப்பிடுவார்கள்.
சோனியா காந்தி தெளிவான உச்சரிப்புடன் ஹிந்தி பேசுவார். இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலையை, வெளிநாட்டவர் கட்டும் போது காணப்படும் வழக்கமான குறைகளின்றிச் சிறப்பாகக் கட்டுவார். சோனியாவின் எளிமையும் சாதாரணத் தன்மையும் பலரையும் கவரும்.
ராஜிவ் காந்தி அரசியலில் ஈடுபடுவது பற்றித் தொடக்கத்தில் சோனியா அதிருப்தி தெரிவித்திருந்தாலும், அமேதி தொகுதியில் ராஜிவ் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சரம் செய்தார். ராஜிவ் பங்கேற்ற பெரிய அரசியல் கூட்டங்கள் அனைத்திலும் சோனியாவும் கலந்து கொண்டார். அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தி வெற்றி பெற்ற பிறகு, அந்தத் தொகுதிக்குச் சோனியா அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்தார். ஆனால், ராஜிவைப்போலவே சோனியாவும் கூச்சசுபாவம் உடையவர் என்பதால், யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, வார இறுதி நாட்களை ராஜிவ் காந்தி குடும்பத்தினருடன் கழிப்பதுதான் வழக்கம். அமேதி தொகுதி மக்களவை உறுப்பினரான பிறகும், குடும்பத்தினருடன் ராஜிவ் அதிக நேரத்தைச் செலவிட்டார். ஆனால், அவர் பிரதமரான பிறகு, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது அடியோடு நின்றுவிட்டது. பிரதமர் என்ற வகையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும், கட்சித் தலைவர், பிரதமர் என்ற இரட்டைப் பணிகளைச் செய்யவேண்டி யிருந்ததாலும் அவரால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை .
உலகத் தலைவர்களாலும் எழுத்தாளர்களாலும் போற்றிப் புகழப்பட்ட அற்புதத் தலைவர் ராஜிவ்! அவர்மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மாபெரும் தலைவராகப் பிரகாசித்து, நாட்டை வழிநடத்தியிருப்பார். ஆனால், பயங்கரவாதத்திற்கு அந்த மாபெரும் தலைவர் பலியாக்கப்பட்டதுதான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்றக் கொடுமை! இந்த உணர்வுகளோடு அவரது பிறந்தநாளை இந்திய மக்கள் நினைவுகூர்வார்கள்.
ராஜிவ் கண்ட கனவை நனவாக்க, அன்னை சோனியா காந்தியும் இளந்தலைவர் ராகுல் காந்தியும் அவரது லட்சியப் பதாகையை இன்றைக்கு உயர்த்திப் பிடித்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கம்பீரமாக அழைத்துச் செல்கிறார்கள். அந்த வகையில், அமரர் ராஜிவின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது.