Translated article by Praveen Davar published in National Herald on 21 May 2021.
Rajiv Gandhi (1944-1991): The youngest PM of India
40 வயதில் இளம் பிரதமரான ராஜிவ் காந்தி அவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1991 மே 21 ஆம் தேதி 47 ஆவது வயதில் இன்னுயிர் ஈந்தார்…
படுகொலை செய்யப்பட்டபோது, ராஜிவ் காந்தி பிரதமராக இல்லை. எனினும், புதுடெல்லியில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் இது குறித்து எழுதும்போது, ” ராஜிவ் காந்தியின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து 63 நாடுகளின் உலகத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அந்த அளவுக்கு 5 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் உலகத் தலைவராக ராஜிவ் காந்தி உருவெடுத்தார். பிரதமராக இருந்த காலத்தில் நாட்டை ஒன்றுபட்ட பாதையில் கொண்டு செல்லவும், நவீன இந்தியாவை உருவாக்கவும் ராஜிவ் காந்தி பாடுபட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவரும், ராஜிவின் தாய்வழி மாமாவுமான பி.கே.நேரு, தன் இளம் வயதில் பெரும் பகுதியை அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்தில் செலவிட்டவர். ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிட்டு, ராஜிவ் காந்தியை இவ்வாறு எழுதுகிறார்…
” நேருவையும், ராஜிவையும் அறிந்த எவருக்கும், தன் தாத்தாவையே நினைவுபடுத்துவார். அதே கம்பீரத் தோற்றம், வசீகரம், மரியாதை, கருத்தியல், அருமையான நடத்தை மற்றும் கருணையில் அப்படியே நேரு போலவே ராஜிவ் காந்தியும் இருந்தார். நேருவைப் போலவே இந்தியாவின் அன்புக்குரியவராகவும் ராஜிவ் திகழ்ந்தார்.
இதெல்லாம் வெளித்தோற்றம். ஆனால், நேருவின் மரபணுக்கள் அப்படியே ராஜிவிடம் இருந்தன. நாட்டுப்பற்று, சுயநலமற்ற போக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடத்தை ஆகியவை அப்படியே அவரது தாத்தா நேருவை பிரதிபலித்தன. அவரது தாத்தா எப்படி பூஜிக்கப்பட்டாரோ, அதேபோல் ராஜிவும் பூஜிக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக (1984-89) ராஜிவ் காந்தி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அந்த சாதனைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாக இருந்தன. எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டனர். வலுவான மதச்சார்பற்ற, சகிப்புத்தன்மையுடைய மற்றும் இரக்கமுள்ள மனிதராக ராஜிவ் திகழ்ந்ததால், வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்தது.
துரதிஷ்டவசமாக, இந்த செல்வாக்கு இன்றைக்கு தகர்க்கப்பட்டுவிட்டது.
ராஜிவ் காந்திக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகவும், அதன்பிறகு பிரதமராகவும் ஆன பி.வி. நரசிம்மராவ், தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் என ராஜிவ் காந்தியை பாராட்டினார். தொடர்ந்து அவர் கூறும்போது, ” புறநிலை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை ராஜிவ் காந்தியின் மிகப் பெரிய குணங்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். எந்தவொரு விஷயத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கும் திறன் அவரிடம் இருந்தது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, அவர் கவுரவம் பார்த்தது கிடையாது. அவரைப் பொறுத்தவரை இந்தியா எப்போதும் முதலிடம் பிடித்தது. உலக அமைதிக்கான முன்னணி இயக்கமாக அவர் இந்தியாவை காட்சிப்படுத்தினார். இது, இந்தியாவை தொழில்நுடப் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தியது” என்றார்.
4 பிரதமர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த முதுபெரும் தலைவர் சி.சுப்பிரமணியன் கூறும்போது, ” திறந்தவெளி பொருளாதார போட்டி ஏற்பட்டுள்ள சூழலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நவீன முறைகளை ஏற்றால் மட்டுமே இந்தியாவுக்கு எதிர்காலம் உண்டு என்பதில் ராஜிவ் காந்தி நம்பிக்கையாடு இருந்தார். மக்களின் நலன்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் சரியான முடிவுகளைப் பெறுவதற்கும் தொடங்கிய தொழில்நுட்ப பணிகள், அவர் மூளையில் உதித்த துணிச்சலான கண்டுபிடிப்புகள். தனது தாத்தா கற்பனை செய்ததைப் போலவே, நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் விஞ்ஞான அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஜமன்லால் பஜாஜின் பேரன் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ” சுதந்திர இந்தியாவில் நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் நபராக நேரு இருந்தார். இரண்டாவது நபராக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். 1991 ஜூலை முதல் அடுத்து வந்த காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் ராஜிவ் காந்தி விரும்பிய மற்றும் திட்டமிட்டதின் நேரடி விளைவு என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொழில்நுட்பம் மற்றும் வறுமை ஒழிப்புக்கு இடையேயான உறவை, பிரதமர் என்ற நிலையில் ராஜிவ் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். நாடுகளுக்கிடையேயோ அல்லது நாட்டுக்குள்ளேயோ வறுமை இடைவெளி இருந்தால், நிச்சயம் தொழில்நுட்ப இடைவெளி இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி மூலமே நம் மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் இந்தியா வளர்ச்சி கண்டது. வறுமையை ஒழிப்பதே தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
முன்னாள் ராணுவ தளபதியாகவும், ஜம்மு காஷ்மீர் ஆளுநராகவும் பணியாற்றிய ஜெனரல் கிருஷ்ணா ராவ் கூறும்போது, ” நாட்டின் ஆணிவேராக இருக்கும் பிரச்சினைகளான வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் பின்தங்கிய நிலையை வலுவாக எதிர்கொள்ளாவிட்டால், அமைதியையோ அல்லது வளர்ச்சியையோ காண முடியாது என்பதை ராஜிவ் காந்தி தெளிவாக அறிந்திருந்தார்” என்கிறார்.
பொருளாதார நிபுணர் ஏ.எம். குஷ்ரோ குறிப்பிடும்போது, ” ராஜிவ் காந்தி ஆட்சிக் காலத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களான ஐ.ஆர்.டி.பி, என்.ஆர்.இ.பி மற்றும் நேரு வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட ஆகியவை வலுப்பெற்றிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு, கிராம பஞ்சாயத்துக்கு புதிய பொறுப்புகளும் கூடுதல் நிதி ஆதாரத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினார். பஞ்சாயத்து ராஜ் சட்டம் தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி புரட்சியில் ராஜிவ் காந்தி சிறந்து விளங்கினார். இதன்மூலம் உள்நாட்டில் சாதனைகளைப் படைத்தார் ” என்றார்.
ராஜிவ் அமைச்சரவையில் அமைச்சராகவும், பின்னர் மக்களவை சபாநாயகராகவும் இருந்த சிவ்ராஜ் பாட்டீல் எழுதும்போது, ” ஒட்டுமொத்த வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி, கணினி மயமாக்கல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் வளர்ந்த பல நாடுகளை விட இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்த ராஜிவ் காந்திக்கு, இன்றைக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச உறவுகள் போன்றவற்றில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் டி.என். கவுல் கூறும்போது, ”வெளியுறவுக் கொள்கையில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. ரொனால்டு ரீகன், மிக்கைல் கோர்பச்சேவ், மார்க்ரெட் தாட்சர், ராபர்ட் முகாபே, ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க மற்றும் பல நாடுகளின் தலைவர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட முறையிலிருந்த நட்பு சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சீனா, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுடனான உறவுகளை மேம்படுத்த அவரால் முடிந்தது. முழுமையான அணு ஆயுதக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையில், ராஜிவ் காந்தியின் உரை முக்கியமானது. அணுசக்தி படுகொலை மூலம் சுய அழிவு அச்சுறுத்தலிலிருந்து உலகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நடைமுறை, எதார்த்தமான போக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
பா.ஜ.க. எம்.பி.யாகவும், பின்னர் வாஜ்பாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங் எழுதும்போது, ” மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எளிதாகப் பேசக்கூடிய ஒருவரை உலகத் தலைவர்கள் பெற்றிருந்தார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் நினைவுகளும் மரபுகளும் ராஜிவ் காந்தி மூலம் உயிர்ப்புடன் இருந்தன.
ராஜிவ் காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த குர்ஷித் ஆலம் கான் தமது இரங்கல் செய்தியில், ” நவீனம், ஜனநாயகம் மற்றும் உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமாக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். ஒருவருடைய தேசப்பற்றை அவர் சார்ந்திருக்கும் மதத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ராஜிவ் நம்பினார். அழிவு சக்திகளும், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளும் நாட்டில் தோன்றும் போதெல்லாம், அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தார். தன் கொள்கையில் உறுதியுடன் இருக்க, எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறுதியில், அவர் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தார்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். பல விசித்திரங்கள் கடவுளால் அரங்கேறிக் கொண்டிருப்பது உண்மைதான்.
பி.வி.நரசிம்ம ராவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாண் தமது இரங்கல் செய்தியில், ”பல பிறந்த நாட்களை கொண்டாட வேண்டிய இதுபோன்ற மனிதனுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்துவது எங்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை” என, தன் வலியை வரிகளால் வெளிப்படுத்தினார்.
கட்டுரையாளர்: பிரவீன் தபார். ( முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். தற்போது அரசியல் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் இருக்கிறார்.)
எந்த ஒரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.