புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை:
புதுச்சேரிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான கலாச்சாரமும் உண்டு. இந்த நாட்டில் பல வேறுபட்ட கலாச்சாரங்களும், மொழிகளும் மற்றும் பாரம்பரியங்களும் உள்ளன. இந்த வேறுபட்ட கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்கள் நம் நாட்டை மேலும் பலப்படுத்தவும் தனித்துவமாக்கவும் செய்கின்றன என்பது தான் உண்மை. பல நாடுகளில் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே மதம் உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே பல மொழிகள், பல வரலாறுகள், பல பாரம்பரியங்கள் உள்ளன. ஒரு வெளிநாட்டினரிடம் இந்தியாவின் பலம் என்னவென்று கேட்டால். ” உங்களது பல மொழிகளும், பாரம்பரியங்களும், கொள்கைகளும்,அமைதியாக, மதநல்லிணக்கத்தோடு, நேசத்துடன் வாழ்வதும் தான் பலம்” என்பார். அதேபோன்று காங்கிரஸில் நம்மைப் பொறுத்தவரை, ஒரு மொழியை எத்தனை பேர் பேசுகிறார்கள் என்பதோ, எத்தனை பேர் தங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதோ ஒரு விஷயம் இல்லை. புதுச்சேரி சிறியதாக இருக்கலாம், ஆனால், முக்கியத்துவத்தில் நாட்டிலேயே பெரிய மாநிலம். அந்த காரணத்தால் தான் நாம் அவ்வாறு சிந்திக்கிறோம். இந்தியாவில் உள்ள வேறுபட்ட கலாச்சாரங்கள் தான் இந்த நாட்டை அற்புதமாக மாற்றுகின்றன என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.
அதனால், இன்றைக்கு உங்களுக்கு என் முதல் செய்தி என்னவென்றால், என்ன நடக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. ஆனால், உங்கள் பாரம்பரியம், உங்கள் கலாச்சாரம், உங்கள் மொழி மற்றும் உங்கள் தனித்துவமான வரலாறு ஆகியவற்றை நாங்கள் பாதுகாப்போம். புதுச்சேரி மக்களை நாங்கள் நேசிப்பதால், அவற்றை நாங்கள் பாதுகாப்போம். இந்திய மக்களை நாங்கள் நேசிப்பதாலும் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். அதனால், புதுச்சேரி இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், இந்தியாவில் தான் புதுச்சேரி இருக்கிறது என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும். எதுவாக இருந்தாலும், அது உறவின் அடிப்படையிலான மரியாதையாகும். ஏனென்றால், நாம் நாட்டின் ஓர் அங்கம்; அதே நாட்டின் துண்டுகள் நாம். புதுச்சேரி ஒன்றும் வேறு நாட்டுக்குச் சொந்தமானது அல்ல. இது யாருடைய சொந்த சொத்தும் அல்ல. புதுச்சேரியை தங்கள் சொந்த சொத்து என்று யாராவது நினைத்தால், அது வியப்பையே ஏற்படுத்தும். புதுச்சேரி சிறிய பகுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அழகிய நகரில் பலதரப்பட்ட மக்கள் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதோடு, இந்திய மக்களின் வேட்கையையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு தங்களுக்குக் குறிப்பிடத்தக்க எதிர்காலம் இருக்க வேண்டும் என்று விரும்பித்தான் புதுச்சேரி மக்கள் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
இந்த நாட்டின் பிரதமர் புதுச்சேரி அரசை பணியாற்ற அனுமதிக்கவில்லை. வாக்களித்த புதுச்சேரி மக்களைத் தனிப்பட்ட முறையில் பிரதமர் அவமதிக்கிறார். உங்கள் வாக்குகள் ஒரு பொருட்டே இல்லை என்பதை, துணைநிலை ஆளுநரின் வழியாக உங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. அவர் உங்கள் கனவுகளைக் கலைத்துவிட்டார், உங்கள் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டார். அதோடு, கனவுகளுக்கும், அபிலாஷைகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள். நாட்டின் மற்ற அமைப்புகளை அழிப்பது போல், துணைநிலை ஆளுநர் என்ற அமைப்பை அவர் முற்றிலும் அழித்தார்.
தங்களுக்கு என்ன நேருமோ என்று பயப்படாமல், இன்றைக்கு இந்தியர் ஒருவர் நீதித்துறையிலிருந்து நீதியைப் பெற்றுவிட முடியாது. உயிருக்குப் பயந்து கொண்டே பத்திரிக்கையாளர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. என்னைப் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களவையில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. ‘தான் பிரதமர் இல்லை, இந்த நாட்டின் மன்னர்’ என்று ஒருவர் நினைப்பது தான் இதற்குக் காரணம். புதுச்சேரி மக்களின் விருப்பத்துக்கு இந்திய பிரதமர் மதிப்பளிக்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு உரிமையான வளங்களை அவர் வழங்கவேண்டும். இவற்றில் எதையுமே பிரதமர் செய்யவில்லை. அதனால், நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது, கடைசியாக நீங்கள் வாக்களிக்கச் சென்றதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்குகளுக்கு பிரதமர் சவால் விடுகிறார். உங்கள் பாரம்பரியத்தை அவர் அவமரியாதை செய்கிறார். உங்கள் வரலாற்றை அவர் அவமரியாதை செய்கிறார். உங்கள் கடந்த காலத்தை அவர் அவமரியாதை செய்கிறார். யாராவது உங்கள் கடந்த காலத்தை அவமரியாதை செய்தால், அவர்கள் உங்கள் எதிர்காலத்தையும் அவமரியாதை செய்வார்கள்.
உங்கள் வாக்குகள் உங்கள் எதிர்காலமாக மாறவேண்டும் என்பதைத் தான் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, இது தேர்தல் போர் அல்ல, புதுச்சேரி மக்களின் வேட்கைப் போர். நீங்கள் விரும்பிய படி வாழ அனுமதிப்பதற்கான போர். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலத்தை இந்த அழகிய மண்ணில் அரங்கேற்றுவதற்கான போர்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவரா? என்று கேட்க விரும்புகிறேன். புதுச்சேரியின் பாரம்பரியத்தைப் பற்றி அவருக்குத் தெரியுமா?. எந்த அடிப்படையில் இந்த இடத்தில் செயல்பட்டார்?. புதுச்சேரி மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? எவ்வளவு தைரியம் இருந்தால், இவற்றை எல்லாம் செய்திருப்பீர்கள். ஏனென்றால், அவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், இந்தியாவையே கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், சிபிஐயை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால், அமலாக்கல் துறையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அவர்கள் மீண்டும் இங்கு வந்தால், அது புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்ட அவமானமாக இருக்கும் என்பது தான் உண்மை.
நாடு முழுவதும் இதே சக்திகள் செய்து கொண்டிருக்கும் சிறு விஷயத்தை இப்போது நான் சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரியில் செய்வதைத் தான் நாட்டின் பிற பகுதிகளுக்கும் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் வங்காளிகள் சரியில்லை என்கிறார்கள். பஞ்சாபியர்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள். அவர்களை யார் எதிர்த்து நின்றாலும், அவர்கள் குற்றவாளி, தேச விரோதி, தீவிரவாதி. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே ஒரு கொள்கை மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நரேந்திர மோடி நினைப்பதையே இந்த நாடும் நினைக்க வேண்டும். நரேந்திர மோடி என்ன சிந்திக்கிறாரோ, அதைத்தான் இந்தியாவும் சிந்திக்க வேண்டும். நரேந்திர மோடி என்ன அணிகிறாரோ, அதையே இந்தியாவும் அணிய வேண்டும். நரேந்திர மோடி என்ன சாப்பிட விரும்புகிறோரோ, அதையே இந்தியாவும் சாப்பிட வேண்டும். மன் கீ பாத்தில் நரேந்திர மோடி என்ன சொல்கிறாரோ, அதை இந்தியா கேட்க வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளில் ஒரே ஒரு விஷயம் பிரதமர் செய்திருக்கிறார் என்றால், இந்த நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டும்தான். தற்போது நாட்டில் ஏராளமான பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், இதிலும் 3 அல்லது 4 பணக்காரர்களுக்குத் தான் நரேந்திர மோடி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதிகபட்சமாக இந்த எண்ணிக்கை 5 அல்லது 6 ஆக இருக்கும். இவர்கள் விரும்புவதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன்? அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் அதை ஊடகம் சொல்லும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நரேந்திர மோடி மேற்கொண்டார். இதனால், எத்தனை பேருக்கு அது உதவியது என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன். எவ்வளவு பேர் வங்கியில் பணத்தைப் போட்டார்கள்? அந்த பணம் எங்கே போனது? அதே 5 அல்லது 6 பேரிடம் தான் இந்த பணம் போனது. பல லட்சம் கோடி ரூபாய் அவர்களுக்குக் கடனாக வழங்கப்பட்டது. இப்போது சிறு, நடுத்தர வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள், பல தொழில் முனைவோர் மற்றும் கடைக்காரர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள். ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் இருப்பீர்கள். உங்களிடம் கேட்க விரும்புகிறேன்… ஜிஎஸ்டி உங்களுக்கு உதவியதா? யாருக்கு ஜிஎஸ்டி உதவியது? அதே 5 அல்லது 6 பேருக்குத்தான்.
கொரோனாவின் போது, அந்த கொடிய நோயை எதிர்த்துப் போராட புதிய வழியை கையாண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த 21 ஆம் ஆண்டில் ‘கை தட்டுவது’ தான் நோயை எதிர்த்துப் போராடும் முறையா? உங்களை கை தட்டச் சொல்லிவிட்டு, உங்கள் பணத்தை அவரது நண்பர்களிடம் கொடுத்துவிட்டார். கொரோனாவால் தொழிலாளர்கள் எல்லாம் நகரிலிருந்து திரும்பினார்கள். அவர்களுக்கு ரயில் டிக்கெட் கூட எடுத்துத் தரவில்லை. மாறாக, இந்த நாட்டின் பெரும் தொழிலதிபர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியைத் தூக்கிக் கொடுத்தார்.
கொரோனாவின் போது, 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து நம் விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்தினார். விவசாயிகளிடமிருந்து அவர்களது எதிர்காலத்தைப் பறித்து, அவர்களது முழுப் பணத்தையும் இந்த மண்ணில் உள்ள பெரும் பணக்காரர்களிடம் கொடுப்பது தான் இவர்கள் திட்டம். இந்த 3 விவசாயச் சட்டங்களும் அமலுக்கு வரும்போது, தொழிலாளர்கள்,சிறு வியாபார மக்கள், விவசாயிகள், மக்கள், மண்டியில் பணியாற்றுவோர், காய்கறி மற்றும் பழங்களைத் தெருக்களில் விற்பவர்கள் எல்லாம் வேலை இழந்துவிடுவார்கள். இந்திய விவசாயத்தில் பலனைச் சிலர் மட்டுமே அனுபவிப்பர். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் நடுத்தர மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதேசமயம், தங்கள் விளைபொருட்களுக்கு விவசாயிகள் மிகக் குறைந்த பணத்தையே பெற முடியும். இந்த எதிர்காலம் நமக்கு வேண்டாம்.
நான் உங்களுக்குச் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், உங்கள் வாக்குகள் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். அதை நீங்கள் தின் முடிவு செய்ய வேண்டும். இந்த நாட்டில் உள்ள சில துணைநிலை ஆளுநர்களால் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய உரிமை இல்லை. புதுச்சேரி மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரைப் பொறுத்தே, புதுச்சேரியின் எதிர்காலம் அமையும். இந்த அற்புதமான மண்ணில் மோசமான எதிர்காலத்தை உருவாக்க முயல்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
இங்கே வந்து இனிய மாலைப் பொழுதில் எனது பேச்சைக் கேட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இங்கே வந்தது எனக்குப் பெருமை. உங்கள் கலாச்சாரம், உங்கள் மொழி, உங்கள் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, புதுச்சேரியைச் சேர்ந்தவரைத் தவிர, வேறு யாரும் புதுச்சேரியின் எதிர்காலத்தை முடிவு செய்ய விடமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். உங்கள் எதிர்காலத்தைத் துணைநிலை ஆளுநர் முடிவு செய்ய முடியாது.