2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட இழப்புக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, ராகுல் காந்தி 25 மே 2019 அன்று அனுப்பிய கடிதம் கடிதத்தின் தமிழாக்கம் இங்கே வெளியிடப்படுகிறது. தேசமும் காங்கிரஸ் கட்சியும் தன் இரண்டு கண்கள் என்பதை வார்த்தைகளால் வடித்துள்ளார். இன்றைய அரசியல் சூழலில் இக்கடிதத்தை அணைத்து காங்கிரஸ் நண்பர்களும் படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். பகிர வேண்டும் – ஆ. கோபண்ணா.
கடிதத்தின் முழு விவரம்:
நம் அழகிய நாட்டுக்காக ரத்தம் சிந்தியவர்கள் வளர்த்த காங்கிரஸ் கட்சியில் தலைவர் பொறுப்பில் பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுகிறேன். என் மீது பேரன்பு காட்டிய நாட்டுக்கும், என் கட்சிக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையில், 2019 தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கட்சியின் இக்கட்டான எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
கட்சியைக் கட்டமைக்கக் கடினமான முடிவுகள் தேவைப்படுகின்றன. 2019 தேர்தல் தோல்விக்குப் பலர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்கள். தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகி கட்சித் தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு, நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தால், அது நியாயமாக இருக்காது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட வேண்டும் என எனது சகாக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாராவது புதியவர் ஒருவர் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டியது அவசியம். அந்த நபரைத் தேர்வு செய்வது என்னைப் பொறுத்தவரைச் சரியல்ல. வரலாற்றுப் பின்னணி மற்றும் பாரம்பரியமிக்கது நமது கட்சி. இங்கு, ஒருவரது போராட்டத்துக்கும் கண்ணியத்துக்கும் பெரும் மதிப்பு தரப்படும். இது இந்தியாவைக் கட்டமைக்கவும் உதவும். தைரியமாகவும், அன்புடனும், நம்பிக்கையுடனும் செல்பவரைத் தலைவராக்கும் நல்ல முடிவைக் கட்சி எடுக்கும் என்று நம்புகிறேன்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே, காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கும் என் நண்பர்களிடம், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். புதிய தலைவரைத் தேர்வு செய்ய மூத்த தலைவர்களைக் கேட்டுக் கொள்வதோடு, அது தொடர்பான நடவடிக்கைக்கு என் முழு ஆதரவும் உண்டு என்பதையும் தெரிவித்துவிட்டேன்.
அரசியல் அதிகாரத்துக்காக நான் சண்டையிட்டதில்லை. பாஜக மீது வெறுப்போ அல்லது கோபமோ இல்லை. ஆனால், என் உடல்களில் உள்ள செல்கள் எல்லாம் இந்தியாவின் கொள்கையின்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அவர்களுடன் நேரடியாக முரண்பாடுகள் இருந்தாலும், இந்தியாவின் கொள்கைக்கு ஆபத்து வரும்போது, அதனைத் தடுக்க வேண்டியுள்ளது. இது ஒன்றும் புதிய யுத்தம் கிடையாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த யுத்தம் நம் மண்ணில் நடப்பதுதான். அவர்கள் கருத்து வேறுபாடுகளோடு பார்க்கும்போது, நான் ஒற்றுமையைப் பார்க்கிறேன். அவர்கள் வெறுப்பாகப் பார்க்கும்போது, நான் அன்பாகப் பார்க்கிறேன். அவர்கள் பயப்படுகிறார்கள், நான் தழுவிக் கொள்கிறேன்.
இதற்கு ஈடான இந்தியக் கொள்கை லட்சோபலட்ச என் அன்புக்குரிய இந்தியக் குடிமக்களிடம் உள்ளது. இது இந்தியாவின் கொள்கை என்பதால் தான் நாங்கள் அரணாக நிற்கிறோம்.
நமது நாட்டின் மீதும், நமது அரசியல் சாசனம் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள், நாட்டின் கட்டமைப்பையே அழிக்கிறது. ஒன்று அதைச் சரி செய்ய வேண்டும் அல்லது அதற்காகப் போராடுபவர்கள் பின்னே நான் நிற்பதைத் தவிர வேறு வழி இல்லை. நான் காங்கிரஸ் கட்சியின் விசுவாச படைவீரன். இந்தியாவின் மகனாக என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். என் உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, பாரதத் தாய்க்குப் பணிவிடை செய்யவும், அவளைக் காப்பதையும் தொடர்ந்து செய்வேன்.
தேர்தலில் வலுவாகவும் கண்ணியத்துடனும் மோதினோம். நம் பிரச்சாரம் சகோதரத்துவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும், இந்திய மக்கள், மதங்கள் மற்றும் அனைத்து வகுப்பினருக்கும் மரியாதை அளிக்கும் வகையிலும் இருந்தது. பிரதமர், ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்கள் கைப்பற்றியுள்ள அனைத்து அரசு அமைப்புகளையும் எதிர்த்து நான் தனிப்பட்ட முறையில் போராடினேன். என் தேசத்தை நேசிப்பதால் போராடினேன். ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கொள்கைகளுக்கு அரணாக இருக்கப் போராடினேன். அந்த நேரம் முற்றிலும் நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன். அன்பையும் ஒழுக்கத்தையும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்போடு பணியாற்றுவதை நம் கட்சியின் ஊழியர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கற்றேன்.
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்த நாட்டின் உயர் அமைப்புகளுக்கு நடுநிலைத் தன்மை தேவைப்படுகிறது. நடுநிலை பிறழாதவர்கள், பத்திரிக்கைச் சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் வெளிப்படையான தேர்தல் ஆணையம் இன்றி நேர்மையான தேர்தல் நடைபெறாது.
ஓர் அரசியல் கட்சியாக நாம் 2019 ஆம் ஆண்டுதான் தேர்தலில் போட்டியிடுவதைத் தொடங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உயர் அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்துவதை நாம் எதிர்த்து வந்துள்ளோம். இந்தியாவில் எந்த ஒரு நேசத்துக்குரிய உயர் அமைப்பும் நடுநிலைமையுடன் இல்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நாட்டின் உயரிய அமைப்புகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டம் இப்போது முழுமையடைந்துள்ளது. நமது ஜனநாயகம் அடிப்படையில் பலவீனமானது. அதுதான் தற்போதைய உண்மையான ஆபத்தாக உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் இப்போது வெறும் சடங்காகப் போய்விட்டது.
அதிகாரத்தைக் கைப்பற்றியதன் விளைவு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத வன்முறையையும் மற்றும் இந்தியாவுக்கு வலியையும் உருவாக்கியுள்ளது. விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், மலைவாழ் மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் பாதிப்பால் நமது பொருளாதாரம் மற்றும் தேசத்தின் கவுரத்துக்குப் பேரழிவு ஏற்படும். பிரதமரின் வெற்றி என்பது, அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகாது. பணமும், பிரச்சாரமும் உண்மையின் வெளிச்சத்தில் ஒருபோதும் மறைந்து கொள்ள முடியாது.
நமது உயர் அமைப்புகளை இந்திய தேசம் மீண்டும் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும். இதற்கான கருவியாகக் காங்கிரஸ் கட்சி இருக்கும்.
இத்தகைய முக்கிய நோக்கங்களை அடைய, காங்கிரஸ் கட்சி தன்னையே உருமாற்றிக் கொள்ள வேண்டும். இன்று பாஜக இந்திய மக்களின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. முன்பும், இனியும் இந்தியாவுக்கு ஒரே குரல் இருந்ததில்லை. இது தான் பாரத மாதாவின் உண்மையான முகம்.
எனக்குக் கடிதம் வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் ஆதரவு அளித்த ஆயிரக்கணக்கான இந்தியர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நன்றி. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையை நிலைநாட்ட என் பலம் உள்ளவரைத் தொடர்ந்து போராடுவேன். கட்சிக்கு என் சேவை உள்ளேயோ அல்லது ஆலோசனையாகவோ தேவைப்படும் போதெல்லாம் நான் தயாராக இருப்பேன்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்போர் குறிப்பாக நமது அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட தொண்டர்களே, நம் எதிர்காலம் மீது எனக்கும் நம்பிக்கை உள்ளது. உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். தியாகம் செய்யாதவர்கள் எல்லாம் அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொள்வது இந்தியாவில் வழக்கமாகியுள்ளது. ஆனால், அதிகார ஆசையைத் தியாகம் செய்யாமலும், ஆழமான கருத்தியல் போரில் சண்டையிடாமலும் உங்கள் எதிரியைத் தோற்கடிக்க முடியாது. நான் காங்கிரஸ்காரனாகவே பிறந்தேன். இந்த கட்சி என்னோடும் என் ரத்தத்துடனும் எப்போதும் கலந்தே இருக்கிறது. என்றென்றும் இது நிலைத்திருக்கும்.
ஜெய் ஹிந்த்
ராகுல் காந்தி
(இக்கடிதத்தை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூறிய அருமை நண்பர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு நன்றி)