3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோயங்காவை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராகப் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளைக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்களை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், 2 கோடி கையெழுத்துடன் கூடிய மகஜரை சமர்ப்பிக்க ராகுல் காந்தி தலைமையிலான சிறு குழுவைக் காவல் துறை அனுமதித்தது. குடியரசுத் தலைவர் தலையிட்டு, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றது.
2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்ற மகஜரை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ”3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்பதைப் பிரதமருக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். விரைவில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதவராக நிற்போம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரதமரை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தை விமர்சித்தால் கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்” என்றார்.
கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டபின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த அரசுக்கு எதிரான கருத்துகள் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நமது குரலை ஒலிக்கவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம். மத்திய அரசு பாவிகளின் அரசாக இருக்கிறது. இந்த பாவிகள் தான் விவசாயிகளை வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். போராடும் விவசாயிகள் தேச விரோத சக்திகள் என்று சொன்னால், அரசு ஒரு பாவி தான். நாங்கள் எதிர்க்கட்சிக்கு லாயக்கற்றவர்கள் என்றும் பலவீனப்பட்டுவிட்டதாகவும் கூறும் அவர்களே, கடந்த ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை எல்லையில் திரட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் என்றும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
நாடாளுமன்றத்தில் 3 விவசாயச் சட்டங்களையும் மோடியின் அரசு நிறைவேற்றிய பின், அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என, குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டன. மாநிலங்களவையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. எனினும், 3 விவசாயச் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் தான், தங்களுக்கு எதிரான 3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் பயந்து ஓடாமல் நெஞ்சை நிமிர்த்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ளது. எனினும், திறந்த மனதுடன், தங்கள் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயார் என விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.