பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
இன்றைய (03/09/20) தமிழ் இந்து நாளிதழில் வெளியான தலையங்கம் படித்தேன். பாராட்டுக்கு உரிய நடுநிலையான அலசல். ஆனால் நுணிப்புல் மேய்ந்த கதையாக உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் காங்கிரஸ் மட்டுமல்ல எந்த எதிர்க் கட்சியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்பட முடியாத ஜனநாயக அவலம் நம் நாட்டில் தொடர்கிறது. திட்டமிட்டு மத்திய அரசு எதிர்க் கட்சிகளின் குரலை அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒடுக்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முடிய நாடு முழுவதும் வியாபித்திருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதன் தலைமை மட்டுமே ஊசலாட்டம் இன்றி மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் உறுதிபட வைக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியினை இல்லாமல் செய்துவிட ஆளுங்கட்சி முனைவதில் அர்த்தமுண்டு. இந்த நெருக்கடியான நிலையில்- சூழலில் சில காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உட்கட்சி பூசலுக்கு வழிவகுப்பது மிகவும் தவறான நிலைப்பாடு.
காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வியால் துவண்டு போன அந்த தலைவர்கள் கட்சியின் ஆதாரக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டனர். அவர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எப்படியோ ஆளும் கட்சியாக ஆகிட வேண்டும். இதற்காக நேருவின் வழியிலிருந்து தடம்மாறி மோடி வழியில் பயணித்தாலும் தவறில்லை என்பது 23 தலைவர்களின் எண்ணம்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு இன்றுள்ள சூழலில் இராகுல் காந்தி தான் சிறப்பான தகுதி பெற்றவராக இருப்பார். வேறு எவருக்கும் அத்தகைய தகுதி – திறமை நிச்சயமாக இல்லை.ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க வற்புறுத்துபவர்கள் முதலில் அவர் ஏன் இராஜினாமா செய்தார் என்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைமை கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்யாமல் வெறுமனே மறுபடியும் தலைவர் பதவியை ஏற்க இராகுல் காந்திக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுப்பது வீண்வேலை. கட்சிக்குள் தேர்தல் நடத்திக் தான் பொறுப்புகளுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்பது ஒரு கவைக்குதவாத வாதம். 2004 ல் வாஜ்பாய் அரசை தேர்தலில் தோற்கடித்து சோனியா காந்தி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தி 2014 முடிய பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வழிநடத்திய காலத்தில் காங்கிரசில் உட்கட்சி தேர்தல் நடந்ததா? இல்லையே ! சிங்கம் காயப்பட்டு நடமாட முடியாத நிலையில் சிறு நரி கூட சிங்கத்தின் முன் சென்று சேட்டைகள் செய்ய முனைவது போல வேரற்ற சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற நடத்த முயன்று தோற்றுப் போனதை மறைக்க தாங்கள் உட்கட்சியில் ஜனநாயகத்திற்காக போராடுவதாக காமெடி செய்வதை ரசிக்க முடியவில்லை.
( சி.கே.மதிவாணன், 30/ தெற்கு தெரு, வி.பி.காலனி, அயனாவரம், சென்னை – 600023, மொபைல். 9444712675.)