ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் எல்லாம் அமைதியாகிவிட, தனித்து ஒலிக்கும் அவரது குரல் குறித்தும் தி சிட்டிஜன் இணையதளத்தில் வெளியான கட்டுரை:
ராகுல் காந்தியைப் பற்றிய எந்தவொரு நல்ல வார்த்தையும், இந்த நாட்களில் நாகரீகமற்றதாகக் கருதப்படுவதை நான் முழுமையாக அறிவேன். கும்பல்கள் அலறும் வகையில் அவரது வார்த்தைகள் உள்ளன.
எனினும் தாமஸ் கார்லைனின் ஞானத்தின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பிரபலமான பொதுக் கருத்து என்பது மிகப் பெரிய பொய் என்று கூறிய அவரது பிரசித்த பெற்ற வார்த்தை, என்னை முன்னெடுத்துச் செல்ல உந்துதலாக இருக்கிறது. ஆனாலும் சிறு எதிர்ப்புகள் என் முன்னே அணிவகுத்து நிற்கின்றன.
முதலாவதாக, சாதாரண இந்தியன் என்ற முறையில் நான் இதை எழுதுகிறேன். இன்றைய வன்முறை சக்திகளின் அம்புகளின் தாக்குதல்களுக்கும் எல்லோரும் ஆளாக நேரிடும். உதாரணமாக, இறைச்சியை எடுத்துச் செல்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டாலும் குர்காவில் எருமை இறைச்சியை எடுத்துச் சென்றதற்காக ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார். எனக்கு பிடித்த கபாப் செய்வதற்கு இறைச்சியை வாங்கிச் செல்லும் போது, என் மீதுகூட தாக்குதல் நடத்தப்படலாம்.
இரண்டாவதாக, நான் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளனோ அல்லது அக் கட்சிக்கு உண்மையானவனோ அல்ல. கடந்த காலத்தில் அக் கட்சிக்கு நான் வாக்களிக்கவில்லை. அமெரிக்காவின் பிரபலமான சர்க்கஸ் வித்தை காட்டும் பி.டி. பர்னம் போல், 2014 ஆம் ஆண்டு மோடி காட்டிய வித்தையால் கவரப்பட்டேன். 2019 ஆம் ஆண்டு தேசியவாதி கடல் மீனா அல்லது நாட்டுக் கோழியா என்று புரிந்து கொள்ள முடியாத, பச்சோந்தி அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது சவாரி செய்தேன். ( இப்போது அவர் மனதை ஒருநிலைப் படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மோசமான ஜெராக்ஸ் நகலைப் போல் தோற்றமளிக்க தொடங்கியுள்ளார். மங்கலான ஜெராக்ஸ் பிரதிகள் முடிவில் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்பதை நாம் அறிவோம்.)
நான் ராகுல் காந்தியின் பக்தரோ அல்லது அவரை பின்பற்றுபவரோ அல்ல; அவரது அரசியல் நடவடிக்கைகளில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அவரிடம் நிறைய குறைபாடுகளை காணுகின்றேன். இன்று இந்தியா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்தரத்தில் நிற்கும்போது, ராகுல் காந்தி செயல்படும் விதம், அவரது தைரியம் என்னை கவர்ந்துள்ளது. வாட்ஸ்அப் மீம்ஸ்களும், டெல்லி சலூன்களில் நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்தும் பப்புவின் முகத்தில் தெரியும் தைரியத்துக்கு காரணமாக இருக்கலாம். எனினும், பா.ஜ.கவின் எதிர்ப்பு என்ற பந்தை ராகுல் காந்தி பிடித்துக் கொண்டார். தன் கையில் உள்ள பந்து சர்வாதிகார அரசாங்கத்தால் சிதைக்கப்படும் என்பதால், அந்த பந்தில் இருந்து ராகுல் காந்தி கண்களை எடுக்கவில்லை.
சமீப காலங்களில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளே அதிகம். அவர்கள் மத்தியில், ராகுல் காந்தி அளவுக்கு யாரும் இழிவுபடுத்தப்பட்டவர்கள் இருப்பார்களா என சந்தேகிக்கின்றேன்.
தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் அது கட்சியின் தவறு. ஆனால், காங்கிரஸ் தோற்றால் அது ராகுல் காந்தியின் தவறு. மோடி தன் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளலாம். ஆனால், அதையே ராகுல் காந்தி செய்தால் தவறு. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பு குறித்து மோடி கேள்வி எழுப்பியபோது அது சரியானதாக இருந்தது. ஆனால், பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கக் கூடாது என்றால் என்ன நியாயம்?
இந்தியாவில் பெரும்பாலான கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் பரம்பரை வாரிசுகளே உள்ளனர். ஆனால், ராகுல் காந்தி தலைமை பதவிக்கு வந்தால் மட்டும் கண்டனம் எழுகிறது. பரம்பரை அரசியலுக்கு பா.ஜ.கவும் விதிவிலக்கல்ல.
பரம்பரை அரசியல் கதையை ஊடகங்களுக்கு பா.ஜ.க. இவ்வாறு தான் விற்றுக் கொண்டிருக்கிறது. இந்து ராஷ்ட்ரா அமைப்பதில் இருந்து விலகி நின்றாலும், அரசியலில் எவ்வளவு இருண்ட காலமாக இருந்தாலும், இன்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன. மற்ற கட்சிகளுக்கு வெறும் 5 சதவீத வாக்குகளே உள்ளன.
பல விசயங்கள் இன்று ஊடகங்களில் பொருத்தமற்றவைகளாக இருந்தாலும், உண்மையிலேயே பன்முகத்தன்மை என்னவென்றால், இந்தியாவின் இன்றைய ஒரே எதிர்க்கட்சி ராகுல் காந்தி என்பது தான்.
தங்களை எதிர்க்கட்சித் தலைவர்களாக காட்டிக் கொள்ளும் மாயாவதிகள்,நாயுடுகள் மற்றும் அகிலேஷ் யாதவ்கள் எல்லாம் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறைக்கு பயந்து அடக்கியே வாசிக்கிறார்கள். சரத்பவார், ஒஎஸ்ஆர், ஜெகன்மோகன் மற்றும் சந்திரசேகர ராவ் போன்றவர்கள், வேட்டைக்காரர்கள் நெருங்கும் போதும், சமையலறையில் தீப்பற்றும் போது தப்பிப்பது போல், பா.ஜ.கவுடன் செல்ல தங்கள் பின்வாசல் கதவை திறந்தே வைத்துள்ளார்கள். அதாவது, மம்தா பானர்ஜி மற்றும் பட்நாயக்கைப் போல் மணலில் தலையை புதைத்து இறக்கும் விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் கண்ணீரை வரவழைக்கும் பிரச்சினைகள் குறித்து யாரும் பேசுவதோ அல்லது அரசை நோக்கி கேள்வி கேட்பதோ கிடையாது. காஷ்மீரில் நீளும் இரும்புக் கரம், காவல் துறையினர் அத்துமீறல், குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லி கலவரம், தகர்க்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், கொரோனாவை தவறாகக் கையாண்டது, அரசியல் சாசன அமைப்புகளை அழிப்பது, புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு மூலம் சுற்றுச்சூழல் வன்முறை நிகழ்த்த இருப்பது, நீதித்துறையின் வருந்தத்தக்க நிலை, கூட்டாளிகளுக்கு பொதுச் சொத்துகளை ஏலம் விடுதல், லடாக் மற்றும் பிற இடங்களில் சீனாவிடம் சரணடைதல், ஒவ்வொரு விசயத்திலும் வெட்கக் கேடான நிலை.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது, அது குறித்து கேள்வி கேட்காமல் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது, மரபணு ரீதியாக எந்த வகையிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்த முடியாத சூழலை தூண்டுகிறது. பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் உரிமையையும் அவர்கள் அவமதிக்கிறார்கள்.
மொழி, வெறுப்பு, கோபம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை, சில ஆண்டுகளில் அரசியலில் பெரும் பாதிப்பாக உள்ளது. ராகுல் காந்தியின் பேச்சில் கண்ணியமும் நாகரீகமும் தென்படுகிறது. ஆனால், பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர்கள் ராகுல் காந்தியிடமிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளார்கள். ராகுல் காந்தி சொல்வதை எல்லாம் நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவர் பேசும் விதத்தில் நம்மால் தவறு கண்டுபிடிக்க முடியாது.
ராகுல் காந்தி எழுப்பும் ஒவ்வொரு கேள்வியும் சரியானது என்று கூறவோ, நியாயப்படுத்தவோ முடியாது. எனினும், ‘சந்தர்ப்பவாத அமைதி’ ‘ காக்காமல் அவர் ஒருவராவது கேள்வி கேட்கிறாரே என்று திருப்தி கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் ராகுலின் மீதான உண்மையான மற்றும் கற்பனை குறைபாடுகளை மறக்க நான் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
நாட்டில் நடக்கும் பெரும் தவறுகளை சுட்டிக் காட்டும் ராகுல் காந்தியின் குரல் மட்டுமே நம் எல்லோரது நினைவிலும் உள்ளது. அரசையும், வாக்காளர்களையும் எச்சரிப்பதாகவும் அவரது குரல் உள்ளது. நமது ஜனநாயகத்தில் வலுவான அரசு இருப்பதைப் போல், வலுவான எதிர்க்கட்சி இருப்பதும் அவசியம்.
வலிமை இல்லாத அரசும், வலுவான எதிர்க்கட்சியும் இருந்தால் ஜனநாயகம் வாழக் கூடும். ஆனால், வலுவான அரசும், பலமற்ற எதிர்கட்சியும் இருந்தால் ஜனநாயகம் நீண்ட காலம் வாழாது. மோடியைக் கண்டிக்க வேண்டும் என்பது என் வாதமல்ல. எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் எனது வாதம்.
இதையெல்லாம் மீறி, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க ராகுல் காந்தி முற்படுகிறார். எதிர்க்கட்சி அரசியல்வாதியாக தமது கடமையை அவர் செய்கிறார். இதனை விமர்சிப்பதையோ அல்லது கேலி செய்வதையோ மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.
வரலாறு என்பது வரவிருக்கும் பொதுவான விசயங்களுக்கு நம்பகமான வழிகாட்டியாகும். வாட்ஸ்அப் தகவல்களில் கவனம் செலுத்தி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்காமல், அந்த நினைவுகளில் இருந்து நம்மை துண்டித்துக் கொள்ள வேண்டும். 1930 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வீமர் குடியரசு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து வில்லியம் ஷிரெர் எழுதிய புத்தகத்தின் வரலாற்று பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
ஜெர்மனியில் உள்ள எந்த பிரிவினரும் தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கவில்லை. ஜெர்மானியர்கள் செய்த தவறு என்னவென்றால், நாஜிஸத்தை எதிர்த்த அவர்கள், ஒன்றுசேர்ந்து எதிர்க்க தவறிவிட்டார்கள். 1932 ஆம் ஆண்டு ஜுலையில் தேசிய சோஷலிஸ்ட்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம்தான். ஆனால், 63 சதவீத ஜெர்மானியர்கள் தங்கள் எதிர்ப்பை பிளவுபட்டு வெளிப்படுத்தினர். பொதுவான ஆபத்தை எதிர்கொள்ள குறுகிய பார்வை கூடாது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
வாக்கு சதவீதம் அபாய மணி அடிக்கிறதா அன்பு வாசகர்களே?
கட்டுரையாளர்: அவே சுக்லா