ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது, ராகுல் காந்தியும், அவரைப் போல் அஞ்சாத பிரியங்கா காந்தியும் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் முதல் ஆளாக நின்றார்கள்.
நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தைரியமாகப் பேசக்கூடிய ராகுல் காந்தியைப் போல், இந்த நாட்டில் ஏதாவது ஒரு தலைவர் உண்டா? நாம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்த இந்த உண்மை, ஹத்ராஸ் சம்பவம் மூலம் மேலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காவல் துறை கைது செய்து ஹத்ராஸ் செல்ல விடாமல் தடுத்தபோதிலும், தொடர்ந்து போராடிப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.
குடும்பத்தாரின் அனுமதியின்றி, அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்தனர். அதோடு, பிரச்சினை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் விடாமுயற்சி, ஹத்ராஸ் சென்றதோடு முடியவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சர் யோகிக்கு அழுத்தமும் கொடுக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பொது முடக்கம் காரணமாக நடந்தே சென்று கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுட்டெரிக்கும் வெயிலில் சந்தித்து, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துகளை ஏற்பாடு செய்தார். ஊருக்குத் திரும்பியதும் அவர்கள் ராகுல் காந்திக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கடிதம் எழுதி, அதனை ஊடகங்களுக்குக் கசியவிட்ட 23 தலைவர்கள், ஹத்ராஸில் நடந்த கொடிய நிகழ்வு பற்றி கவலைப்படவில்லை. ஆனால், ராகுல் காந்தி மாறுபட்டவராக இருந்தார்.
அரசியலுக்குப் பொருந்தாதவர் என ராகுல் காந்தியைச் சொல்கிறார்கள். இருக்கலாம். இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது இது உண்மைதான். ஆனால், வறியவர்களுக்காக அவரது இதயம் உருகும், அநீதிக்கு அவர் தலை சிலிர்க்கும். மனசாட்சி அவருடன் உயிர்ப்புடன் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.
ராகுல் காந்தி ஒரு சிறந்த போராளி. மீரட்டில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதாகட்டும், மும்பையில் ஷாருக்கானின் ‘மை நேம் இஸ் கான்’ படத்தைத் திரையிட விடமாட்டேன் என்று பால் தாக்கரே அறிவித்தபோதும், அங்கேயே சென்று போராடியதாகட்டும், அவரை சிறந்த போராளியாகக் காட்டியது.
கடந்த வியாழக்கிழமை உத்தரப்பிரதேச காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, தன்னை நடந்தே செல்ல அனுமதிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். ஆனால், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். வாய்ப்புக் கொடுத்திருந்தால் நடந்தே சென்றிருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, ஓடிஷா மாநிலம் காலாஹண்டியில் பாக்ஸைட் சுரங்கத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினார். அவர்களுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி ஆதரவு கொடுத்தார். இத்தனைக்கும் அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதயம் சொல்வதைத் தான் அவர் எப்போதும் கேட்பார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம், ”இந்தியாவில் சக்திவாய்ந்த முஸ்லீம் தலைவர்கள் ஏன் உருவாகவில்லை?” என்று மாணவர்கள் கேட்டனர். 5 முஸ்லீம் தலைவர்களின் பெயர்களைச் சொல்லுமாறு மாணவர்களிடம் கேட்டார். 3 தலைவர்களின் பெயர்களுக்கு மேல் அவர்களால் சொல்லமுடியவில்லை.
”நீங்கள் கூறிய 3 பேரும் என்னைப் போன்ற அரசியல் வாரிசுகள். நீங்கள் அரசியலில் பங்கெடுத்து, நமக்கான தலைவராக ஏன் உருவெடுக்கக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதுதான் ராகுல்காந்தி!