பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லியில் திரண்டு, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துள்ளது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளைக் கால்நடைகளை அடைத்து வைப்பதைப் போல், 36 மணி நேரம் அடைத்து வைத்திருக்கிறது டெல்லி காவல் துறை.
விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லி அரசு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. டெல்லி காவல் துறை உள்துறை அமைச்சகத்துக்குக் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள 9 மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைக்க டெல்லி மாநில அரசு அனுமதிக்கவில்லை. எனினும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பெற்று, டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் உத்தரவு பெற்று, விவசாயிகளை மைதானங்களில் அடைத்து வைத்தனர்.
மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக இருந்ததும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஸ்வராஜ் மஞ்ச் கிஷான் அமைப்பின் செயற்பாட்டாளரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவும், டெல்லி அரசின் தயக்கத்துக்குக் காரணம்.
கடந்த செப்டம்பர் மாதம் 3 விவசாயச் சட்டத் திருத்தங்களையும் கொண்டுவந்ததிலிருந்து, ஆம் ஆத்மி கட்சியும், ஸ்வராஜ் மஞ்ச் இயக்கமும் இணைந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இவர்கள் நடத்தும் போராட்டங்களில் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெரும்பாலும் பங்கேற்று வருகின்றனர்.
5 ஏக்கருக்குக் குறைவான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் குறைந்த அளவில் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களில், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவிடாமல் செய்யும் இடைத்தரகர்களின் தலையீடு அவர்களைப் பாதிப்படையச் செய்துள்ளதே இதற்குக் காரணம். சந்தைக்குழுக்களுக்கு வெளியே நல்ல விலைக்கு விளைபொருட்களை விற்று வருகிறார்கள். அதனால், புதிய விவசாய சட்டத்தில் சந்தைக் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதை அவர்கள் வரவேற்கிறார்கள்.
டெல்லி போராட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய பாரதிய கிஷான் சங்கம் தலைமையிலான விவசாய அமைப்புகளை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
போர்க்களத்துக்குப் புறப்பட்ட வீரர்களைப் போல் திரண்டு வந்த விவசாயிகளைப் பார்த்து டெல்லி காவல் துறை திகைத்துப் போனது. டெல்லி எல்லைக்குள் வந்து கொண்டிருந்த விவசாயிகளைத் தடுக்க காவல் துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அம்சம் சட்டத்தில் இடம் பெறாதது, தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள்.
இருந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் பேச்சை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. 3 விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களது ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.
மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் தான் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய முடியும் என்பதும் விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2024 ஆம் ஆண்டு வரை அதற்குச் சாத்தியமில்லை. குறிப்பாக, பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும் வரை, இந்த 3 சட்டங்களையும் பாஜக அரசு ரத்து செய்வது சாத்தியமில்லை.
விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லையென்றால், அரசின் கொள்முதல் முறையைப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவீனப்படுத்திவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கோதுமை மற்றும் அரிசியைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமே அரசு தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அமேசான் மற்றும் ரிலையன்ஸ் மூலம் தங்கள் விளைபொருட்களை விற்க அவர்கள் விரும்பவில்லை.
பெரும் தொழிலதிபர்களுடன் மட்டுமே மோடி அரசு நட்புடன் இருப்பதாகவும், பெரிய அல்லது சிறு விவசாயிகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய சட்டங்களை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பீகார் பின்னர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மீறி. விவசாயச் சந்தைகளைப் பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமிக்கவே இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.
டெல்லியில் திரண்ட விவசாயிகளின் மனோதிடம், போர்க் குணம், அடக்குமுறையை எதிர்கொண்ட விதம், பிரதமர் மோடியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.