உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 3 காங்கிரஸ் தலைவர்கள் புதுடெல்லியிலிருந்து புறப்பட்டனர்.
அவர்களை உத்தரப்பிரதேச எல்லையான நொய்டாவின் டிஎன்டி மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல் துறையினர், சோதனை செய்து அனுமதித்தனர்.
ஹத்ராஸ் கிராமத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, கதறி அழுத பெண்ணின் தாயாரை, ஆரத்தழுவி ஆறுதல் கூறினார் பிரியங்கா காந்தி.
”உங்கள் மகளின் வலியையும் துன்பத்தையும் நான் உணர்கின்றேன்” என்று தெரிவித்த பிரியங்கா காந்தி, ”உங்கள் மகளுக்கு நீதி கிடைக்கக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும்” என்று கூறினார்.
ஏற்கனவே ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச காவல் துறையை எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
மேலும் காங்கிரஸ் கட்சியினரும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோரைச் சந்திக்க 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல் துறை அறிவித்திருந்தது.
ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: முதலமைச்சர் யோகி மீது பிரியங்கா கடும் தாக்கு
ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் பல தரப்பினரும் கொதித்து எழுந்துள்ளனர்.
இந்த கொடுமையை எதிர்த்து, கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்தி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்தது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இடதுசாரிகளும் மற்ற எதிர்க்கட்சிகளும், யோகியைப் பதவி விலகக் கோரியுள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் சார்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், யோகி அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
யோகியை நேரடியாகக் கடுமையாகத் தாக்கிப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ”அந்தப் பெண்ணின் உடலை எடுத்துச் சென்று எரிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டது யார்? சம்பவம் நடந்து 14 நாட்களாக நீங்கள் ஏன் உறங்கிக் கொண்டிருந்தீர்கள்? எவ்வளவு நாட்களுக்கு இந்த கொடுமை தொடரும்?. நீங்கள் எந்த மாதிரியான ஒரு முதலமைச்சர்” என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்த பிரியங்கா காந்தி, ”கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் நீதி கேட்போருக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு செயல்படுவதாகவும்” மேலும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, யோகியைப் பதவி விலகுமாறு உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கோரிக்கை விடுத்துள்ளார். ”இனியும் ஆட்சியில் தொடர பாஜக தலைமையிலான அரசுக்குத் தார்மீக உரிமை இல்லை என்று கூறிய அவர், இந்த சம்பவத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மவுனம் காப்பது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
யோகியைப் பதவி விலகக் கோரி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் உத்தரப்பிரேத காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறிய லல்லு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
‘தலித் பெண் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை, தொடர்ந்து போராடுவோம்’ என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.