ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ரூ. 150 கோடிகள் மதிப்புள்ள லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை அரசுக்கே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை, கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அப்போதை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான கேபினட் குழு எடுத்தது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலுடன் சேர்த்து, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற 2 சொத்துகளான குதாப் ஓட்டல் மற்றும் லோதி ஓட்டல் ஆகியவற்றையும் விற்க கேபினட் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, குதாப் ஓட்டல் ரூ.36 கோடிகளுக்கும், லோதி ஓட்டல் ரூ.76 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த 1996 மற்றும் 2001 ஆண்டுக்கு இடையில் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் பெரும் இழப்பை சந்தித்தது. இதனையடுத்தே, இந்த ஓட்டலை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விற்பனை கொள்கையின் அடிப்படையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான ஓட்டல்கள் ஏலம் விடப்பட்டு, அவற்றை தனியார் துறையினர் வாங்கினர். லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும் முடிவை எடுத்தபோது, ஓட்டலை மதிப்பீடு செய்யவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமலும் இருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் சிபிஐ பதிந்த முதல் தகவல் அறிக்கையில், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் விலை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, பாரத் ஓட்டல் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 7.52 கோடிக்கு(தோராயமாக) விற்கப்பட்டுள்ளது. அரசின் மதிப்பீட்டின்படி, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலின் மதிப்பு ரூ.150 கோடிகள் ஆகும். அப்போதை சந்தை விலை ரூ.280 கோடிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போதைய கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அருண் ஷோரி, கம்பெனி விவகாரங்கள் துறை செயலர் பிரதீப் பைஜால், லஜார்டு இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் குமார் குஹா, காண்டி கரம்சே அண்ட் கோ உரிமையாளர் காண்டிலால் கரம்ஸே விக்ரம்ஸே, பாரத் ஓட்டல்ஸ் இயக்குனர் ஜ்யோத்சனா சுரி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மற்றம் தனி நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (கிரிமினல் கூட்டுச் சதி), 420 (மோசடி)மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூரன் குமார் சர்மா அளித்த தீர்ப்பின் முழு விவரம்:
ரூ.151 கோடி மதிப்புள்ள லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை வெறும் ரூ. 7 கோடியே 52 லட்சத்துக்கு பாரத் ஒட்டல்ஸ் லிமிடெடுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலை மத்திய அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும் லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்றதன் மூலம் ரூ. 252 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதை, கடைசி வரை கண்டுபிடிக்காத சிபிஐ புலனாய்வு அமைப்புக்கு கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
பாரத் ஓட்டல்ஸ் லிமிடெட்டுக்கு லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதில் அதிகாரிகளின் பங்களிப்பும் உள்ளது. லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை விற்கும்போது, இந்த ஓட்டல் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு சதுர மீட்டர் ரூ.1,000 என மாநில அரசின் நில மதிப்பு விலையிலிருந்து தெரிகிறது.
அதாவது, லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டல் மட்டும் ரூ.150 கோடி மதிப்பு என்று தெரிகிறது. இந்த ஓட்டலை மத்திய அரசு விற்க முடிவு செய்தபோது, இவற்றை எல்லாம் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. மத்திய அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபின், லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மீண்டும் நடத்தலாம்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை ஏற்காத சிபிஐ நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்த கடந்த 2019 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. சாட்சியங்கள் கிடைக்காததால் விசாரணையை தொடர முடியவில்லை என மீண்டும் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பெருமைக்குரிய லஷ்மி விலாஸ் பேலஸ் ஓட்டலை தன் கட்டுப்பாட்டுக்குள் உதய்பூர் மாவட்ட நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சேத்தன் தியோரோ மேற்கொண்டுள்ளார். ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி அதிகாரியை நியமித்த மாவட்ட நிர்வாகம், இது குறித்த தகவலை மத்திய அரசுக்கும் தெரிவித்துவிட்டது.
நல்ல செய்தி பாஜக அவன் யோக்கியதையை இதன்மூலம் தெரியும்