ஒருவரை நினைவு கூர்தல் என்பது, அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளைத் தொடர்வதற்கு நாம் முயலும்போது வழிகாட்டிடும் என்ற அடிப்படையில்தான் என்று உணர்ந்து நாம் தலைவர்களை நினைவு கூர்கின்றோம். அந்த வகையில், ராஜிவ் காந்தி இந்திய நாட்டுக்கு ஒரு முறைதான் பிரதமராக இருந்தார். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த ஆளுகைச் செயல்பாடுகள் என்பது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கு அடிப்படையாய் அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
“எனக்கொரு கனவு” என்ற வாசகம் உலகை ஈர்த்த ஒன்று. அது நிறத்தால் பாகுபடுத்திப் பார்க்கப்பட்டு, கருப்பின மக்கள் அடிமைத்தளையில் சிக்குண்டிருந்தபோது அந்த அமெரிக்க மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லுதூ் கிங் கூறிய வாசகம். அந்த வாசகம் உலகெங்கும் ஒலித்தது. அதேபோல் “நான் ஓர் இளைஞன் எனக்கொரு கனவு இருக்கிறது” என்று முழக்கமிட்டு 21 ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு பலமிக்க நாடாக இந்தியாவை உருவாக்க மக்களை அழைத்துச் செல்வேன் என்று கூறியது இந்திய இளைஞர்களுக்கு அது ஒரு தாரக மந்திரம். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ராஜிவ் காந்தி பிரதமராக வந்ததுவரை இந்தியா ஒரு கட்டுமானப் பணியில் இருந்தது என்றுதான் கூறவேண்டும்.
இந்திய பொருளாதார வளர்ச்சியும் மிகக்குறைந்த அளவிலேதான் இருந்து வந்தது. இந்தியா புதிய திசை நோக்கிச் சென்றிட புதுப்பாதை தேட ஆரம்பித்தார் ராஜிவ் காந்தி. அந்தத் தேடல் பல தளங்களில் நடைபெற்றது. அரசியலில், பொருளாதாரத்தில், ஆளுகையில், நிர்வாகத்தில், உற்பத்தியில் என அனைத்துத் துறைகளிலும் நடைபெற்றன. அதன் அடிப்படையில் முதலில் அவர் ஆரம்பித்தது பொறுப்புமிக்க பதிலளிக்கக் கடப்பாடுடைய நிர்வாகம் இந்த நாட்டுக்குத் தேவை என்ற வாதத்தினை முன் வைத்துத்தான் அவருடைய சீர்திருத்தங்களை ஆரம்பித்தார். அதில் அவர் வைத்த முதல் விவாதம் மத்திய அரசின் திட்டங்கள் யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, அடித்தளத்தில் மக்களுக்குப் பக்கத்தில் பொறுப்புமிக்க பதிலளிக்கக்கூடிய ஒரு நிர்வாகம் வேண்டும் என்று கூறி, அதற்கு மக்கள் பங்கேற்புடன் ஓர் அரசாங்கம்தான் தீர்வு என்பதை வலியுறுத்தினார். இதற்கு ஓர் உதாரணத்தை கதையாகக் கூறினார். யானையை நாம் டெல்லியிலிருந்து கிராமங்களுக்கு அனுப்புகிறோம். அது கிராமத்தை அடையும்போது யானையின் வால்தான் கிராமத்து மக்களுக்குத் தெரிகிறது என்று நகைப்புக்குரியதாக இந்த உண்மையைச் சொல்வார்.
இந்த மக்கள் மேம்பாட்டுப் பாதையில் இருக்கும் தடைகளை உடைத்தெறிய வழிகாண முயன்றார். அந்த முயற்சிதான் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாட்டில், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அதேபோல், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பஞ்சாயத்துத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் வல்லுனர்களுடனும் கலந்துரையாடினார். அனைவரிடமிருந்தும் ஒரு கருத்து மேலோங்கி நின்றது. இந்த நாட்டில் மக்களுக்கு அருகாமையில் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, கடமைப்படுத்தப்பட்ட மனிதர் என்று கிராமங்களில் யாரும் கிடையாது. அப்படி ஒருவர் அல்லது அமைப்புக் கிடைத்து விட்டால் இன்றைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பது தான் அந்த மையக் கருத்து. அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்குக் கொடுத்த வடிவம்தான் புதிய உள்ளாட்சி அரசாங்கம் அல்லது அதிகாரப் பரவல். இதை மக்களுக்கு அதிகாரம் அல்லது மக்களை அதிகாரப்படுத்துதல் என்றே அமரர் ராஜிவ் குறிப்பிட்டு வந்தார். இந்த கருத்தைப் புரிந்து கொள்ள நாம் மகாத்மா காந்தி கூறிய கருத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்தியா எப்போது பூரண சுதந்திரம் பெற்ற நாடு என்று சொல்லுவேனென்றால், எப்பொழுது, கடைகோடி மனிதனின் குரல் ஆட்சியாளர்கள் காதில் விழுந்து, அதற்குச் செவி மடுத்து, அந்த கடைகோடி மனிதன் என் குரலுக்கும் மதிப்பிருக்கிறது என்று எண்ணுகிறானோ அன்றுதான் என்று குறிப்பிட்டார். இந்த உள்ளாட்சி அரசாங்கத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் உள்வாங்கப்பட்டவர்களாக வடிவமைத்து, பிரதிநிதித்துவம் கொடுத்து, அனைவரின் குரலுக்கும் ஆட்சியாளரை கிராமசபை மூலம் செவி சாய்க்க கனவு கண்டார்.
மக்களின் அன்றாடத் தேவைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த அமைப்பு முறை மூலம் நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்று திடமாக நம்பினார். இந்த அமைப்பைத் தோற்றுவிப்பதன் மூலம் இந்தியாவை ஒர் உண்மையான பிரதிநிதித்துவ மற்றும் பங்கேற்பு மக்களாட்சியாக மாற்றி விடலாம் என்றும் கனவு கண்டார். அத்துடன் இந்த புதிய உள்ளாட்சிகள் மூலம் மக்களை இணைப்பதன் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு பலப்படும் என்றும், மக்கள் அரசை கண்காணிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் திடமாக நம்பினார். தன் தாக்கத்தை நம் சமூகத்தில் பார்க்க குறைந்தது 25 ஆண்டு காலம் பிடிக்கும் என்றார். அது மட்டுமல்ல, இதற்காக ஒரு மாபெரும் மக்கள் தயாரிப்பும் திரட்சியும் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அதற்கான முன்னெடுப்பையும் ஊடகங்கள் மூலம் எடுத்தார். அந்த முயற்சியில் கடைசியில் தோற்றுப்போனார். அந்தத் தோல்விக்கான காரணமானவர்கள் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் என்பதுதான் தமிழர்களாகிய நமக்கு ஒரு துன்பியல் செய்தி. எந்த நல்ல சிந்தனையும் தோற்பது கிடையாது. இது வரலாறு நமக்குத் தரும் செய்தி.
அமரர் ராஜிவ் கண்ட கனவை 1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பி.வி.நரசிம்மராவ் நினைவாக்கினார், 73வது மற்றும் 74வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, இந்த இரண்டு சட்டங்களும் நிறைவேற்றிய பிறகு உலகம் இந்தியாவின் மீது கவனத்தைச் செலுத்தியது. ஏனென்றால் இந்திய ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6,000லிருந்து 30 லட்சத்து ஆறாயிரமாக மாறியது. இந்த புதிய உள்ளாட்சி அரசியல் சாசனச் சட்டங்களின் மூலம் உருவாக்கிய உள்ளாட்சி அரசாங்கம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் மூன்று நிலை அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு சட்டத்திருத்தங்களின் மூலம் இந்திய மக்களாட்சி அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கி தன்னகத்தே கொண்டு செயல்படக்கூடியதாக மாறியது. அது மட்டுமல்ல, கடைக்கோடி மனிதனின் வேண்டுகோள் என்பது மக்கள் பாராளுமன்றமாகிய கிராமசபையில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
அது மட்டுமல்ல இந்த மன்றத்தில் எடுத்த முடிவுகள் இறுதியானது மாற்ற இயலாத உறுதியானது என்பதை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை மற்றும் ஆதிக்கங்களை உடைக்க வல்ல சக்தியைப் பெற்றதாக இந்த கிராம சபை இன்று விளங்குகின்றது. மேல்சாதிக்காரர் கீழ்சாதிக்காரர் என்ற நிலை மறந்து, அனைவரும் சமம் என்பதை கிராம சபையில் அனைவரும் சமமாக உட்கார்ந்து விவாதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல கிராமத்தில் உள்ள கடைக்கோடி மனிதன் தன் தேவைகளை தன் கேள்விகளின் மூலம் கேட்டு, அதை நிறைவேற்ற அந்தப் பஞ்சாயத்தை கடமைப்படுத்தும் நிலையைக் கொண்டு வந்துள்ளது புதிய அரசாங்கம். அது மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக வந்த தலைவர்கள் எண்ணற்ற சாதனைகள் படைத்து பஞ்சாயத்துக்களை குட்டி ராஜ்யமாக இல்லாமல் குட்டிக் குடியரசாக மாற்றிய வரலாறும் இந்தியாவில் நடந்து கொண்டுள்ளது.
குமரப்பா கண்ட தற்சார்பு கிராமமாக மாற்ற பாடுபட்ட குத்தம்பாக்கம் இளங்கோ, தனக்கு வாக்களித்த இந்து மக்களின் கோயில் தேவைகளை தானே முன்னின்று செய்து மக்களின் பாராட்டைப் பெற்ற ஜம்ருத்பீவி, தன் புதிய திட்டமாகிய மழைநீர் சேகரிப்பால் அரசாங்கத்துக்கும் ஆலோசனை கூறி உலக வங்கி மாநாட்டில் பங்குபெற்ற அமரர் ஜேசுமேரி போன்ற நூற்றுக்கணக்கான பஞ்சாயத்துத் தலைவர்கள் குட்டி மகாத்மாக்களாகவே தங்களை உருவாக்கிக் கொண்டனர். அதேபோல் பல பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆதிக்க சக்தியாலும், இயற்கை வளங்களை, மாபியாக்களிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இந்த புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தால் பல நல்ல பணிகள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பொது வெளியில் விவாதத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் கிராமசபை மூலம். இரண்டு, இதேபோல் பெண்கள் பிரச்சினைகளும் பொது விவாதத்தில் மையப்படுத்தப்பட்டு விட்டன.
மூன்றாவதாக, எங்கெல்லாம் நல்ல தலைமை கிடைத்ததோ அந்தப் பஞ்சாயத்துக்களிலெல்லாம் அரசுத் துறைகள் செய்யும் பணிகள் கண்காணிக்கப்பட்டு, முழுப் பயனும் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளுக்கு இதுவரை சென்று சேராத வசதிகள் தலித்துக்கள் பஞ்சாயத்துத் தலைவர்களாக வந்ததால் கிடைக்க வேண்டிய வசதிகள் சென்று சேர ஆரம்பித்து விட்டன.
இவ்வளவு சாதனைகளும் அரைகுறையாக அதிகாரங்கள் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் என்றால், இன்னும் அதிகமாக பஞ்சாயத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்திருக்கும் என்று நம்மால் யூகித்துப் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே மக்களுக்குச் சேவை செய்ய எண்ணுவோர் கிராமத்திற்காக சேவை செய்யும் 37 துறைகளையும் கண்காணிக்க முயன்று செயல்பட்டால் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் 400க்கு மேற்பட்ட திட்டங்களில் ஒரு பைசாகூட இழப்பில்லாமல் சென்று சேர வைத்துவிடலாம். இதற்கு தலைவர் பதவியோ, உபதலைவர் பதவியோ, வார்டு உறுப்பினர் பதவியோ தேவை இல்லை.
நீங்கள் ஒரு கிராமசபை உறுப்பினராக இருந்தாலே, கிராம சபை மூலம் ஒரு வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகமாக நம் அரசுத்துறைகளை மாற்றியமைத்து விடலாம். இதற்குத் தேவை தன்னார்வலர்களுக்கு ஒரு கடப்பாடு மற்றும் புரிதல். இவை இருந்தால் களத்தில் இறங்கி ஒரு மேம்பாட்டுக்கான அரசியலை முன்னெடுக்கலாம். அதற்கு நம் இளைஞர்கள் தயாரா? என்பது தான் இன்று நமது கேள்வி.