கற்பித்தல் மற்றும் கல்வி முறையை மறுசீரமைப்பதைவிட, குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் இன்னும் சில அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. இதுகுறித்து, டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான ஷ்யாம் மேனன் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழுக்கு அளித்த நேர்காணல்:
” தேசிய கல்விக் கொள்கையில் கற்பித்தலை விட அரசியல் பின்புலமே அதிகம் உள்ளதா?”
இதற்கு பதில் அளிக்கும் முன்பு, இந்த கொள்கையில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிக்கிறேன். கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்குட்பட்டது. தேசிய கல்விக் கொள்கை எதைக் கண்டுவிடப்போகிறது. இதில், மத்திய அரசின் அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது. பெரிய அளவில் மாநில அரசுகளால் மட்டுமே அமல்படுத்த முடிந்த கல்விக் கொள்கையை, தேசிய கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது தீங்கு விளைவிப்பதாகவே அமையும். இன்றைய காலக் கட்டத்தில் இதனை தேசிய கல்விக் கொள்கை என்று அழைப்பது கூட கடினமான ஒன்றுதான். இந்த புதிய கல்வி கொள்கை விவாதிக்கப்படவும் இல்லை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவும் இல்லை. மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தால் ஆய்வு செய்யப்பட்டதா? என்று கூட என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வேண்டாமா? நாடாளுமன்றத்தில் இந்த கொள்கை வைக்கப்பட்டிருந்தால், மாநிலங்களில் இதனை எளிதில் செயல்படுத்த முடியும்.
” கல்வி தொடர்பான முந்தைய கொள்கைகளுடன் ஒப்பிடும்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை எவ்வாறானது? விஞ்ஞான மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை இந்திய பாரம்பரிய மதிப்புடன் மாற்ற விரும்புகிறதா?”
புதிய கல்விக் கொள்கை முந்தைய தேசிய கல்விக் கொள்கையைவிட முற்றிலும் மாறுபட்டது என்று கூறிவிடமுடியாது. 1968 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கொள்கையில் இடம்பெற்ற பல முக்கிய அம்சங்கள் 2020 தேசிய கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகம், சோஷலிசம் மற்றும் மதச் சார்பின்மை ஆகியவை 2020 தேசிய கல்விக் கொள்கையில் காணாமல் போயிருக்கின்றன.
” தேசிய கல்விக் கொள்கையில் கற்பிக்கும் மொழி குறித்து பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், அதற்கு மேலும் தாய் மொழி தவிர மற்றொரு மொழி அவசியம் கற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்பிக்காததன் தாக்கம் எவ்வாறு இருக்கும்?”
அவர்கள் சொல்வதுபோல், தாய்மொழி தவிர, ஆங்கிலம் இல்லாத வேறு மொழியை கற்பிப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே சாத்தியமாகும். நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான பொதுவான பள்ளிகள் அமைப்பது என்பது எதார்த்தமானதாக மாற முடியாது.
” புதிய கல்விக் கொள்கையில் சாதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடாதது கவலை அளிப்பதாக இல்லையா?”
தேசிய கல்விக் கொள்கை 2020, சமத்துவம் என்ற விசயத்தில் கவலை அளிப்பதாக உள்ளது. இது இந்திய சமுதாயத்திலும் அதன் வரலாற்று வேர்களிலும் உள்ள மகத்தான சமத்துவமின்மையை ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் கல்வியை ஒரு நெறிமுறை அர்த்தத்தில் சாத்தியமான சமநிலையாக கருதவில்லை. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.
” உயர் கல்வியில் சீர்திருத்தம் செய்துள்ள நிலையில் எம்.பில் படிப்பையும், ஓராண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பையும் ரத்து செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?”
சில படிப்புகளை நீக்குவதன்மூலம் புதிய கல்வித் திட்டங்களை உருவாக்க முடியும். கல்வித் திட்டங்களில் சிலவற்றை புதிதாக உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புக்கு முன் எம்.பில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு தேசிய கொள்கை குறுகிய நிர்வாக சிந்தனையில் இருக்கக் கூடாது. எனினும், திறனுடன் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் எம்.பில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.
” கொரோனா பாதிப்புக்குப் பிறகு சில பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன. நிலைமை இப்படியிருக்கும் போது, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த நிதி எங்கிருந்து வரும்?”
தேசிய கல்விக் கொள்கை 2020- ஐ செயல்படுத்த கல்விக்கான பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். கல்விக்கான பொது நிதியை அதிகரிக்க முந்தைய தேசிய கொள்கைகளில் செய்யப்பட்ட உறுதிப்பாட்டை இந்த கொள்கை வலியுறுத்துகிறது. முதலீடு விசயத்தில் தான் மாநிலங்களை தேசிய கல்விக் கொள்கை கூட்டாண்மைக்கு அழைக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து முதலீடுகளை அதிகரித்து 6 சதவீத ஜிடிபி-ஐ எட்ட வேண்டும். ஆனால் இது எப்படி சாத்தியம் ஆகும் என்றோ, எவ்வளவு சீக்கிரம் நிகழும் என்றோ தெரியாது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட கல்விக்கான பொதுச் செலவுகள் விகிதாச்சார அடிப்படையிலும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். இந்த நிலையில் கல்விக்கான நிதி அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைவாகவே ஒதுக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கையில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளைஞர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வாய்ப்பு தர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மானியம் அல்லது மத்திய அரசின் திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்த கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால், இதை எல்லாம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்குமா? இந்த கேள்விக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது.