ஒரே நாடு, ஓரே தேர்தல் என்று கூறும் பிரதமர் மோடி, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கார்பரேட் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமானது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
3 விவசாயச் சட்டங்களையும் எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர். மண்டிகளை நீக்கிவிட்டு விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்கலாம் என்றும் சட்டத்தில் சொல்லப்படும் பிரிவு, கார்பரேட்களை களம் இறக்கும் செயல் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
கார்பரேட்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சாலைகளில் குழியைத் தோண்டி தடுத்தும் விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று சொல்ல அரசு தயாராக இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் ஆர்வம் காட்டும் பிரதமர், ஒரே நாடு, மக்களை ஒரே மாதிரியாக நடத்தவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.