”பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துக்காக நாட்டின் மத நல்லிணக்கத்தை குழிதோண்டிப் புதைத்தவர் அத்வானி. இவ்வளவு செய்தும் அவர் கடைசி வரை பிரதமராக முடியவில்லை” என்று கோடிட்டு காட்டுகிறார் சிறப்பு செய்தியாளர் சுஜாதா ஆனந்தன்.
நேஷனல் ஹெரால்டு இணைய தளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்:
ராமஜென்ம பூமி இயக்கம் ஆரம்பித்து இந்தியாவை மத ரீதியான பாதைக்கு அழைத்துச் சென்றவர் லால் கிருஷ்ண அத்வானி. இன்று பரிதாபத்துக்குரிய நபராக இருக்கும் அத்வானியின் கண் முன்னே தான், நூற்றாண்டு பழமைவாய்ந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப் பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டும் பணியில் சங்பரிவார் மும்முரமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அத்வானியின் சிந்தனை எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன். இந்த நிகழ்வு சரியானதா என்ற எண்ண ஓட்டம் அவருள் ஓடும் என்றே எண்ணுகின்றேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என ஒரு கல்வெட்டில் அவர் பெயர் இடம்பெயரக்கூடும். எனினும், இன்று இந்தியா இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டதற்கு அடித்தளம் அமைத்தவர் அத்வானி என்பதை அந்த கல்வெட்டு பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
இன்று இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக பிரதமர் மோடியை நான் குற்றஞ்சாட்டப் போவதில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவைப் பற்றிய கேள்விக்குரிய கல்வியும், போதனை பிரச்சாரமும் கொண்டிருந்த மோடியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அத்வானிக்கு நிச்சயம் நல்லது என்னவென்று தெரிந்திருக்கும்.
அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை, அத்வானியை கண்ணனின் தோராட்டி அர்ஜுனனாக காட்டியது எல்லாம் பாரதிய ஜனதாவின் கல்லா பெட்டியில் சேமிப்பாக நிறைந்துவிட்டது. ஆனால், கடைசி வரை அது அத்வானிக்கு பயன் இல்லாமல் போய்விட்டது.
தன் சொந்த கொள்கைக்கோ அல்லது நம்பிக்கைக்கோ அத்வானி உண்மையாக இருந்ததில்லை என்பதை நான் எப்போதும் உறுதியாகச் சொல்வேன். அவர் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, முகமது அலி ஜின்னாவை மதசார்பற்றவர் என்று பாராட்டினார்.
அந்தவகையில், ஜனநாயக மற்றும் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த போதிலும், அதற்கு எந்த பதிலும் தராத பிரதமர் மோடியை பாராட்டுகின்றேன்.
பைபிளில் கூறியபடி, அவர் மன்னிக்கப்படலாம். அவர் என்ன தவறு செய்கிறார் என்பது உண்மையில் தெரியாது. ஆனால், அத்வானிக்கு நன்றாகவே தெரியும். ஜின்னாவின் மதச்சார்பின்மையை பேசுவதன்மூலம் இந்தியாவில் உள்ள மதசார்ற்ற தலைவர்களை கவரமுடியும் என நினைத்தார்.
ஒன்றுபட்ட தேசத்தையும் அதன் நல்லிணக்கத்தையும் அழிக்க முற்படுவதில் ஜின்னாவும், அத்வானியும் ஒன்றே என்பது என் கருத்து.
சுதந்திரத்துக்குப் பிறகு, ஜின்னாவும் அத்வானியும் அவர்களது ஒற்றை லட்சியத்தை அடைவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.
‘கர்ம வினை’ என்று ஒன்று இருக்கிறதே. அது ஒவ்வொரு முறையும் அத்வானி இந்த நாட்டின் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தது. ஹவாலா ஊழல் தொடர்பாக முதல் முறை பதவி தட்டிப்பறிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் உடல்நலம் குன்றியபோது, அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று அத்வானி பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விதி வலியதல்லவா! காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அதன்பிறகு, அத்வானிக்கு ஆர்எஸ்எஸ் முழுமையாக ஓய்வு கொடுத்தது. ஆனால், பிரதமராக வேண்டும் என்ற ஒற்றை ஆசைக்காக, மதசார்பற்ற இந்தியாவை சீர்குலைத்த அத்வானிக்காக நான் உண்மையிலேயே வருத்தப்படப் போவதில்லை!
இவ்வாறு சுஜாதா ஆனந்தன் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Very Excellent