‘பிஎம் கேர்ஸ்’ எனப்படும் ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாண நிதி’ – க்கு இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ.9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த தொகையில் இருந்து கொரோனாவை எதிர்த்துப் போராட செலவு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனாவை எதிர்த்துப் போராட, ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு கடந்த மார்ச் 28 ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான 52 நாட்களில் ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சம் வசூலானது.
கடந்த மே 13 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து ரூ. 3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து செலவு செய்வதாக வெளியிடப்பட்ட முதல் மற்றும் ஒரே அறிவிப்பு இதுதான். மே 20 ஆம் தேதி வரை வசூலான ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தில், இது 32 சதவீதமாகும்.
‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு வரும் நன்கொடை குறித்தோ, இந்த நிதியிலிருந்து செலவு செய்யப்படுவது குறித்தோ எந்த விவரமும் அரசு தரப்பு ஆவணங்களில் இருந்து கிடைக்கவில்லை. இந்த தொகை மக்களிடம் இருந்து நன்கொடையாக கிடைத்திருந்தால், தலைமை கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதா? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தில், ரூ. 4 ஆயிரத்து 308 கோடியே 30 லட்சம் அரசு ஏஜென்ஸிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்த வகையில் ரூ. 438 கோடியே 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. குறைந்தது ரூ. 5 ஆயிரத்து 369 கோடியே 60 லட்சம் கார்பரேட் சமூக பொறுப்பு நிதி என்ற வகையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்துறையினர் மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து வசூலாகியுள்ளது.
மேலும், அரசு ஏஜென்ஸிகளின் உறுதிமொழிப் பத்திரம் மூலம் ரூ.1,250 கோடி பெறப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களும் ரூ. 772 கோடியே 40 லட்சம் வரை உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளன. பாலிவுட் திரைப்படத்துறையினர் ரூ. 53 கோடியே 80 லட்சம் வரை உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளனர். 2 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு. ரூ. 22 கோடி வரை உறுதிமொழிப் பத்திரம் தரப்பட்டுள்ளது.
இதுதவிர, கொரோனா நிவாரண நிதிக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி, மாநில பேரிடர் நிர்வாக நிதி மற்றும் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 7 ஆயிரத்து 855 கோடியும் வசூலானது.
‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு மட்டும் வந்த ரூ. 9 ஆயிரத்து 677 கோடியே 90 லட்சத்தை கொண்டு எவ்வளவோ வாங்கியிருக்க முடியும். உதாரணத்துக்கு, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 14 கோடியே 50 லட்சம் பாதுகாப்பு உடைகளை, தலா ரூ. 666.75 என்ற விலையில் வாங்கியிருக்க முடியும். அல்லது இந்த தொகையில், 200 கோடிக்கும் மேற்பட்ட என் 95 முகக் கவசங்களை வாங்கியிருக்க முடியும். ரூ. 42 மற்றும் ரூ.141.60 செலவில் 68 கோடி பாதுகாப்பு கண்ணாடிகள் வாங்கியிருக்க முடியும். இந்த பெரும் தொகையை பயன்படுத்தி மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் புதிதாக நியமனம் செய்திருக்கலாம்
தனியார் ஆய்வகங்களில் கொரோனாவை கண்டறிய செய்யப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு ரூ. 4 ஆயிரத்து 500 க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று கூறியிருக்கலாம். ரூ. 4 ஆயிரத்து 500 கட்டணத்தில், 2 கோடி பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்திருக்கலாம். ஆனால், மே 19 ஆம் தேதி வரை, 20 லட்சத்து 40 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையிலிருந்து, தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தவித்துக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணத்துக்கு கொடுத்திருக்கலாம்.
கொரோனா போன்ற அவசர கால சூழலை சமாளிக்கவே ‘பிஎம் கேர்ஸ்’ நிதி உருவாக்கப்பட்டது. இதே காரணத்துக்காக இதே போன்ற பிரதமரின் தேசிய நிவாரண நிதி கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2019 ஆம் டிசம்பர் வரை, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து செலவழிக்கப்படாமல் ரூ.3 ஆயிரத்து 800 கோடி உள்ளது. ஏற்கனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, புதிதாக ‘பிஎம் கேர்ஸ்’ நிதி ஏன் உருவாக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை விளக்கம் இல்லை.
‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு லார்சன் ட்யூப்ரோ நிறுவனம் ரூ. 150 கோடி நன்கொடையாக வழங்கியது. ஆனால், ஏப்ரல் மாதம் ஊதியம் கிடைக்காததால், இந்த நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஊழியர்களின் ஊதியத்தை குறைத்த ரிலையன் இன்டஸ்ட்ரீஸ், பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.500 கோடி கொடுத்தது. கொரோனா நிவாரணத்துக்கு மருத்துவர்களிடமும் நன்கொடையை அரசு பெற்றது. அதேசமயம், தங்களுக்கு பாதுகாப்பு உடைகள் தரக் கோரி மருத்துவர்கள் போராடியதையும் பார்த்தோம்.
எந்த நோக்கத்துக்காக பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதையே இத்துனை ஆதாரங்களும் பறைசாற்றுகின்றன. இதன்பிறகும், ‘பிஎம் கேர்ஸ்’ நிதியின் நோக்கத்தையும், அவசியத்தையும் மக்களுக்கு தெரிவிக்காமல் இருந்தால், சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும்.