இந்தியாவுடன் ஐதராபாத் இணைந்த பிறகே, பாக்யலட்சுமி கோயில் கட்டப்பட்டதாக, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
பாக்யாநகர் என்று இருந்ததை, முகமது கலி க்வதாப் ஷா ஆட்சியில் தான் ஐதராபாத் என்று பெயர் மாற்றம் செய்தனர் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது, கோயில் சிறிது சிறிதாக விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், இதற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருப்பதாகவும் ஒரு தரப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையமோ, சார்மினார் இருக்கும் இடத்துக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், பாக்யலட்சுமி கோயில் ஆக்கிரமிப்பு கட்டுமானம் என்றும் கூறிவருகிறது
இந்நிலையில்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், முகமது அக்ரம் என்பவர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.
”ஐதராபாத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் அருகில் உள்ள பாக்யலட்சுமி கோயில், ஐதராபாத்தை இந்திய அரசு தமது எல்லைக்குள் இணைத்த பிறகே கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு சார்மினார் அருகில் இந்த கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. பண்டைய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 1904 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த முகமது அக்ரம், ” கோயில் மற்றும் சார்மினார் குறித்து ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆவணத்தில் இருக்கும் கட்டமைப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ளவே நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினோம்”என்றார்.
முந்தைய ஆர்டிஐ:
கடந்த 2012 ஆம் ஆண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மசூத் என்பவர், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம், ” தென்கிழக்கில் அமைந்துள்ள சார்மினாரின் அருகில் அமைந்துள்ள கோயில் சட்டவிரோத கட்டுமானம்” என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1968 ஆம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வு கண்காணிப்பாளர் இட்ரிசுல்லா அப்போதைய ஐதராபாத் மாநகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில்,” தேசிய நினைவுச் சின்னமான சார்மினாரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கட்டிடத்தை அகற்ற ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டிருந்தார். இந்த கட்டிடம் தேசிய நினைவுச் சின்னமான சார்மினார் இருக்கும் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பாஜக பித்தலாட்டம்:
ஐதராபாத் என்ற பெயரை பாக்யாநகர் என்று மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகியும் பாக்யலட்சுமி கோயிலுக்குச் சென்று வணங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று ஏன் மாற்றக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். பாக்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பலர் தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்பின்னர், ஐதராபாத்தைப் பெயர் மாற்றும் விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துக் கொண்டு, அரசியல் செய்து வருகின்றனர்.
சார்மினாரை ஆக்கிரமித்துத்தான் பாக்யலட்சுமி கோயில் கட்டப்பட்டதாக, தெலங்கானா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் முகமது சபீர் அலி தெரிவித்தார்.
வரலாற்றுச் சான்றுகளை எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு, வரலாற்றைத் திரிக்கும் வழக்கமான வேலையை தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளனர் பாஜகவினர்.
இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் சொல்வதும் பொய், சான்றுகள் சொல்வதும் பொய், பல நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது பொய் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது பாஜக.
பாக்யலட்சுமியே நேரில் வந்து சொன்னால் கூட இவர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்!