தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்தை எழுப்பியபோதே, இந்துயிசத்தின் கம்பீரம் வீழ்ந்துவிட்டது. கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1945 ஜூன் மாதம் வரை சிறையிலிருந்தபோது, ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தைப் பண்டிதர் ஜவஹர்லால் நேரு எழுதினார். அதில் இந்துயிசம் என்றால் என்ன? என்பது குறித்த தகவலையும், அதன் பிரதிபலிப்பு மற்றும் அறிவுசார்ந்த விவாதத்தையும் அதன்மூலம் நேரு தொடங்கி வைத்தார்.
எதிர்காலத்தில் இந்து மதம் எவ்வாறு எல்லாம் தவறாகக் கையாளப்பட வேண்டும் என்பதைத் தீர்க்கதரிசனத்தோடு பதிவு செய்திருக்கிறார்…
” இந்து என்ற வார்த்தை நமது பண்டைய இலக்கியத்தில் இல்லை. இந்து என்பதற்கு ஓர் இந்திய புத்தகத்தில் குறிப்பு இருப்பதைப் பற்றிச் சொல்கிறேன். கிறிஸ்து பிறப்புக்குப் பின் எட்டாம் நூற்றாண்டில் வெளியான தாந்த்ரிக் படைப்பில், ‘இந்து’ என்றால் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதம் என்பது, குறிப்பிட்ட மக்களால் பின்பற்றப்பட்ட மதம் அல்ல. ஆனால், அவெஸ்டாவிலும் பழைய பாரசீக மொழியிலும் இது காணப்படுவதால், இந்த வார்த்தை மிகவும் பழமையானது என்பது தெளிவாகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மக்களால் இந்தியாவிற்காக ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்குப் பிறகு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது சிந்து நதியின் மறுபுறத்தில் வசித்த மக்களுக்காக இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இந்த சிந்து என்ற பழைய வார்த்தை தான் இந்துவாக மாறியிருக்கிறது. இந்து, இந்துஸ்தான், இந்தியா என்று மாறியிருக்கிறது. இந்து என்பது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையது என்று அதன்பின்னர் தான் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆரிய தர்மம் தான் பழமையான மதம், இது ஒரு நெறிமுறைக் கருத்தாகும். இது தார்மீக நெறிமுறையும் நீதியுமானதாகும். மனிதனின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் முழுவதையும் உள்ளடக்கியது. ஆரிய தர்மத்தில் இந்தியாவில் தோன்றிய அனைத்து நம்பிக்கைகளும் (வேத மற்றும் வேதமற்ற) அடங்கும். இதனை புத்த மதத்தினர், ஜெயின்கள் போன்ற, வேதங்களை ஏற்ற அனைவரும் பயன்படுத்தினர். புத்த மதத்தில் இதனை ஆரிய வழி இரட்சிப்பு என்று அழைப்பார்கள்.
இந்தியாவின் எந்த ஒரு பழமையான நம்பிக்கைக்கும் (புத்த மதம் மற்றும் ஜெயின் மதம் உட்பட) சனாதன தர்மம் என்று அர்த்தம். இத்தகைய வெளிப்பாடு பண்டைய பண்பாட்டைப் பின்பற்றுவதாகக் கூறும் இந்துக்களிடையே சில மரபுவழி அம்சங்களால் இன்று ஏகபோகமாக உள்ளது.
புத்த மதமும் ஜெயின் மதமும் நிச்சயம் இந்துயிசமோ அல்லது வேத தர்மம் கூட இல்லை. அவர்கள், இந்திய வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் தத்துவத்தோடு இந்தியாவில் வளர்ந்தனர்.
புத்த மதத்தினரும் ஜெயின் மதத்தினரும் இந்து நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் நூறு சதவீத இந்திய தயாரிப்புகளே. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம் என்று தவறாக வழிநடத்தப்படுகிறது. பிற்காலத்தில் இந்த கலாச்சாரம் இஸ்லாத்தின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனாலும், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையும், தனித்துவமும் நிலைத்திருந்தது. இந்துயிசம் என்பது ஒரு நம்பிக்கையாக, தெளிவற்ற, உருவமற்ற, பல தரப்புகளைக் கொண்டதாகவும், எல்லா மனிதர்களுக்குமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இந்துயிசத்தை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக வரையறுப்பது கடினம். இந்து மதம் ஒரு மதமா? என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. அதன் தற்போதைய வடிவத்திலும், கடந்த காலங்களிலும் பல்வேறு நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் தழுவுகிறது. பெரும்பாலும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு அல்லது முரண்பாட்டை வளர்த்திருக்கிறது.
இந்து மதம் என்ன என்பதை, மகாத்மா காந்தி வரையறுக்க முயன்றார். இந்து மதத்தை வரையறுக்குமாறு என்னிடம் கேட்டபோது, அகிம்சை வழிமுறை மூலம் உண்மையைத் தேடுங்கள் என்றேன். ஒருவர் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், அவர் இந்து என்று தான் அழைக்கப்படுகிறார். இந்துயிசம் என்பது மதத்தின் உண்மை. கடவுளின் உண்மை. கடவுள் மறுப்பையும் நாம் அறிவோம். ஆனால், உண்மை மறுப்பை நாம் அறிந்ததில்லை…
எனவே, பழங்காலத்தைக் குறிப்பிட்டு இந்து அல்லது இந்துயிசம் என்பது இந்திய கலாச்சாரத்துக்கு சரியற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கிறது. எனினும், சிந்தனையின் பல்வேறு அம்சங்கள் பண்டைய எழுத்துகளில் பொதிந்துள்ளன. அவை, கலாச்சாரத்தின் மேலாதிக்க வெளிப்பாடாகவே இருந்தன. அந்த சொற்களை இன்று வரை பயன்படுத்துவது இன்னும் தவறானதாகும்.
நீண்ட கால பழமையான நம்பிக்கையும் தத்துவமும் முக்கியமான வாழ்க்கை முறையாகவும், உலகத்தைப் பற்றிய கண்ணோட்டமாகவும் இருந்தவரை, அவை பெரும்பாலும் இந்திய கலாச்சாரத்துடன் ஒத்து இருந்தன. ஆனால், அனைத்து விதமான சடங்கு மற்றும் ஆன்மீகம் மற்றும் கொண்டாட்டங்களால் மதம் வளர்ந்தபோது, அது மேலும் ஒன்றாகவும் கலப்பு கலாச்சாரத்தை விடக் குறைவானதாகவும் இருந்தது. தங்கள் மதத்தில் தீவிரப் பற்று கொண்ட கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம்கள் கூட இன்னும் இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையோடு தங்களைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மாற்றாமல், தங்களை இந்தியராக ஐக்கியமாக்கிக் கொண்டனர்.
நாடு அல்லது கலாச்சாரம் அல்லது நமது மாறுபட்ட மரபுகளின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பொருத்தவரை, ‘இந்தியன்’ என்பதற்கான சரியான சொல் ‘இந்தி’. இந்துஸ்தானின் சுருக்கப்பட்ட வடிவமான ‘ஹிந்த்’ என்ற சுருங்கிய வார்த்தையிலிருந்து இந்தியன் என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது. ‘ஹிந்த்’ என்ற வார்த்தை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்காசிய நாடுகளான ஈரான், துருக்கி, ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் இந்தியாவை ‘ஹிந்த்’ என்று தான் இன்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் இந்து என்றே அழைக்கப்படுகிறார்கள். இந்து என்பது மதம் அல்ல; இந்துயிசத்தை மதமாக பின்பற்றுபவர்கள் போலவே, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நம் நாட்டில் இந்துக்களே.
துரதிருஷ்டவசமாக, ‘இந்தி’ என்ற சொல் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துகளுடன் தொடர்புடையதாகிவிட்டது. எனவே, அதனைப் பெரிய அளவில் இயற்கையாக முக்கியத்துவம் கொடுத்துப் பயன்படுத்துவது கடினமாகியிருக்கிறது. இன்று இந்துஸ்தானி என்ற சொல் இந்தியருக்குப் பயன்படுத்தப்படுகிறது. அது நிச்சயமாக இந்துஸ்தானிலிருந்து தான் பெறப்பட்டது.
நமது கலாச்சார மரபுக்கு நாம் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும், இந்தி அல்லது இந்துஸ்தானி என்பது கடந்த காலங்களில் இந்திய தத்துவ கண்ணோட்டத்திலிருந்தே பெறப்பட்டதாகும். இது இந்திய கலாச்சார மற்றும் இன வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்திய அம்சமாகும்.
வெளிநாட்டுக் கூறுகளில் ஒவ்வொரு ஊடுருவலும் இந்த கலாச்சாரத்துக்கு ஒரு சவாலாக இருந்தது. புதிய அணுகுமுறை மற்றும் உற்றுநோக்குதலால் அந்த சவாலை முறியடித்து வெற்றி கண்டோம். இது புத்துயிர் பெறுவதற்கான ஒரு செயல்முறையாகவும், அத்தகைய கலாச்சார செடிகளிலிருந்து புதிய பூக்களும் பூத்தன. எனினும், அதன் பின்னணியும் அத்தியாவசிய அடிப்படையும் அப்படியே உள்ளன”.
நேருவின் இந்த எழுத்து, இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. இந்து மதத்தை தங்களுக்குப் பட்டா போட்டுக் கொண்டதாகச் சொல்லித் திரியும் அழிவு சக்திகளிடமிருந்து தப்பிக்க, நேருவின் இந்த எழுத்துகள் தான் இன்றைக்கும் மக்களுக்கான ஆயுதமாக இருக்கிறது.