இந்தியாவிலும், உலக அளவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தமது அடையாளத்தை விட்டுச் சென்ற ஜவஹர்லால் நேருவை உலகம் எப்போதும் அங்கீகரிக்க மறுக்காது. ஆனால், இதை நரேந்திர மோடி ஏற்கமாட்டார். கடந்த 1964 ஆம் ஆண்டு நேரு மறைந்தபோது, இந்தியாவின் நவீன சிற்பி என அவருக்கு நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டியது. நேரு இல்லாத உலகம் என்ற தலைப்பில் பொருளாதார நிபுணர்கள் கட்டுரை எழுதினார்கள். இது மக்கள் மீது அவர் கொண்டிருந்த மந்திரப் பிடியை நினைவுகூர்ந்ததுடன், பெரிய மனிதர் இல்லாமல் உலக அரங்கம் ஏழ்மையாக இருக்கும் என வருத்தமும் தெரிவித்தனர்.
இந்தியாவில் நேருவைப் பற்றிய கருத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வாழ்ந்தபோது, பொதுமக்களால் வணங்கப்பட்டார். இப்போது அவரை மறக்கச் செய்ய அல்லது அவரது பங்கெடுப்பைக் குறைக்கும் முயற்சி நடக்கிறது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது, பண்டித நேரு இல்லை என்றால் இந்தியா ஜனநாயக நாடாக மாறியிருக்காது என்று நம்மை நம்ப வைக்கக் காங்கிரஸ் முயல்கிறது என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து நேரு நீக்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த தேசிய காப்பகக் கண்காட்சியில் அவரது ஒரு குறிப்பைக் காணவில்லை. நேருவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அனைத்து இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் சிக்கலான இடமாக மாற்ற மத்திய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது சமமான வாய்ப்புகளின் மர்மமான வடிவமாகும்.
நேரு மீது குறிவைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேரு தடை செய்ததும், மதச் சார்பற்ற நாடாகக் கட்டமைத்ததும் இதற்கு முக்கிய காரணம்.
கடந்த 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரில் ஏற்பட்ட தோல்வி, நேருவுக்கு எதிராக மக்களை எளிதாகத் திசைதிருப்ப இவர்களுக்குக் கைகொடுத்தது. நேருவின் அணிசேரா வெவிநட்டுக் கொள்கையும், மாநில திட்டமிடல் குறித்த அவரது நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
அரசியல் ரீதியாக நேருவுக்குச் சிலைகள் அமைத்தும், சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு அவரது பெயரை வைத்ததையும், பொது வாழ்க்கையில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட அவரது படத்துடன் கூடிய விளம்பரங்களையும் நிறுத்திவிட்டனர். இதனையடுத்து, நேரு மாபெரும் மனிதர் என்ற பிம்பத்தை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு அன்று என்ன சொன்னார்? இப்போது, அவர் நாட்டுக்கு என்ன வழிகாட்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள நேருவின் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது. நேரு தன் சுயசரிதைகளில் வெளிப்படுத்தியதைவிட, புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் உரைகள் ஆகியவற்றின் மூலம் எழுதினார்.
2003 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர் எம். பிரவுன், நேரு ஓர் அரசியல் வாழ்க்கை என்ற தலைப்பில் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இதற்கான, பழைய ஆவணங்களை அவரிடம் சோனியா காந்தி வழங்கினார்.
அவரது புத்தகத்தில், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வழக்குரைஞராகி அரசியல் தலைவரான மோதிலால் நேரு மற்றும் அவரது மகன் ஜவஹர்லால் நேரு குறித்துக் குறிப்பிட்டுள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது, பெரும் சவாலாக இருந்த இந்திய மதங்கள் மற்றும் மரபுகள் குறித்து இந்தியக் கல்வியாளர்களுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகளை நேரு வழங்கியது குறித்தும் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார். நேருவின் அரசியல் பார்வை, அவர் படித்த ஹார்வேடு மற்றும் காம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் செதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்த நேரு, சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்த வரலாற்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1921 முதல் 1945 வரை 9 முறை சிறை சென்றவர் நேரு. தமது 23 ஆவது வயதிலேயே அவர் முதல் சிறை வாழ்க்கை தொடங்கியது. மொத்தம் 3,259 நாட்கள் அவர் சிறையில் இருந்தார். அதாவது, கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் 188 புத்தகங்களைப் படித்தார். நிறைய எழுதினார். சிறையில் தான் அவர் அரசியல் முதிர்ச்சி அடைந்தார் என்பதை பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் பல ஆண்டுகளைக் கழித்தாலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். காலணி ஆதிக்கம், நாடுகளுக்கிடையேயான சமத்துவம், நிலச் சீர்திருத்தத்தின் அவசியம், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் மாநில அரசுகளின் குறுக்கீட்டின் அவசியம், நாட்டுக்கு விஞ்ஞானத்தின் அவசியம், பெண்களின் பங்கெடுப்பு, உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வது அவரது லட்சியமாக இருந்தது.
இந்த லட்சியம் அவரை 1930 ஆம் ஆண்டு காங்கிரஸின் தலைவராக உயர்த்தியது. நேருவின் தொடர் போராட்டப் பங்கெடுப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றால் கவரப்பட்ட மகாத்மா காந்தி, நேருவை தமது அரசியல் வாரிசாக அறிவித்தார்.
வகுப்புவாத கலவரம், இந்தியாவில் சேரலாமா, பாகிஸ்தானில் சேரலாமா என்ற ஊசலாட்டத்திலிருந்த காஷ்மீர் பிரச்சினை, இந்திய இளவரசர்களின் எதிர்காலம் என முக்கிய பிரச்சினைகளைக் கையாண்டு கொண்டிருந்த நிலையில், அடுத்த 6 மாதங்களில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையும் பிரவுன் தமது புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
3 முக்கிய நிகழ்வுகள்
சுதந்திர இந்தியாவைக் குடியரசு நாடாக்கியது உள்ளிட்ட 3 முக்கிய நிகழ்வுகள் நேரு தலைமையில் நடந்தன.
- முதலாவதாக, அரசியல் சாசன சபையை அமைத்து, சுதந்திர இந்தியாவின் அதிகாரம் மக்களுக்கே என்று அறிவித்தார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சம அந்தஸ்து மற்றும் அரசியல் வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படும் என இதன் மூலம் உறுதியளிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு 10 கோடியே 73 லட்சம் பேருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இது குறித்து வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா தமது புத்தகம் ஒன்றில் எழுதும்போது, நமது ஜனநாயகத்தின் தலைமைச் சிற்பி நேரு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். நேருவால் கிடைத்த பொக்கிஷங்களான அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், மவுலானா ஆசாத், ராஜாஜி போன்றோர் நாட்டின் அரசியல் கட்டமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினர்.
- இரண்டாவதாக, உலக அளவில் நேருவின் அரசியல் பாதிப்பு அனைவரும் அறிந்ததே. இனவெறிக்கு எதிராக அவரது குரல் ஓங்கி ஒலித்தது. நேருவின் வெளிநாட்டுக் கொள்கை, தனது நாட்டுக்கான தனித்துவம் மற்றும் சர்வதேச அடையாளத்தை உருவாக்கியது.
- மூன்றாவதாக, உள்ளூர் சமுதாய மாற்றத்துக்கு நேரு முக்கியத்துவம் கொடுத்தார். மாநில திட்டங்களே வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், சமமற்ற போக்கைக் களையும் என்றும் நம்பினார். வன்முறை இல்லாத சோவியத் ஒன்றியத்தின் சோசலிஷத்தை இந்தியாவில் கட்டமைக்க நேரு முயற்சித்தார் என்பதை பிரவுன் தமது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.. சுதந்திரத்துக்குப்பின் வறுமை ஒழிப்பில் தீவிரம் காட்டினார். அணு ஆயுதம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
சீனா ஊடுருவல் உள்ளிட்ட சில விசயங்களில் நேருவுக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், மக்களுக்கு உதவவே நேரு விரும்பினார். தனக்காக எதையும் அவர் விரும்பியதில்லை என்று மக்கள் பெருமளவில் உணர்ந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அந்த உணர்வை இழக்கவில்லை.
நேரு தன்னை முழுமையாக இந்தியாவுக்காக அர்ப்பணித்தார். எந்த ஒரு அரசின் பொது நிறுவனத்தையும் நேருவைத் தவிர்த்துப் பார்ப்பது அரிதே. நேருவைக் கொண்டாடுவதற்கும், போற்றுவதற்கும் ஏராளமாக உள்ளன. அவரது பங்கெடுப்பைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது அவரை மறக்கடிக்கச் செய்வது சீரழிவையே ஏற்படுத்தும்.