நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள்
பண்டித நேருவுடன் சர்தார் வல்லபாய் படேலுக்கு இருந்த உறவு எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். பிரிட்டிஷாரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட இந்தியா என்ற தேசத்தை இருவரும் கைகோத்து ஒரு தேசமாக உருவாக்கவேண்டும் என்பது அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வரலாற்றுக் கடமையாக இருந்தது. இந்திய கலாச்சாரத்திலும், அதன் பல அடையாளங்களிலும் படேல் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். நேரு குறுகிய எல்லைகளுக்குள் தம்மை அடைத்துக்கொள்ளாமல் உலக நோக்கத்துடன் செயல்படும் ஒரு தீர்க்கதரிசி.
இதனால், இயல்பாகவே இருவருடைய கருத்துகளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மாறுபட்டது உண்டு. பல விவகாரங்களில் அவர்களிடம் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், தேச நலனுக்காக அவர்கள் இணைந்து ஒருவரையொருவர் மதித்துக் கடைசி வரை செயலாற்றினார்கள். இந்தியாவின் மீது அவர்கள் கொண்ட அன்பும், மகாத்மா காந்தியிடம் அவர்கள் கொண்ட மரியாதையும் இருவரையும் ஒருங்கிணைத்தன.
மகாத்மா கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவர் சர்தார் படேலுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பு அளிக்கும். ‘நேருவிடம் கருத்து வேறுபாடு கொண்டு, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்’ என்பதுதான் அந்த அறிவுரை.
நேருவுக்கும் தமக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்த படேல், தாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு 1950 அக்டோபர் 2ஆம் நாள் இந்தூரில் இப்படித் தெரிவித்தார்: “பண்டித ஜவஹர்லால் நேரு நம்முடைய தலைவர். நேருவை தமது வாரிசாக காந்தியடிகள் நியமித்தார். இந்த ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது தொண்டர்களின் கடமை. இதனை மனப்பூர்வமாக ஏற்கத் தயங்குபவர்கள், கடவுளின் முன்பு பாவம் செய்தவர்களாவர். விசுவாசமற்ற சிப்பாய் அல்ல நான். எந்த இடம் கிடைக்கும் என்பது எனக்கு முக்கியமல்ல. காந்தியடிகள் எந்த இடத்தில் நிற்கச் சொன்னாரோ அந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்.(பியாரிலால், பூர்ணஹுதி, சதுர்த் கந்த், நவ்ஜீவன் பிரகாஷன் − அகமதாபாத், பக்கம் 465)
1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்15ஆம் நாள் படேல் இறந்தபோது, நாடாளுமன்றத்தில் நேரு கூறினார்: “படேல் நம்முடைய விடுதலை இயக்கப்படையின் தளகர்த்தராகச் சோதனைக் காலத்தில் பயனுள்ள அறிவுரைகளைக் கொடுத்தார். வெற்றிபெற்ற நிலையில் நண்பராகவும், உற்ற தோழராகவும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளத் தக்கவராகவும் இருந்தார். அவருடைய தலைமையும், அவர் காட்டும் வழிமுறைகளும் நெருக்கடி காலத்தில் பலவீனப்பட்ட மனிதர்களுக்கு உறுதியான துணையாக இருக்கும்.”
இரு தலைவர்களின் மகத்தான சாதனைகளையும் ஆக்கபூர்வமான நல்லுறவையும் நமது ஒருதலைபட்சமான அணுகுமுறை காரணமாக விமர்சிப்பது, வெட்கக்கேடான செயலாகும்.
சிறப்பான கட்டுரை வாழ்த்துகள் அண்ணா