நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள்
ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947 இல் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1964 வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று நவஇந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய நாளை எப்படி செலவிட்டிருப்பார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
நேரு பொறுப்பு மிகுந்த பல பதவிகளை வகித்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்கமிஷன் தலைவர் போன்ற பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். 1951 முதல் 1954 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
நேரு குளிர் காலத்தில் கூட காலை 6.30 மணிக்கு எழுந்துவிடுவார். (கோடையில் அரை மணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்) அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார். தினசரி பயிற்சி செய்யும் பழக்கம் 1920கள் முதற்கொண்டே அவரிடம் இருந்து வந்தது. உடல் நலத்திற்கு இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்ற அழுத்தமான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.
காலை 7.30 மணி வாக்கில் அந்த நாளின் வல்லமைமிக்க சவால்களை சந்திப்பதற்காக தயாராகிவிடுவார். தன்னுடைய தனி அறையில் தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும், தந்திகளும் அவருக்கு வந்து கொண்டிருந்தன. காலை உணவை எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகாது. உணவு உண்பதற்காக காத்திருப்பது அவருக்கு ஏற்புடைய விஷயமில்லை. வழக்கமாக காலை உணவில் மேற்கத்திய உணவு வகைகளுடன் பழச்சாறு, முட்டை, தானியம், வாட்டப்பட்ட ரொட்டி, காபி ஆகியவை இருக்கும். அவரது மகள் இந்திரா அநேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் விடுமுறைக் காலங்களில் உடனிருப்பார்கள்.
அவருடைய தீன்மூர்த்தி பவன் வீட்டிலிருந்து இறங்கி தரை தளத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு 8.15 மணி அளவில் நேரு வருவார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் சிலர் காத்திருப்பார்கள். 15 நிமிடங்களுக்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்புப் பிராணிகளுடன் சிறிது நேரத்தை செலவிடுவார். அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள கூண்டுகளில் அழகிய தோற்றம் கொண்ட சிறுகரடிகள் இருக்கும். சுற்றிலும் பொலிவுமிக்க அழகிய தோட்டம் இருக்கும்.
டில்லியில் ராஜ்பாத்திற்கு எதிரே ரெய்சானா ஹில் சாலையிலுள்ள செந்நிறக்கற்களால் ஆன தெற்கு வளாகத்தில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் அவர் அமர்ந்திருப்பார். அதன் பின்புலத்தில் குடியரசுத்தலைவர் மாளிகை தோற்றமளிக்கும். இந்தக் கட்டடங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மரபில் உருவானவை. அனைவரது கவனத்தையும் கவரக்கூடியவை.
பாராளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு தன்னுடைய வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். காலை ஒன்பது மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்குப்பிறகு 2.45 முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் அவர் அங்கு இருப்பார். இங்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், வருகைதரும் பெருமக்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களை சந்திப்பார். மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளை கருத்தூன்றிப் படிப்பார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றை அவர் கவனிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் அவரது சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். உண்மையில் இதுதான் தடைப்படாத அவரது அலுவலகப் பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே நேரு குறிப்புகளை எடுத்துக் கொள்வார். நேரடியாக சந்தித்துப் பேசி முடித்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அவருக்கு இது உதவும்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது, அவருடைய வேலைத்திட்டம் இதுபோலத்தான் இருக்கும். ஆனால், அவர் தெற்கு வாசல் செயலகத்திலிருந்து புறப்பட்டு பாராளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவார். கேள்வி நேரமாக இருந்தால் அவர் மதியம் வரையில் அவையில் இருப்பார். முக்கியமான விவாதங்களின் போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். நாளின் எஞ்சிய நேரத்தில் அவர் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி அலுவல்களைக் கவனிப்பார். கூட்டத்தொடர்களின் போது நேரமின்மை காரணமாக அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ, அல்லது மாலையிலோ அவரது இல்லத்தில் நடத்தப்படும். மாலை 6.30 அல்லது 7 மணிக்கு அவர் வீடு திரும்பும் போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும். வந்திருப்பவர்களை ஒவ்வொருவராக அழைத்து பேசி அனுப்பிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.
இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒரு சில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்கவியலாது போன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்திற்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் இரவு 10.30 மணிவரை அவர் அங்கிருப்பார். மாலையில் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 மணி வரை அவர் கலந்து கொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் அவர் வீட்டில் உள்ள தனது அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ அங்கு பணி புரிவார்.அவருடனான உரையாடல்கள் அனைத்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர் பொறுமை இழந்து ‘அன்புடையீர், உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பதற்கு எனக்கு வாழ்நாள் போதாது” என்று சொல்லிவிடுவார்.ஏற்றுக்கொள்ள முடியாதவற்றிற்கு அவர் ஆற்றும் முதல் எதிர்வினை வெடித்துக் கிளம்பக்கூடியதாக இருக்கும். ஆனால், அதனை நீங்கள் தாங்கிக் கொண்டுவிட்டால் அவர் அமைதியாகி, நீங்கள் சொல்வதைக் கேட்பார். பெரும்பாலான தருணங்களில் இறுதியில் அவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் செய்வார். ஏற்கமுடியாதனவற்றை தனிப்பட்ட முறையில் தனக்கு எதிரானதாக அவர் எடுத்துக்கொள்ளமாட்டார்.
அவருக்கு விருப்பமில்லாத ஒன்று நடக்கும் போது, நேரு தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவார். படபடவென்று பொரிந்து தள்ளிய பிறகு, உடனடியாக அவர் அமைதியாகிவிடுவார். ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான தன்னைச் சேர்ந்தவர்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வைக் கண்டுவிடுவார்கள் என்று அவர் உணர்ந்து கொள்வார். அவர் ஒருபோதும் யாரையும் குறை கண்டுபிடித்து ஓயாது தொல்லை கொடுத்ததில்லை.
டில்லியில் அடிக்கடி அவர் பொதுமேடைகளில் பேசுவார். சுற்றுப்பயணம் செல்லும் போது தேவையின் காரணமாக பயணத்திட்டம் நெகிழ்ச்சியாக இருக்கும். இருந்தபோதிலும், பணிச்சுமை அடிப்படையில் வேறுபட்டதாக அமைந்திருக்காது. அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தேவையை நேரு ஏற்றுக்கொண்டபோதிலும், சம்பிரதாயங்கள், ஒப்புக்குரிய நடைமுறைகள் போன்றவற்றிற்கு அவர் எதிரானவராகவே இருந்தார். பக்ராநங்கலில் அணிவகுப்பு மரியாதை செய்த ஒருவர், சம்பிரதாய முறைப்படி ஊதுகொம்புடனும், துப்பாக்கியுடனும் வந்து நேருவுக்கு மரியாதை தெரிவிக்க முற்பட்டார். பண்டித நேரு இதனை விரும்பவில்லை. கோபம் கொள்ள இருந்தார். பாதுகாப்பு உயர் அதிகாரி இதனைப் புரிந்துகொண்டு அணிவகுப்பைக் கலைக்கும்படி ஆணையிட்டு நிலைமையைச் சமாளித்தார்.
நேருவின் பெருவலிமை
நேருவின் பெருவலிமை பற்றி காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா உறுதிபடக் கூறியது:
‘நேரு தனது வலிமை பற்றி பெருமிதம் கொள்வார். எனக்கு தலைவலிக்கிறது என்று ஒருமுறை நான் நேருவிடம் சொன்ன போது, தலைவலி என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் ஒரு நாளும் எனக்குத் தலைவலி வந்ததே இல்லை’ என்று அவர் என்னிடம் கூறினார். அவர் ஒருபோதும் மின் தூக்கியைப் பயன்படுத்தியதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படிகளைத் தாவி ஏறி தனது வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு அவர் செல்வது வழக்கம். அவரோடு சேர்ந்து செல்லும் போது ஒரே நேரத்தில் இரண்டு படிகளை ஏன் கடக்க வேண்டும்? ஒவ்வொன்றாக ஏறினால் போதாதா? என்று நான் கேட்டேன். எரிச்சலடைந்தது போல் என்னைத் திரும்பிப் பார்த்து சொன்னார். ‘என்னை வயதானவன் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?’ ஆயினும், காலம் அவரைக் காவு வாங்கிவிட்டது. பல ஆண்டுகாலக் கடும் உழைப்பு, மன அழுத்தம், கடுமையான முயற்சிகள், வசதியற்ற மோசமான சிறைகளில் நீண்டகால சிறைவாசம் போன்றவை அவரை உடல் ரீதியாகப் பாதித்துவிட்டன. போரில் வெற்றிகண்ட பின்னரும் அவருக்கு ஓய்வு என்பதே இல்லை.
தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைப்பார். ஒரு சில சமயங்களில் இரவு 11 மணிக்குமேல் எனது வீட்டிற்குத் தொலைபேசியில் அழைப்பார். அவசரமான பிரச்சினைகள் பற்றிப் பேசவேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பார். அந்த நேரம் அவரது கணக்குப்படி வேலை நேரத்திற்குள் அடங்கும். அவருக்குப் பிடித்தமான ராபர்ட் ப்ரோஸ்ட் கவிதையின்படியே அவர் வாழ்ந்தது போலத் தோன்றுகிறது:” இருளும் நீள்நெடு ஆழமும் கொண்ட அழகிய காடு – ஆனால், நிறைவேற்றவேண்டிய பணிகள் என்னிடம் இருக்கின்றன. உறங்கும் முன் பல மைல் தூரம் நான் பயணித்தாக வேண்டும்.
நேருவின் தனிச்சிறப்பு குறித்து எச்.வி.ஆர். அய்யங்கார்:
‘நேருவின் நம்பிக்கைகள், உறுதிப்பாடுகள் அனைத்தும் துண்டு துண்டாகச் சிதறி நொறுங்கிப்போனதாக அவர் நினைத்திருக்கக்கூடிய அந்த நாளைப்போன்ற இன்னொரு நாளை கற்பனையில் கூட என்னால் காண முடியவில்லை. நாங்கள் லாகூரிலிருந்து இரவு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்திருந்தோம். இரவு உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டோம். அதனூடேயேபாகிஸ்தான் அமைச்சர்களுடன் அடுத்த நாள் பகல் பொழுதில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் பற்றிக் கலந்து பேசியிருந்தோம். நள்ளிரவு நெருங்கும் போது நாங்கள் கலைந்து சென்றோம்.
நான் சோர்ந்துபோய் படுக்கைக்குச் சென்றேன். சில சிரமங்களுடன் மறுநாள் காலை சீக்கிரமாக 6 மணிக்கு எழுந்து விமான நிலையம் செல்வதற்குத் தயாரானேன். கடிதங்கள், தந்திகள், பிரதமர் கொடுத்திருந்த நினைவுக் குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஒரு குவியலை உதவியாளர் என்னிடம் காட்டினார். அனைவரும் சென்ற பிறகு இந்தக் குறிப்புகள் அனைத்தும் தன்னிடம் கொடுக்கப்பட்டதாக அவர் என்னிடம் கூறினார். பிரதமர் இரவு 2 மணிக்குத்தான் தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கே அவர் எழுந்து தயாராகிவிட்டார்.
அன்றைய வேலைத்திட்டம் ஒரு சிறிது வித்தியாசமாக இருந்தது. 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் கடந்த 13 ஆண்டுகளாகத் தினமும் அவருடன் பணி செய்திருக்கிறோம். அவருடைய பணியாளர்கள் அவரை விடவும் இளமையானவர்கள். ஆனாலும் அவரது வேகத்திற்கு அவர்களால் ஒருபோதும் ஈடுகொடுக்க முடியவில்லை. 70 வயதான மனிதரின் தனித்தன்மையான ஆற்றலுக்கு என்ன காரணம்?
அவருடைய தனிச் சிறப்புடைய உற்சாகம் பற்றி அறிந்து கொள்ளாமல், அவர் பணிபுரியும் நுட்பம் பற்றிய விவாதம் எதையும் தொடங்க முடியாது” என்று கூறுகிறார் பிரதமர் நேருவின் செயலாளர்.