குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை நினைத்துத்தான் அவர் இவ்வாறு வேதனைப்படுகிறார்.
தேசியக் கொடி பட்டொளி வீசிக் கொண்டிருந்தபோது, அதன் அருகில் கொடி ஏதும் இன்றி நின்றிருந்த கம்பத்தில் தான் நிஷான் ஷாஹிப் மதக் கொடியை ஏற்றினார்கள். அது காலிஸ்தான் கொடியல்ல என்பதும் பின்னர் உறுதியானது. அந்த கம்பத்தில் கொடி ஏற்றியவர்கள் அதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
அந்தக கொடியை ஏற்றிவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டவர் யார் என்பதும், அவர் ஆளும் கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதும் இந்த உலகத்துக்கே தெரியும். அந்தக் கொடியை ஏற்ற தூண்டுதலாக இருந்தவரின் பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மனது புண்படும் அளவுக்கு தேசியக் கொடியை அவமதித்தது யார் என்பதை அறிந்து கொள்வது நாட்டின் தேவையாகும்.
சீக்கிய சமுதாயத்திலிருந்து யாரோ ஒருவர் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார் என்பதால், ஒட்டுமொத்த சீக்கியர்களையும் தேசவிரோதிகள் என்று காட்ட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?. சீக்கிய சமுதாயத்திலிருந்து சிறந்த விவசாயிகளும், கடமை உணர்வு கொண்ட ராணுவ வீரர்களும் உள்ளனர். ராணுவத்தில் பணியாற்றுவோரில் சீக்கியர்களே அதிகமாக உள்ளனர்.
அவசரத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைச் சீக்கியர்கள் எதிர்ப்பதாலேயே, அவர்களது தேச பக்தியை இழிவுபடுத்த முடியாது.
எத்தனையோ தடைகள் இருந்தாலும், டெல்லி எல்லையில் விவசாயிகளின் நீண்ட மற்றும் அமைதியான போராட்டம் நீதி கேட்கும் போராட்டமாக மாறியுள்ளது. போராடும் சீக்கிய விவசாயிகளை, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் தேசவிரோதப் பிரிவினைவாதிகள் என அழைப்பது மூர்க்கத்தனமானது. கடல் போன்ற விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊடுருவியிருக்கலாம். அதேசமயம், இந்த போராட்டத்தில் அந்நிய உளவாளிகள் இல்லை என்பதை உயரதிகாரிகளால் சொல்ல முடியுமா?
மதவெறியர்களை விட அரசியல் ரீதியாகப் பஞ்சாப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டே அறிவிப்புகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்ற சட்ட ரீதியான உறுதி. மற்றொன்று, அம்பானி, அதானி கைக்கு விவசாய உற்பத்தி போவது உண்மையில்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டிய அரசின் கடமை.
இந்த இரண்டு உறுதிமொழிகள் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஓர் ஆட்சியாளர் தனது சொந்த மக்களிடமிருந்து தன்னைத் தடுத்து நிறுத்த ஆழமான அகழிகளைத் தோண்டி, கான்க்ரீட் தடுப்புகளைக் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களைக் கொலையாளிகளைப் போல் நடத்தவேண்டிய அவசியமில்லை.
குடியரசுத் தினத்தன்று நாம் கண்ட கொந்தளிப்பான காட்சிகள் அதிகம் என்பதால், 2 மாதங்களுக்கும் மேலாக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளுக்கு நாம் நம்பகத்தன்மையை வழங்க வேண்டும்.
அமைதியான டிராக்டர் பேரணி நடைபெறுவதற்கு முன்பே, டெல்லிக்குள் நுழைந்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நேர்மையை நிலைநாட்ட வேண்டியது காவல் துறையினரின் கடமை. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. சமீபகாலங்களில் எத்தனையோ கடுமையான எதிர்ப்புகளை இந்தியா கண்டுள்ளதைச் சமகால வரலாறு மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை மக்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை.
அவமதிக்கப்படாத தேசியக் கொடிக்காக வருந்தும் நரேந்திர மோடி, தங்களது ஆசான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசியக் கொடியைக் கொடியை எவ்வாறு எல்லாம் அவமதித்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த மூவர்ணக் கொடியின் வண்ணம், மோசமான உளவியல் விளைவை ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் இயக்கம் கூறியது. மூன்று என்ற சொல் தீமையின் அடையாளம் என்று விமர்சித்தனர்.
3 என்பதில் இந்துயிசத்தின் கோட்பாடுகளும் அடங்கியிருக்கின்றன. திரிசூலம், மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரும் இந்த மூன்றில் அடங்கியுள்ளனர். இதையெல்லாம் தீமை என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் சொல்லுமா?
மோடியின் குருநாதரும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவருமான எம்.எஸ். கோல்வல்கர், ” சுதந்திர இந்தியாவின் புதிய கொடியைத் தலைவர்களாகிய நாங்கள் உருவாக்குவோம் என்றார். பழமையான நம் நாட்டுக்கு சொந்தக் கொடி இல்லையா? தேசிய சின்னம் இல்லையா?. சந்தேகமின்றி நிச்சயம் இருந்தது என்று கோல்வல்கர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, காவிக் கொடியை தேசியக் கொடியாக உருவாக்க வேண்டும் என்பதே கோல்வல்கரின் எண்ணமாக இருந்தது.
நிலைமை இப்படியிருக்க, விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக மோடி பதறுகிறார்.
தேசியக் கொடிக்கு எதிரான எதிர்ப்பைக் கைவிட கோல்வல்கரை சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார். அதற்குப் பரிகாரமாக ஆர்எஸ்எஸ் மீதான 18 மாத தடையை நீக்குவதற்கும், அதன் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இந்த கோரிக்கையை வைத்தார். இந்த விஷயம் மோடிக்குத் தெரியாதா?
எனவே, தேசியக் கொடியை அவமதிப்பது காயப்படுத்துகிறது என்பதை இந்தியாவும் இந்தியர்களும் தீர்மானிப்பது தான் புத்திசாலித்தனம். இங்கு நீலிக்கண்ணீருக்கு இடமில்லை என்பதைப் பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.