கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதியை (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாண நிதி) பிரதமர் மோடி தொடங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பிஎம் கேர்ஸ்
நிதி தொடங்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.
மறுநாளே, எல்லா பக்கங்களிலும் இருந்தும் நன்கொடை கொட்டியது. இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் எவ்வளவு பணம் பிஎம் கேர்ஸுக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?
‘இல்லை’ என்பது தான் பதில்.
அதனால் நாம் கேட்கிறோம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸ் நிதி ஏன் வரவில்லை?
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, இது அறக்கட்டளை, அரசுக்குட்பட்டதல்ல என்று பதில் வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்கும் விடை தேடினோம்.
அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவின் கீழ், உருவாக்கப்படும் எந்த ஓர் அமைப்பும் அரசு என்று கருதப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.
இதன்படி, பிஎம் கேர்ஸ் நிதியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் :
1. பிஎம். கேர்ஸ் பிரதமரால் தொடங்கப்பட்டது என்பதால், இது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். பிரதமரின் நிவாரண நிதி, பிஎம். கேர்ஸ் இரண்டுக்கும் பிரதமரே தலைவர் என்பதால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிஎம் கேர்ஸும் வரும்.
2. பிஎம்.கேர்ஸை பிரபலப்படுத்த அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடைகளும் பெறப்பட்டன. பிஎம். கேர்ஸ் அறக்கட்டளையாக இருந்தால், இவ்வாறு அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்படுமா? எந்த அறக்கட்டளையாவது நன்கொடை கேட்டு இந்திய தூதரகத்தின் இணையத்தில் விளம்பரம் கொடுத்திருக்குமா?
3. அறக்கட்டளையாக இருக்கும் பட்சத்தில், அரசின் இணைய முகவரியை பயன்படுத்தியது ஏன்? அரசின் 6 வகையான அலுவலகங்களுக்கு மட்டுமே இணைய முகவரி பயன்படுத்தப்படுகிறது என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
அவை…
* குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் அலுவலகம்
* அமைச்சர்கள் அல்லது அரசுத் துறைகள்
* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள்
* இந்திய நாடாளுமன்றம்
* நீதித்துறை
* சட்டசபை மற்றும் அரசு நிறுவனங்கள்
இந்த நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் வராத, அறக்கட்டளையான பிஎம் கேர்ஸ் நிதிக்கு அரசு இணைய தள முகவரியை எப்படி பயன்படுத்த முடியும்?
4 . பிஎம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்தால், 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு, அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5. சிஎஸ்ஆர் எனப்படும் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியை பெறும் வகையில், மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பல கோடிகளை பிஎம். கேர்ஸ் நிதிக்கு கொடுத்தன. பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை கொடுத்த பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும்போது, நன்கொடையை பெற்றுக் கொண்ட பிஎம்.கேர்ஸுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாதா?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிஎம் கேர்ஸ் நிதி குறித்த பதில் கிடைக்கவில்லை. முற்றிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றே இதற்கு அர்த்தம். மக்கள் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளனர், அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியாது.
இது சரியா? நிச்சயம் இல்லை!
“பிஎம் கேர்ஸ் நிதி விசயத்தில் ரகசியமும் மர்மமும் தொடர்கிறதே ஏன் ?”
‘விடை’ தேடி தொடர்கிறது இந்த கேள்வி.