கொரோனா பரவலையடுத்து, பொது முடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்தபிறகு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேலை இழந்து பசியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையைத் திரும்பத் தர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மட்டும் கடந்த 6 மாதங்களாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி வரை சம்பாதித்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 63 வயதான முகேஷ் அம்பானி 9 ஆவது முறையாக முதல் இடத்தைப் பெற்றார். ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடிகளாகும். இந்த அறிக்கையில், பொது முடக்கத்துக்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடிகளை முகேஷ் அம்பானி சம்பாதித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள 5 பணக்காரர்களுக்கும் இடையேயான வித்தியாசம் அதிக அளவில் உள்ளது. சமீபத்தில் தான், உலகின் 5 ஆவது பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், அதாவது, பொது முடக்கத்துக்குப் பிறகு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூ. 13 ஆயிரத்து 248 கோடிகள் லாபம் ஈட்டியது.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, அம்பானியின் சொத்து மதிப்பு 28 சதவீதமாகக் குறைந்து ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கோடிகளாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து நிதி திரட்டல் மற்றும் முகநூல், கூகுள் நிறுவனங்களின் முதலீடு காரணமாக சொத்து மதிப்பு 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல், அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பும் ஆசியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.