இந்த வாரத்தில் உலகின் 5 ஆவது பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுக்கிறார்.
– இதுதான் இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகப் போகிறது.
நாட்டு மக்களின் சமமற்ற வளர்ச்சி உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் மட்டும்தான் கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடம் சமமான வளர்ச்சி இருக்கிறது.
ஓக்ஸ்ஃபாமின் ‘டைம் டு கேர்’ அறிக்கையில், ”இந்தியாவில் 95 கோடியே 30 லட்சம் மக்கள் அடித்தளத்தில் இருக்கிறார்கள். அதேசமயம், 1 சதவீதம் கொண்ட பணக்காரர்கள் 4 மடங்கு சொத்துகளை பெற்றிருக்கிறார்கள்” என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
63 இந்தியர்களின் சொத்து மதிப்பை ஒப்பிடும்போது, 2018-19 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைவிட அதிகமாகும்.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விதிக்கப்படும் வரி, அவர்களுக்கு ‘மயில் இறகால்’ வருடிக் கொடுத்தது போல் இருக்கும். அதேசமயம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது விதிக்கப்படும் வரி, ‘தேள் கொட்டியது’ போல் இருக்கும்.
பணக்காரர்களையும், ஏழை, நடுத்தர மக்களையும் மத்திய அரசு அணுகும் முறை இதுதான்.
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அத்தியவாசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது.
பொருளாதார மந்தநிலையிலும், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான், உலக பணக்காரர்கள் வரிசையில் 5 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃப்பெட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முகேஷ் அம்பானி 5 ஆவது இடத்தை இந்த வாரம் பிடிக்கப் போவதாக உலகப் பணக்காரர்களை பட்டியலிடும் ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முகேஷ் அம்பானியிடம் இந்திய மதிப்பில் ரூ. 5 கோடியே 61 லட்சம் அளவுக்கு சொத்து இருப்பதாக ‘ஃபோர்ப்ஸ் ‘இதழ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மட்டும் அம்பானியின் சொத்து ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளதையும் ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய பணக்காரர்களின் இது போன்ற திடீர் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், ஊரடங்கால் வேலையிழந்தோருக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கினால் போதும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சுகாதாரத்துறைக்கான இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ரூ.69 ஆயிரம் கோடியாகும். கல்விக்கான பட்ஜெட் 1 லட்சம் கோடிக்கு குறைவாக உள்ளது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில், ”வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் 22 ஆயிரத்து 277 ஆண்டுகளில் சம்பாதிப்பதை, தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ஒரே ஆண்டில் சம்பாதிக்கிறார். தொழிலாளர் ஒருவர் ஓராண்டில் சம்பாதிப்பதை, தலைமை செயல் அதிகாரி 10 நிமிடத்தில் சம்பாதிக்கிறார்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமமற்ற பொருளாதார வளர்ச்சி நம் நாட்டில் அரசியல் அல்லது மக்கள் பிரச்சினையாக இன்னும் மாறவில்லை.
திரைப்படம், டிவி. சீரியலை செல்போனிலேயே அதிகம் பார்ப்பவர்கள் இந்தியர்கள் என்ற உலகின் மோசமான புள்ளிவிரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைய முடியாத நிலைதான் உள்ளது.
அதேசமயம், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் அரசு ஏன் உழைக்கிறது என்பது தேர்தல் பிரச்சினையாக மட்டும் மாறவில்லை, மக்கள் மத்தியில் கேள்விகளாகவும் உருவெடுத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அரசு செய்யும் வீண் செலவுகளை அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. ஆனால், பாதுகாப்புத் துறைக்கான செலவை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சான்டர்ஸ் கேள்வி எழுப்பியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதே போன்று தங்கள் தலைவர்களை நோக்கி இந்தியர்கள் எப்போது உரத்த குரலில் கேள்வி எழுப்பப் போகிறார்கள்?.
சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் எரிசக்தி துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்று இந்தியர்கள் நீண்ட காலம் காத்திருக்க முடியாது. இந்த துறைகளுக்கான செலவை உடனே அதிகப்படுத்த வேண்டும்.
”சில இந்தியர்களின் பேராசையை நிறைவேற்றினால் போதுமானது அல்ல, ஒவ்வொரு இந்தியனின் தேவையை நிறைவேற்றினாலேயே போதும்” என்ற மகாத்மா காந்தியின் வரிகள் தற்போதும் பொருத்தமானதாக இருக்கிறது.
இந்தியாவில் சமமற்ற வளர்ச்சி மட்டுமல்ல, பணக்காரர் பணக்காரராக உயர்ந்து கொண்டே போகிறார். ஏழை பரம ஏழையாகி தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை!
இந்த நிலையில் தான், முகேஷ் அம்பானி உலகிலேயே 5 ஆவது பணக்காரராக இந்த வாரம் உருவெடுக்கப் போகிறார். இந்த செய்தி மோடிக்களுக்கும், சில ஊடகங்களுக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கலாம்.
ஆனால்…! ஊரடங்கால், தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியனுக்கு?