இந்தியாவின் பலத்தில் தங்களது பங்களிப்பும் இருப்பதாகப் பல இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.
நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. 22 வயது கல்லூரி மாணவியை வீட்டுக்குள் புகுந்து கைது செய்கிறது டெல்லி காவல் துறை. எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்தி அவர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குற்றச்சாட்டு. கைது செய்யப்பட்ட திஷா ரவி அரசியல்வாதியல்ல. எந்த கட்சியையும் சார்ந்தவரும் இல்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போதுமான அறிவு கொண்ட இளம்பெண் அவ்வளவுதான். தாங்களும் இந்தியாவின் பலம் என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனால்,அந்த இளைஞர்களை, மாணவர்களைச் சிறையில் தள்ளி அச்சுறுத்துவது தேவை தானா?
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ” மவுன்ட் கார்மெல் கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றால், இந்தியாவின் அடித்தளம் ஆடிப்போயிருக்கிறது என்று அர்த்தம். இந்தியா அபத்தமான நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார். காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறும்போது, ”சமூக செயற்பாட்டாளர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், தீவிராதிகள் எல்லாம் பெயிலில் இருக்கிறார்கள்” என்றார். மக்கள் ஆதரவு குறையும்போது ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறார்கள். மிகவும் எதேச்சதிகாரமான 10 நாடுகள் பட்டியலில், இந்தியாவையும் சுவீடனின் வி-டெம் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஊடகங்கள், மக்கள் சமுதாயம் மற்றும் எதிர்க்கட்சிகள் மோசமாக ஊசலாடிக் கொண்டிருப்பதால், ஜனநாயக நாடு என்ற தகுதியை இந்தியா இழந்து வருகிறது. இது குறித்து ‘டைம்’ இதழ் எழுதும்போது, ”நரேந்திர மோடியின் இந்தியா, ஒரு ஜனநாயக ரீதியிலான நாடு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எவ்வளவு காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. வெறுக்கத்தக்கப் பேச்சு பரவலாக உள்ளது. அமைதியான கருத்து வேறுபாடு குற்றப்படுத்தப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் புதிய தடைகளை எதிர்கொள்கிறது. அரசியல் வாதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களால் சிறைகள் நிரப்பப்படுகின்றன. இந்தியா வளருவதை உலகம் நம்புவது கடினம். நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக கட்சி தொடங்கப்படும் என அமித்ஷாவின் மூளையில் உதித்ததை, திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் சமீபத்தில் பொதுவெளியில் தெரிவித்திருந்தார். இரு நாடுகளிலும் பாஜகவைத் தொடங்க அமித்ஷா உறுதி அளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருபுறம் வங்காள தேசத்தையும் மறுபுறம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை கைப்பற்றும் திட்டத்தை, அமித்ஷா ஏன் விரும்பவில்லை என்பது மர்மமாக உள்ளது. பாஜகவின் எழுச்சியூட்டும் வண்ணங்களின் கீழ், அவர்களும் வளரவேண்டும் என அமித்ஷா விரும்பவில்லையா?
சுபாஷ் சந்திர போஸ், பிஆர்.அம்பேத்கர் மற்றும் சர்தார் படேல் ஆகியோரது பெயர்களை, முன்பு ஆண்ட அரசு எந்த இடத்துக்கும் சூட்டவில்லை என்று மற்றவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் கோரஸ் பாடுகிறார். எதுவுமே தெரியாமல் பேசி வியப்பின் அளவை அதிகப்படுத்துகிறார் மோடி. இந்தியாவில் நேதாஜி சாலை, அம்பேத்கர் சிலைகள் இல்லாத இடமே இல்லை. சுபாஷ் சந்திர போஸ் அளவுக்கோ அல்லது அம்பேத்கர் அளவுக்கோ படேல் பிரபலமானவர் இல்லை என்றாலும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தெருக்களுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, தன் வாதத்தையே மோடி பலவீனப்படுத்துகிறார். தான் எதைச் சொன்னாலும் இந்த நாடு கேட்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். மோடியின் புதிய நகர்வுகள், உலகின் பார்வையில் அவரை சுயநலமுள்ள, எதேச்சதிகார தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு நல்லதைவிட தீங்கு செய்கிறார். திஷா ரவி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது, இந்தியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்களை உலகமே கவனித்தது என்பதில் சந்தேகமில்லை. திஷா ரவி கைது செய்யப்பட்டது அடிப்படை உரிமையை மீறும் செயல் என, பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் கூறின. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கான மிரட்டல் தான் திஷா ரவி கைது. ஹரியானாவைச் சேர்ந்த பயங்கரவாதி உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது,” தேசத்துரோக விதைகள் அழிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். தேச விரோதத்தை சரியாக அர்த்தப்படுத்தினால், அந்த பட்டியலில் முதல் நபராக அனில் விஜ் இருப்பார்.
திஷா ரவி கைது செய்யப்பட்டதும் நடந்த போராட்டங்கள், மக்களின் உணர்வுக்கும் பாஜக உணர்வுக்கும் இடையே இடைவெளி இருப்பதை உணர்த்தியது. திஷா ரவி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெங்களூருவில் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் திரண்டு வந்தனர். இதுபோன்ற கைது நடவடிக்கையை, மோடி அரசின் பாதுகாப்பற்ற மற்றும் பித்துப்பிடித்துப்போன உணர்வின் அடையாளமாகப் பலரும் பார்த்தனர். மக்களை மோடி அரசு எப்படி எல்லாம் நசுக்குகிறது என்பதை டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் திஷா ரவியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர். எல்லா திசைகளிலும் மோடிக்கு இழப்பே ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமுறை இளைஞர்கள் சர்வாதிகார ஆட்சியை அனுபவிக்க நேரிட்டாலும், இந்த விளையாட்டின் இறுதியில் மக்களே வெற்றி பெறுவர். இப்போதும் களத்தில் இருக்கும் கேள்வி இதுதான்.
”மோடியா? மக்களா?”
அடடா! என்னவொரு உச்சகட்ட எதிர்மறைக் காட்சி.