கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, விவசாயிகளுடனான உறவு குழப்பமாகவும், கோளாறாகவும் இருக்கிறது.
கடந்த 2 மாதங்களாக 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடும் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகளைச் சமாதானப்படுத்த, கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி மற்றொரு முயற்சியை மேற்கொண்டார்.
என்னை விவசாயிகள் நம்பவேண்டும். காசியில் உள்ள புனித நதியான அன்னை கங்கையின் பக்தன் என்ற முறையில் எனது விவசாய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்குச் சொல்கிறேன், என் அரசு மற்றும் எங்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். புதிய விவசாயச் சட்டங்களால் விவசாயிகள் மத்தியில் நிலவும் பயத்தையும் பிரதமர் மோடி ஒத்துக் கொண்டார்.
உண்மை என்னவென்றால், 86 சதவீத பணத்தைச் செல்லாது என அறிவித்த நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான இந்தியர்கள் அவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது தற்போது நிரூபணமாகியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்படுமோ அல்லது கொள்முதல் செய்வது குறைந்து போகுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை வைப்பதோ அல்லது வைக்காததோ இங்கு பிரச்சினை இல்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு மரியாதை தரவேண்டும் என்பது தான் முக்கிய விஷயம்.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று வெறும் வாயில் உறுதி கூறுவதால் விவசாயிகள் போராட்டம் நின்றுவிடும் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எண்ணுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் அடிப்படையில் கொள்முதல் தொடரும் என பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் அளிக்கும் வாய் வழி உறுதியை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை.
இது குறித்து களத்தில் போராடும் விவசாயி ஒருவர் கூறும்போது, ”குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என அரசு கூறுகிறது. 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். செய்தார்களா?. கருப்புப் பணத்தை மீட்போம் என்றார்கள். எங்கே செய்தார்கள்?. இந்திய எல்லையைச் சீனா நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளது. என்ன செய்துவிட்டார்கள். அரசின் சாதனையை மட்டும் சொல்லும் ஊடகங்கள், அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் சொல்ல வேண்டாமா?
ஒட்டுமொத்த பொய்யின் உருவமாக அரசு உள்ளது. மோடி அரசை நம்புவது, உங்கள் கழுத்தை நீங்களே நெரித்துக் கொள்வது போன்றது” என்றார்.
இந்த நம்பிக்கையின்மை குறித்த இந்த உணர்வு பெரும்பாலான விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளால் 2 மாதங்களுக்கு மேலாக பிரதிபலிக்கப்பட்டு வருகிறது. அரசை, விவசாயிகள் நம்பாமல் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்தபின்பு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளும், விவசாயத்தைப் பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட சில ஏமாற்றுத் திட்டங்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன…
சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமல்படுத்தல்:
2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய மக்களவைத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 50 சதவீத லாபம் வரும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றியமைக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். 2006 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் முக்கிய அம்சமான இது நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசின் விவசாய செலவு மற்றும் விலை ஆணையம் எப்படி நிர்ணயிக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்…
உற்பத்திச் செலவை 3 வகைகளாக இந்த ஆணையம் கணக்கிடுகிறது. ஏ2 (பயிர் உற்பத்திக்கு ஆன செலவு), ஏ2+எஃப்எல் (பயிர் உற்பத்தி செலவு மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு), சி 2 (சொந்த நிலம் மற்றும் மூலதனத்தின் மீதான வாடகை மற்றும் வட்டி உள்ளிட்ட விரிவான செலவு).
தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வாக்குறுதி அளித்தபோது, ஏ2 மற்றும் ஏ2+எஃப்எல் வகையினர் குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் ஏற்கனவே 50 சதவீதத்துக்கு அதிகமான லாபத்தைப் பெற்றுவந்தனர். எனவே, சி2 வகையை மட்டுமே மோடி வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தேர்தல் வாக்குறுதியின்படி 3 வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் 50 சதவீதம் லாபம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கடந்த திங்கள் கிழமை வாரணாசியில் பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறார்.
சி2 வகைப் பயிர்களைவிட முக்கியப் பயிர்களான நெல்லுக்கு 12 சதவீதமும், கோதுமைக்கு 34 சதவீதமும் மட்டுமே கூடுதலாக லாபம் கிடைக்கிறது. மேலும், மற்ற பயிர்களை விட 50 சதவீதத்துக்கும் மிகக் குறைவாக லாபம் கிடைக்கிறது.
பயிர்களுக்கான செலவு மற்றும் விலையை மத்திய அரசின் விவசாய செலவு மற்றும் விலை ஆணையம் கணக்கிடுவதற்கு, மத்திய பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தங்கள் மாநிலங்களில் பயிர் உற்பத்திக்கு ஆகும் செலவைவிட, இந்த கணக்கீடு மிகவும் குறைவு என்பது பாதிக்கப்பட்ட மாநில அரசுகளின் வாதமாக இருக்கிறது.
புதிய விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரும் முன், சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி அதிக லாபம் தரக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்திருக்க வேண்டும் என்பதுதான் நாடு முழுவதும் உள்ள விவசாய இயக்கங்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
நீர்ப்பாசனத் திட்டங்கள்:
கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களையும் குறைந்த நீரில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி மாந்த்ரீ கிரிஷி சிஞ்சாய் யோச்னா திட்டம் தொடங்கப்பட்டது. நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்தி, இந்திய விவசாயிகள் மழையை நம்பி இருக்கும் நிலையைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்த திட்டத்தின் இணையதளத்தைப் பார்க்கும்போது, திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகும் 58 சதவீத பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குழு வெளியிட்ட அறிக்கையில், பிரதான் மந்திரி மாந்த்ரீ கிரிஷி சிஞ்சாய் யோச்னா திட்டம் 10 சதவீதம் மட்டுமே நிறைவுபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது, 2020 வரை ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும் என மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாநில அரசுகள் ரூ.32 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளன. மத்திய அரசின் பங்கு ரூ. 8 ஆயிரம் கோடிதான். மீதத் தொகையை மாநில அரசுகள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீர்ப்பாசனத்தை அதிகரிப்பது இந்திய விவசாயத்தின் முக்கியத் தேவையாகும். நாட்டின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களது வாழ்வாதாரத்து முக்கியமானது மழை. அதனால் தான் மழையை உண்மையான நிதியமைச்சர் என்று அழைப்பதுண்டு. இந்தியாவில் 34 சதவீத நிலங்கள் மட்டுமே பயிரிடப்படும் நிலங்களாகும். 2017-18 ம் நடத்தப்பட்ட சர்வேயின்படி, நீர்ப்பாசனத்தை மேம்படுத்தாவிட்டால், பருவநிலை மாற்றம் பயிரிடும் மொத்த நிலப்பரப்பின் அளவை 25 சதவீதமாகக் குறைத்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு:
பிரதமரின் ஃபசல் பிமா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த புதிய திட்டம் தற்போதுள்ள திட்டங்களின் நிறைகளை எடுத்துக் கொண்டு, குறைபாடுகளைக் களையும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தின்படி பயிர்க் காப்பீட்டுச் சந்தையில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் திட்டத்தில் விவசாயிகளைக் கட்டாயமாகச் சேர்த்து, அவர்களுக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கப்பட்டது. இன்சூரன்ஸ் ப்ரீமியம் விவசாயிகளின் கடன் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டம் படுதோல்வியடைந்ததோடு, விவசாயிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. இதனால் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் அறிக்கையில், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு ஏற்றவாறு மாற்றப்படும் என்று அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
விவசாயிகளின் காப்பீட்டுக் கோரிக்கைகளைத் தாமதமாக நிறைவேற்றியதே, இந்த திட்டத்தின் முக்கிய பிரச்சினை. இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் பிரச்சினைகளை இறுதி அறுவடைக் காலம் முடிந்து 2 மாதங்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும்.
பயிர் இழப்பைச் சந்தித்தபின், விவசாயிகள் அடுத்த பயிரை விதைக்க வேண்டும். அதற்குள் காப்பீட்டு உரிமை கோரிக்கையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
பிரதம மந்திரி ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான பயிர் இழப்பீட்டுத் தொகை தாமதப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஒரு வருடமும் ஆகிறது. பயிர் இழப்பு தரவுகளை எடுப்பதில் மாநில அரசுகளின் தகுதியின்மையும், ப்ரீமியத்துக்கு மாநில அரசின் பங்கு தாமதமாக வழங்கப்படுவதும், இந்த தாமதத்துக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு போதுமான அவசரம் காட்டவில்லை.
இந்த திட்டத்தால், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பலன் அடைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2019 ஆம் ஆண்டுக்குப்பிறகு, இந்த திட்டத்தின் மீது ஆர்வம் காட்டுவதை மத்திய அரசு குறைத்துக் கொண்டுவிட்டது. இதனால், ஏராளமான விவசாயிகள் இந்த திட்டத்திலிருந்து விலகி விட்டனர்.
ஆபரேஷன் க்ரீன்:
கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசும்போது, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் நிலையற்ற விலையைக் கருத்தில் கொண்டு,ரூ.500 கோடி மதிப்பில் ஆபரேஷன் க்ரீன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். புதிய மற்றும் பெரிய அளவிலான சேமிப்பு வசதி,விவசாயிகளுக்கு உதவ உணவு பதப்படுத்தும் தொழிற்துறை மற்றும் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும் இந்த திட்டம் உதவும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகமாக இருப்பதால் விவசாயிக்குக் குறைந்த விலையே கிடைக்கிறது. விலை அதிகமாகும்போது உற்பத்தி குறைவாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் சேமித்து வைக்கும் வசதி விவசாயிகளுக்கு இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், சீசன் இல்லாத காலங்களில் திடீர் விலை உயர்வு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் ஆபரேஷன் க்ரீன் எட்டும் என அரசு சொல்கிறது. எனினும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி காலையிலிருந்து இந்த திட்டத்தைப் பற்றிய பேச்சே இல்லை.
இந்த திட்டத்திற்கு, ரூ.162 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை இதிலிருந்து எவ்வளவு தொகை செலவழிந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆபரேஷன் க்ரீன் திட்டம் மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, இந்த துறைக்கான அமைச்சராக சிரோன்மனி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் இருந்தார். 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து இவர் பின்னர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
14 நாட்களில் கரும்பு நிலுவைத் தொகை :
மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் டெல்லி எல்லையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கரும்பு நிலுவைத் தொகையை 14 நாட்களுக்குள் தரவேண்டும் என்பது தான் அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதுவும் பாஜக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிதான். கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜகவுக்கு வாக்களித்தால், 14 நாட்களுக்குள் கரும்பு நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், கரும்பு விவசாயிகளின் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது பெரும் பிரச்சினையாக உள்ளது. புதிய சாகுபடி தொடங்கிய பின்னும், இதுவரை ரூ.8 ஆயிரம் வரை நிலுவைத் தொகை உள்ளதாக உத்தரப்பிரதேச விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயத்துடன் 100 நாள் வேலைத் திட்டம் இணைப்பு:
2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், விவசாயத்துடன் இணைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்த பிறகும் விவசாயத்துடன் இணைக்காமல் பாஜக அரசு மவுனம் சாதித்தது. இந்த இணைப்பைச் செயல்படுத்துவது குறித்து ஆராய, 7 முதலமைச்சர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவின் செயல்பாடும் முடங்கியது. இந்த குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக விவசாய ஊதியங்கள் நிர்ணயிப்பதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்படியான ஊதியம் வழங்கவும் மறுக்கப்படுகிறது.
ஒற்றைத் தேசிய சந்தை:
விலைவாசி உயர்வைத் தடுக்க ஒற்றைத் தேசிய விவசாய சந்தை கொண்டுவரப்படும் என கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில், விவசாய உற்பத்தி சந்தைக்குழு மண்டிகளை மின்னணு தேசிய விவசாய சந்தைகளாக மாற்றப் போவதாகவும், இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத்தர உதவும் என்றும் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பிலும், நடவடிக்கை ஆமை வேகத்தில் நடந்தது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,1 சதவீதத்துக்குக் குறைவான விளைபொருட்கள் மண்டியின் மூலம் இணையத்தில் விற்கப்படும் எனக் கூறப்பட்டது. அடிப்படை கட்டமைப்பு இல்லாததும்,இணையம் வசதி இல்லாததும் விவசாயிகளுக்கு பெரும் போராட்டமாக அமைந்தது. அரசால் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விலைகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் போதுமான அளவில் பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
மே மாதம் அரசு வெளியிட்ட அறிவிப்பில், 7 ஆயிரம் மண்டிகளில் ஏறத்தாழ 1,000 மண்டிகள் இணையமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இணையம் வர்த்தகத்தில் ஈடுபட 14 கோடி விவசாயிகளில் 1 கோடியே 66 லட்சம் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்திருந்தனர்.
கிராமப்புறச் சந்தைகளை விவசாயச் சந்தைகளாக மாற்றும் வகையில், விவசாயிகளுக்குச் சிறந்த விற்பனைக் கட்டமைப்பை அளிப்போம் என்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்டனர். 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 22 ஆயிரம் கிராமப்புற சந்தைகள் விவசாயச் சந்தைகளாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வரை ஒரு கிராமச் சந்தை கூட விவசாயச் சந்தையாக மாற்றப்படவில்லை.
விவசாயிகள் மத்தியில் கோபம் அதிகரிப்பதை உணர்ந்த மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்தத் தொகை 3 தவணைகளாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். முதல் தவணை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. அதாவது, தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 12 கோடி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது. இரண்டாவது முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 14 கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், 2 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் 11 கோடி விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என்று அரசு இணையதளத்தின் தகவல் கூறுகிறது. ஆனால், 14 கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு அதிகபட்ச மதிப்பீடு செய்துள்ளது. அதாவது, இந்தியாவில் எவ்வளவு விவசாயிகள் உள்ளனர் என மத்திய அரசுக்குத் தெரியவில்லை.
மற்றொரு பிரச்சினை என்னவென்றால், இந்த திட்டத்தில் விவசாயிகளைப் பதிவு செய்ய மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
பிரதமர் விவசாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.75 ஆயிரம் கோடி முழுமையாகச் செலவாகவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்குமாறு நிதி அமைச்சகத்தை விவசாயத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் அந்த கோரிக்கையை நிதி அமைச்சகம் நிறைவேற்றவில்லை.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி 4 ஆவது காலகட்டத்தில் பதிவு செய்தால், அவருக்கு அடுத்தடுத்த தவணைகள் மட்டுமே கிடைக்கும். முந்தைய தவணை கிடைக்காது.
மோடி அளிக்கும் வாக்குறுதிகளை விவசாயிகள் ஏன் நம்ப மறுக்கிறார்கள் என்பது இப்போதும் நிச்சயம் அனைவருக்கும் புரியும் என்று நம்புவோம்.