நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு அமைப்பை மோடி அரசு அழித்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாபில் 2 நாட்கள் நடந்த விவசாய பாதுகாப்பு யாத்திரையில் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக, பாட்டியாலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகளின் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மோடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அதேபோல், விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் 3 சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் முடிக்க முயற்சித்து வருகிறார்.
வரும் காலங்களில் இளைஞர்களுக்கு நம் நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாது. வேலை வாய்ப்பு முறையையும் மோடி சீர்குலைத்துவிட்டார். மோடி அரசு சொல்வதைப் போல் 3 சட்டங்களால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றால், நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தவில்லை. விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழு முறையில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.
நரேந்திர மோடி அரசு செய்வது போல், ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு முறையையும் அழிக்க நாங்கள் விரும்பவில்லை. உணவு பாதுகாப்பை வலுப்படுத்த செய்ய வேண்டியதை கடந்த தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தற்போதைய முறையில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்யவேண்டும் என்று தான் சொல்லியிருந்தோம். மோடியைப் போல் ஒட்டுமொத்த அமைப்பையும் அழிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.
விவசாய முறையை மேம்படுத்தும் நோக்கிலும், விவசாய கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருந்தது. விவசாயிகளுக்கு கூடுதல் சந்தைகளை திறக்கவும், தற்போது இருக்கும் 40 கி.மீ தொலைவுக்குப் பதிலாக, 4 கி.மீ தொலைவுக்கு ஒரு மண்டியை உருவாக்கவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள விவசாயிகள் மற்றும் நமது தொழிலாளர்கள் மீது மோடி அரசு நடத்தும் தாக்குதல், காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து எதிர்ப்பதால் தோல்வியுறும்.
ஹத்ராஸில் அன்புக்குரிய சிறுமி தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பிரதமர் இதுவரை அது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
லடாக் எல்லையில் சீனப் படைகள் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்தியாவுக்குச் சொந்தமான 12 ஆயிரம் சதுர அடி நிலம் சீனா வசம் சென்றுவிட்டது.
அனைத்து கட்டிடக்கலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஆன்மாவை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். எனக்கு சுதந்திரமான அமைப்பும், சுதந்திரமான ஊடகமும் கொடுங்கள். ஆறே மாதத்தில் மோடியை அகற்றிக் காண்பிக்கின்றேன்.
சிறப்பு விமானங்களை வாங்க மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளைச் செலவு செய்துள்ளார் பிரதமர் மோடி. ஏனென்றால், மோடியின் நண்பர் ட்ரம்ப்பும் அதேபோன்ற விமானத்தை வைத்துள்ளார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.