பாஜக கூட்டணி ஆளும் ஹரியானாவில் தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான 3 அவசரச் சட்டங்களையும் கொண்டுவர மோடி அரசு காட்டிய அவசரம் புரிகிறதா?
”எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்பது போல், அதானி குழுமத்தின் செயல்பாடே இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.
இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் புரிகிறதா?
இனி உணவுப் பொருட்களை வாங்க அதானி குழுமத்திடமே நுகர்வோர் கையேந்த வேண்டும் என்பதைத்தான், அதானி குழுமம் மூலம் செய்முறை விளக்கமாக அளித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா ஆகிய கிராமங்களில் இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் அமைத்து வருகிறது. இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா என்ற இடத்திலும் இதேபோன்ற நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் டன் தானியங்களை இந்த நவீன களஞ்சியங்களில் சேமிக்கலாம். இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் உணவு தானியங்களை இந்திய உணவுக்கழகம் வினியோகிக்க உள்ளது. இந்த நவீன களஞ்சியங்களில் நீண்ட நாள் சேமித்து, அதிக விலை கிடைக்கும் சமயங்களில் விற்கலாம்.
இது குறித்து அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், ”விளைபொருட்களைச் சேமிப்பதற்கான களஞ்சியங்களை மட்டுமே அமைத்திருக்கிறோம். எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதோ, விளைபொருட்களின் விலை நிர்ணயமோ எங்கள் கையில் இல்லை. இந்திய உணவுக்கழகத்துக்கு தானியங்களைச் சேகரிப்பதும், அதைக் கொண்டுபோய் கொடுப்பதும் தான் எங்கள் வேலை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உணவுக் கழகம், ”விளைபொருளும் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வரும். பூச்சிகள் மற்றும் இதர தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவே இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியம்” என்று கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் மத்தியில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ”சேமிப்புக் களஞ்சியம் கட்டக் கூடவா அரசிடம் பணம் இல்லாமல், அதானியிடம் கையேந்துகிறார்கள்” என்று ஆவேசமாகக் கேட்கிறார்கள் டெல்லியில் போராடும் விவசாயிகள் .