”என்னைப் பொருத்தவரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடி முக் கியம். அந்த கொடி திரும்பக் கிடைக்காத வரை, இந்திய தேசியக் கொடியை ஏந்தமாட்டேன்…”
– முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி
தேசபக்தி தொழிற்சாலையை ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல் , முஃப்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தேசியக் கொடியை அவமானப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
தேசியக் கொடியை முஃப்தி எங்கே அவமதித்தார்?
ஆனால், ஆர்எஸ்எஸ்-ம் அதன் வழிவந்த பாஜகவும் நமது தேசியக் கொடியை எப்படி எல்லாம் கையாண்டார்கள் என்பதைப் பார்ப்போம்.
- மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக அரசியலமைப்பு சபை தேர்ந்தெடுத்தபோது, கடந்த 1947 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைஷர் ஏட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தில், தேசியக் கொடி காவி வண்ணத்தில் இருக்க வேண்டும் என தலையங்கம் எழுதப்பட்டது.
- ‘காவிக் கொடிக்குப் பின்னே மர்மம்’ என்ற தலைப்பில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ‘ஆர்கனைஷ’ர் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் காவிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அதில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. விதியின் வசத்தால் அதிகாரத்துக்கு வந்தவர்கள் எங்கள் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுத்துவிட்டார்கள் என வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கொடி மதிக்கப்படாது. கொடியின் மூன்று வர்ணங்கள் உளவியல் ரீதியாக மோசமான விளைவை ஏற்படுத்தும். அது நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் வெளிப்படையாக ” எழுதினர்.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 1946 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி நாக்பூர் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, ”நமது உயர்ந்த கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது காவி வண்ணம் தான். இது கடவுளின் உருவகம். இறுதியில், இந்த காவிக் கொடியின் முன்பு, இந்த முழு தேசம் தலைவணங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
- சுதந்திரத்துக்குப் பின்பு மூவண்ண தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டபோதும், அதனை தேசியக் கொடியாக ஏற்க ஆர்எஸ்எஸ் இயக்கம் மறுத்துவிட்டது. ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பைபிளாகக் கருதப்படும் ‘சறுக்கலோ சறுக்கல்’ என்ற புத்தகத்தில் கோல்வால்கர் குறிப்பிடும்போது, ”நமது நாட்டுக்கு புதிய கொடியை நமது தலைவர்கள் உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? இது ஒரு சறுக்கல் அன்றி வேறேது? நமது தேசம் பழமையும் சிறப்பும் கொண்டது. அப்போது, நமக்குச் சொந்தமாக ஒரு கொடி கிடையாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கென தேசிய அடையாளம் கிடையாது. ஏன் இந்த முழு வெற்றிடம் நம் மனதில் இருக்கிறது என்று சந்தேகத்துக்கு இடமின்றி நமக்குக் கேள்வி இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.
- முக்கியமாக, ஆர்எஸ்எஸ் இயங்கும் இடங்களில் தேசியக் கொடியை இன்று வரை பயன்படுத்துவதில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூர் ரேஷம்பாக்கில் தேசியக் கொடி இடம் பெறவில்லை. அணிவகுப்பின்போது, காவிக் கொடிதான் பறக்கவிடப்படுகிறது.
- 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிக்கச் சென்ற இந்துத்துவா தொண்டர்களின் கையில் தேசியக் கொடி இருக்கவில்லை. காவிக் கொடியைத் தான் அவர்கள் ஏந்திச் சென்றனர். அதே கொடியைத் தான் ஏற்றினார்கள்.
இப்படிப்பட்ட காவிக் கும்பல் இன்று மெஹ்பூபா கருத்துக்குக் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனைச் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதா? முதலைக் கண்ணீர் என்று சொல்வதா? அல்லது இரண்டையும் சொல்வதா?
மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!