பொது முடக்கம் காரணமாக, மோட்டார் வாகனத் தொழில்துறைக்குத் தினமும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென இரவோடு இரவாக பொது முடக்கத்தை மோடி அரசு அறிவித்தது. இதனால், மக்களும், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முன்னேற்பாடு செய்து கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்பி., கேசவ் ராவ் தலைமையிலான வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ராஜ்யசபைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவிடம் இது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், பொது முடக்கத்தால் மோட்டார் வாகனத் தொழில் துறைக்குத் தினமும், ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த துறையில் 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத் தொழிற்துறைக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும்,நடைமுறையில் உள்ள நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
வாகன உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் பெரும்பாலான தொழில்துறையினர் 18 முதல் 20 சதவீதம் வரை உற்பத்தியைக் குறைத்துவிட்டதாகவும், வாகனங்களின் விற்பனை குறைந்ததே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த துறையில் வெளியிலிருந்து ஆட்கள் எடுப்பது நிறுத்தப்பட்டதாகவும், இதுவரை 286 வாகன விற்பனை டீலர்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டதாகவும் கூறியுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தையடுத்து ஏற்பட்ட பாதிப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் வாகனத் தொழில்துறைக்கு முதலீடு இழப்பு ஏற்படுவதோடு, திவால் ஆகும் அபாயமும், வேலை இழப்பும் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.