ஏழைகளை முற்றிலும் ஒழித்துவிட்டு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்களை முடக்கிப் போட்டு, ஜிஎஸ்டியில் மக்களைச் செயல் இழக்கவைத்து, கொரோனாவில் மக்களைப் படுத்த படுக்கையாக்கிவிட்டது மோடி அரசு.
துடித்துக் கொண்டிருக்கும் மக்கள் மீது எரிபொருள் விலையைத் தாறுமாறாக ஏற்றி, கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது கொடுங்கோல் அரசு.
மோடி அரசால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களது துயரங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்…
முருகன் என்பவர் கூறும்போது, ”சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 25 ஆண்டுகளாக நடத்தி வந்த லாட்ஜ் மற்றும் சிறிய உணவகத்தை மூடிவிட்டேன். கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு நிலைமை சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், எரிபொருள் விலையை ஏற்றியதால் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகமாகிவிட்டது. இதில் லாபத்தைப் பார்ப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. இப்போது ஜாபர்கான் பேட்டையில் சிறிய அளவில் மெஸ் மற்றும் டீக்கடை வைத்துள்ளேன். கொரோனாவுக்கு முன்பு ஒரு வடையை ரூ. 10 க்கு விற்றேன். இப்போது மக்கள் யாரும் கடைக்கு வந்து வடையையோ பஜ்ஜியையோ சாப்பிடத் தயங்குகிறார்கள். இதனால், விலையை ரூ. 5 ஆகக் குறைத்துவிட்டேன். ரூ.35 க்கும் விற்ற சாப்பாட்டையும் ரூ.30 க்கும் குறைத்துவிட்டேன். சாலையோரத்தில் கடை நடத்துபவர்களும் விலையைக் குறைத்துவிட்டதால், அவர்களுடன் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை ஏற்றியதால்,உணவு தயாரிப்பதற்குக் கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. முன்பு உணவகத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களைத் தினமும் ரூ. 15 ஆயிரத்துக்கு வாங்குவேன். காய்கறிகளைத் தினமும் ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்குவேன். எரிபொருட்களின் விலையை ஏற்றிய பிறகு, காய்கறிக்குக் கூடுதலாக ரூ.500 ம், மளிகைக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரமும் செலவாகிறது. கொரோனாவுக்கு முன்பு தினமும் ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனை நடக்கும். ஆனால், இப்போது 30 சதவீதம் வியாபாரம் குறைந்துள்ளது. எங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை எங்களால் குறைக்க முடியவில்லை ” என்றார்.
செங்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகரன் என்பவர் கூறும்போது, ”ஒரு நாளைக்கு ஆட்டோ ஓட்டினால் கைக்கு ரூ. 600 கிடைக்கும். இப்போது, ரூ.200 முதல் ரூ.300 வரை தான் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 92. ஆயில் ரூ.14. ஒரு லிட்டருக்கு நான் ரூ.106 செலவழிக்க வேண்டியுள்ளது. 1 லிட்டருக்கு 25 கி.மி. வரை செல்ல முடியும். வழக்கமாக, ஒரு நாளைக்கு 100 முதல் 125 கி.மீ தொலைவு வரை ஆட்டோ ஓட்டுவோம். அப்படியானால், பெட்ரோலுக்கு மட்டும் ரூ.600 செலவாகும். நான் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டுகிறேன். வாடகை தினமும் ரூ.200 கொடுக்கிறேன். தனியார் நிறுவன வாடகைக் கார்கள் மற்றும் ஆட்டோக்களுடன் போட்டிப் போட்டு, கட்டணத்தையும் குறைக்க வேண்டியுள்ளது. இதனால், சாப்பாட்டைத் தான் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
கொரோனா பொது முடக்கத்தின் போது 6 மாதங்கள் ஆட்டோ ஓட்டவில்லை. இருந்த நகைகளை எல்லாம் வைத்து கடன் வாங்கி சமாளித்தோம். இன்று அன்றாட செலவுக்குக் கூட சம்பாதிக்க முடியவில்லை” என்றார் கண்ணீர் மல்க.
விற்பனை பிரதிநிதியான பாலா என்பவர் கூறும்போது, ” பெட்ரோல் விலை ஏறுகிறதே தவிர, சம்பளம் ஏறவில்லை. பணி நிமித்தமாகத் தினமும் 100 கி.மீ தொலைவுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறேன். முன்பெல்லாம் 4 நாட்களுக்கு ஒரு முறை ரூ.800 செலவழித்தேன். இப்போது 2 நாட்களுக்கு ஒரு முறை ரூ.1,500 வரை செலவழிக்க வேண்டியுள்ளது. பணிச்சுமை அதிகரித்ததோடு, குடும்பத்தை நடத்த முடியாத அளவுக்கு நிதிச்சுமையும் ஏறிக் கொண்டே போகிறது. உணவையே குறைத்துக் கொண்டுள்ளோம். என் மனைவியும் மகளும் இப்போது எதுவும் கேட்பதில்லை. பெட்ரோல் விலையை ஏற்றும்போதெல்லாம் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறுகிறது. இனியும் விலை ஏற்றினால் அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி எங்களுக்குg இல்லை.
காய்கறிகள் விற்பனைg செய்யும் பூங்காவனம் கூறும்போது, ” பெட்ரோல் விலையை உயர்த்தியதால் போக்குவரத்துக் கட்டணமும் ஏறிவிட்டது. காய்கறிகளை வாங்கி வர, போக்குவரத்துச் செலவாகத் தினமும் ரூ.100 ஆகும். இன்றைக்கு ரூ. 300 செலவாகிறது. நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதேசமயம் குறைவான வருவாயே கிடைக்கிறது. 17 ஆண்டுகளாக காய்கறி விற்று வருகிறேன். இப்போது தான் முதல்முறையாகப் பயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். வாழ்க்கையை ஓட்ட கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில், மீண்டும், மீண்டும் பெட்ரோல் விலையை ஏற்றினால் என்ன அர்த்தம். சாதாரண மக்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவா அவர்களுக்கு வாக்களித்தோம். வரும் காலத்தில் நிலைமை மிகவும் மோசமடையும் என்று அஞ்சுகிறேன்” என்றார்.
இது மாதிரி தான். இதேபோன்று, எரிபொருள் விலை உயர்வால் எல்லோருமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் இல்லாமல் செலவு அதிகரித்துக் கொண்டே போனால் என்ன செய்வது? இப்போதே சாப்பாட்டுச் செலவைக் குறைத்துக் கொண்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இதைவிட அசிங்கம் வேறு ஏதும் இருக்காது. சொந்த மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லுவதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஆனால், மோடி ஆட்சியில் அது நடக்காது. இவர்கள் தலை, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மட்டுமே குனியும்.