சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் நாகரீகமற்ற முறையில் மரபுகளை மீறி அரசியல் பேசியிருக்கிறார். அவர் உரையாற்றும் போது, ‘காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் 10 ஆண்டுகள் இருந்த போது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிடத் தயாரா ? எங்கள் தரப்பில் பணிவுடன் தெருவில் நின்று கொண்டு பட்டியல் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் அதற்குப் பதில் கொடுக்க தயாரா ?’ என்று சவால் விட்டுப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அமித்ஷாவின் யோக்கியதையை அறியாதவர்கள் அல்ல.
குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது, உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. இவர்கள் இருவரும் இணைந்து தான் 2002 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்களைக் கலவரத்தில் பலியாக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத கொடுங்கோல் ஆட்சி புரிந்தார்கள். வகுப்புவாத கலவரத்தில் சம்மந்தப்பட்டதாக, உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா மீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. ஏறத்தாழ 6 மாதங்கள் சிறையிலிருந்த போது, மும்பையில் தங்கியிருக்க வேண்டும், குஜராத் மாநிலத்தில் நுழையக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் தான் அமித்ஷா.
ஆனால், உச்ச நீதிமன்றம் நியமித்த ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழு உரிய விசாரணை நடத்தாமல் பாரபட்சமான போக்கில் செயல்பட்டதால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் விசாரணையிலிருந்து தப்பிக்கிற நிலை ஏற்பட்டது. இதற்குப் பிறகு 2014-ல் நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா பா.ஜ.க. தலைவராகவும் ஆன பிறகு அவர்கள் மீதான வழக்குகள் மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்த வகையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தவர் தான் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட 10 ஆண்டுக்கால காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஐவர் கேபினட் அமைச்சர்களாக முக்கிய பொறுப்புகளை வகித்தனர். 2004-ல் 39 உறுப்பினர்களை இக்கூட்டணி பெற்றது. இதனால் தமிழகத்திற்கு அதிக நிதியையும், வளர்ச்சித் திட்டங்களையும் தமிழகம் பெறுகிற நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இன்றைய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றிய பெருமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு உண்டு என்பதை ஆயிரம் அமித்ஷாக்கள் உரத்த குரலில் கூறினாலும் மறைத்திட இயலாது.
எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிடத் தயாரா ? என்று சவால் விட்ட அமித்ஷாவுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வளம் சேர்த்த திட்டங்களைப் பட்டியலிடுகிறோம்.
தமிழகத்திற்கு வளம் சேர்த்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டங்கள் (2004 – 2014):
- தமிழ் – செம்மொழித் திட்டம் நிறைவேற்றப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 18.8.2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்மூலம், தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்ட தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவருக்கும், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களில் ஒருவருக்கும் ஆக, தலா ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்டுள்ள இரண்டு குறள் பீட விருதுகளும், தலா ஒரு லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்டுள்ள இளம் தமிழறிஞர்களுக்கான ஐந்து விருதுகளும் ஆண்டுதோறும் நமது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட மத்திய அரசு அனுமதித்தது.
- சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் (National Automotive Testing Research and Development Infrastructure Project – NATRIP) 04.11.2006 அன்று அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றன.
- தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் தாம்பரத்தில் நிறுவப்பட்டது.
- சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் உருட்டாலையைச் சர்வதேச அளவுக்கு உயர்த்தி, புதிய குளிர் உருட்டாலை (Cold Rolling Mill) 1,553 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
- 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது.
- தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 226 கிலோ மீட்டர் நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 650 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
- கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 490 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான மேம்பாலங்கள் கட்டும் பணிகள் 2005 இல் தொடங்கப்பட்டு, கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்புகளில் பணிகள் முடிவடைந்து, மேம்பாலங்கள் திறக்கப்பட்டு, போக்குவரத்துகள் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பயன்பட்டு வருகின்றன.
- கோயம்பேடு சந்திப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவு பெற்றது.
- சென்னை விமான நிலையத்தின் எதிரே திரிசூலத்தில் மேம்பாலமும், தாம்பரம் இரும்புலியூர் அருகே வாகன சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
- 1655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைத்திட அனுமதிக்கப்பட்டு, 8.1.2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி அரசியலால் இத்திட்டம் முடக்கப்பட்டன.
- தமிழகத்தில் 2004-2009 வரை 34 ஆயிரத்து 102 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டன. ரூபாய் 1605 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான பிற சாலைகள் மேம்பாடு தொடர்பான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
- நூறாண்டு கால கனவை நனவாக்கிடும் 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சேது சமுத்திரத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. அரசும், வகுப்புவாத சக்திகளும் வழக்குத் தொடுத்ததால் அத்திட்டம் முடக்கப்பட்டது. இது தமிழக தென் மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.
- கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்வழி வர்த்தகம் பெருகும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுக வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள். குறிப்பாக, எண்ணூர் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னைத் துறைமுகத்தின் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
- உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உட்பட 20 ஆயிரத்து 956 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல திட்டங்கள் எனக் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் 2004 முதல் 2009 வரை தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுப் புதிய வரலாறு படைக்கப்பட்டது.
- நெசவாளர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில் சென்வாட் வரி நீக்கப்பட்டது.
- மதம் மற்றும் சிறுபான்மைப்பிரிவினரின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியோர் நலன் காக்கும் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
- சென்னை மாநகர குடிநீர்ப் பிரச்சினை தீர 908 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
- பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.
- செல்போன் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் செல்பேசி இணைப்புகள் பலமடங்காகக் கூடியது.
- தஞ்சாவூர் – திருவாரூர், மதுரை – இராமேஸ்வரம் உட்பட தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில், சென்னை – புதுடெல்லி ‘ஏழைகளின் ரதம்’ முழு ஏ.சி. வசதியுடன், வாரம் ஒருமுறை செல்லும் அதிவேக விரைவு ரயில், சென்னை- கோவை விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, மதுரை- திருப்பதி விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – மங்களூர் விரைவு ரயில் வாரம் மூன்றுமுறை செல்வது, சென்னை – திருவனந்தபுரம் அதிவேக விரைவு ரயில் தினமும் செல்வது, சென்னை- திருவனந்தபுரம் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, புதுச்சேரி – புவனேஸ்வர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – பிளாஸ்பூர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, பெங்களூரு – டார்பங்கா விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை – இராமேசுவரம் அகல ரயில் பாதையில் தினமும் செல்லும் புதிய ரயில் எனப் பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டன.
- சென்னை – விஜயவாடா- ஐதராபாத் மார்க்கத்திலும், சென்னை – பெங்களூரூ – எர்ணாகுளம் மார்க்கத்திலும், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில்கள் விடப்படும் என மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பயண தூரம் நீட்டிக்கப்பட்ட ரயில்கள் சென்னை – வாரணாசி விரைவு ரயில் வாரம் நான்கு நாள்கள் செல்வது, இரண்டு நாள்கள் சாப்ரா வரையிலும், ஜெய்ப்பூர் – சென்னை விரைவு ரயில் கோவை வரையிலும், திருச்சி – கும்பகோணம் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மைசூர்- கும்பகோணம் விரைவு ரயில் மயிலாடுதுறை வரையிலும், திருச்சி – தஞ்சாவூர் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மதுரை – மானாமதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரம் வரையிலும், இவ்வாறாக, இதுவரை இல்லா அளவுக்கு ரயில் போக்குவரத்து வசதிகள் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் பெருகி மக்களுக்குப் பயன்பட்டன.
- 1,828 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்களைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதித்து, 19 கோடி ரூபாய் செலவில் மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலம், 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மேம்பாலம், 16 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு அருகே ஊத்துக்குளி மற்றும் திம்மநாயக்கன்பாளையம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 18 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் அருகே இரண்டு மேம்பாலங்கள், 29 கோடி ரூபாய் செலவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் அருகே மூன்று மேம்பாலங்கள், 40 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் சென்னை கத்திவாக்கம் மற்றும் மடுவங்கரை அருகே இரண்டு மேம்பாலங்கள்; 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் மற்றும் வாளாங்குளம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 7 கோடி ரூபாய் செலவில் மதுரை மாவட்டம் கோவில்பட்டி அருகே மேம்பாலம், 11 கோடி ரூபாய் செலவில் திருச்சி பாலக்கரை மேம்பாலம், 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கரூர் நகரில் மேம்பாலம்; 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மதுரை கூடல் நகர் அருகே மேம்பாலம், 17 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மேம்பாலம் என 223 கோடி ரூபாய் செலவில் 18 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
- ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன், 16 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
- தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய 1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
- 57 கோடி ரூபாய் செலவில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் 9வது தளம் அமைக்கப்பட்டு, 14.7.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
- கோவையில் உலகத் தரத்திலான மத்திய பல்கலைக் கழகம் (World Class University), திருச்சியில் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறு வனம் ((Indian Institute of Management), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மூன்று மத்திய கல்வி நிறுவனங்களைத் தமிழகத்தில் அமைத்திட அனுமதிகளை வழங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
- 245 கோடி ரூபாய் முதலீட்டில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் 31.12.2008 தொடங்கிவைக்கப்பட்டன.
- ஆசியாவிலேயே முதலாவதாகச் சென்னைக்கு அருகில் பலவகை உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டது.
- சென்னை வண்டலூருக்கு அருகில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.) தொடங்கப்பட்டது.
- இந்தியா முழுவதும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெற்றிருந்த ரூ. 72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 4 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர்.
- இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழியாக 24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 57 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டு ஏழை,எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மருத்துவ, பொறியியல் படிப்பதற்கு அரிய வாய்ப்பு ஏற்பட்டது. இதன்மூலம் கல்வியில் புரட்சி நடந்தது.
- ஸ்ரீபெரும்புதூரில் 4,821 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய வானூர்தி ஆணையத்தின் மூலம் புதிதாக மற்றுமொரு பன்னாட்டு விமான நிலையம் ‘கிரீன்பீல்டு விமான நிலையம்’ எனும் பெயரில் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
- திருச்சி விமான நிலையம் அதிநவீன விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தினை விரிவாக்கி, நவீனமயமாக்கிடும் நோக்கில் 128 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் கட்டுவதற்கும், கூடுதல் விமான நிறுத்துத் தளம் அமைப்பதற்கும் 26.04.2008 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்றன.
- கோவை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடியில் விமான நிலையம் புதிதாக அமைத்திடவும் மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொருளாதார வளர்ச்சியும், மேம்பாடும், சமூக நல்லிணக்கமும், சமூக நீதியும் நாணயத்தின் இருபக்கங்களாகக் கருதும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே! அனைத்து மக்களின் குறிப்பாக தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற நலிவடைந்த பிரிவினரின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் நாம் தான் குரல் கொடுக்கிறோம். நாம் தான் போராடுகிறோம்.
– அன்னை சோனியா காந்தி