முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டி:
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு தேவையைப் பூர்த்தி செய்யாது. மிகைப்படுத்தப்பட்ட எண்களைக் கொண்ட, மக்களைத் திகைக்க வைக்கும் மற்றொரு நயவஞ்சக முயற்சி இது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு, ‘மலையைத் தோண்டி எலியைப் பிடித்த’ கதையாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும்,பொருளாதாரப் பாதிப்பையும் சரிசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, மக்களிடம் காட்டிக் கொள்வதாகவே இந்த அறிவிப்புகள் உள்ளன.
ஏற்கனவே அறிவித்த 20 கோடி லட்சம் ரூபாய் அளவுக்கான நிதித் தொகுப்பு தோல்வியடைந்துவிட்டது. அது வெறும் புரளி என்றும் ஆகிவிட்டது. தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், மக்கள் தங்களது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, மக்களின் வாழ்க்கையில் அரசு குறுக்கிடுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான எந்த அம்சங்களும் இல்லை. ஏற்கனவே 20 லட்சம் கோடி ரூபாய் என்று எண்ணிக்கையை வைத்து மக்களை ஏமாற்றியது போன்றே இந்த புதிய நிதி தொகுப்பும் உள்ளது.
புதிய அறிவிப்பின்படி, 73 ஆயிரம் கோடிகள் ரூபாய் அளவுக்கு நிதித் தொகுப்பை அறிவித்துள்ளனர். உண்மையிலேயே அவ்வளவு தொகை இல்லை. இதுவும் புரளி தான். ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள நிதித் தொகுப்பு மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் மட்டுமே என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள்.
அதோடு, ஊழியர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எதை வாங்க வேண்டும் என, பெற்றோரைப் போல் அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக கூறுவதைப் போல், அக்கட்சித் தலைமை தாங்கும் அரசும் கூறுகிறது. மக்கள் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இப்போது முயற்சி செய்து வருகின்றனர்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் வாழும் பாதி குடும்பங்களுக்கு இப்போது பணம் அவசியம் தேவைப்படுகிறது. பல பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்தும், மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்க மத்திய அரசு மறுக்கிறது. மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
2020-21 ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் பரிதாபகரமான முயற்சிகளை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.