பிஎம் கேர்ஸ் நிதியைக் கையாளுவதில் வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து விமர்சித்து, பிரதமர் மோடிக்கு 100 ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
பிஎம் கேர்ஸ் (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக் கால நிவாரண உதவி) குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டால், இது அரசு தொடர்பான நிதி அல்ல என்பதால், பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. இதன்மூலம், பிஎம் கேர்ஸின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெளிவாகத் தெரிகிறது. நன்கொடை கொடுத்தவர்களின் தகவலும் இல்லை, செலவு செய்த விவரமும் வெளிப்படையாக இல்லை.
கொரோனா தடுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவாமல் வேறு எதற்குச் செலவிடப்படுகிறது என 100 முன்னாள் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்த 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளின் அந்த கடிதத்தின் விவரம்:
அன்புள்ள பிரதமருக்கு,
நாங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் இல்லை. ஆனால், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்கள்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுகிறதா? என்று எழுந்துள்ள விவாதத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறவில்லை. அதோடு, பல எண்ணற்ற கேள்விகளுக்கு விடையும் கிடைக்கவில்லை.
தேசிய அளவில் முதல்முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அவசர, அவசரமாக பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதி உருவாக்கப்பட்ட ஒரே வாரத்தில் அதன் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ரூ. 3 ஆயிரத்து 76 கோடியே 62 லட்சம் நன்கொடையாக வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையாக எவ்வளவு தொகை வந்துள்ளது என்பது குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை.
பிஎம் கேர்ஸ் குறித்த விவரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில், அரசு சார்ந்த அறக்கட்டளை இல்லை என்பதால் வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு நாங்கள் அவசரமாக எழுத வேண்டியதாகிவிட்டது.
பிஎம் கேர்ஸ் அரசின் அறக்கட்டளை இல்லை என்றால், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இதில் எப்படி அரசின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்? நீங்கள் தனி நபர்களா?
பிஎம் கேர்ஸ் தனியார் அறக்கட்டளையாக இருந்தால், இதில் கிடைத்த நன்கொடைகள் சிஎஸ்ஆர் எனப்படும் கூட்டாண்மை சமூக பொறுப்புக்கு உட்படுமா? சமூக பொருளாதார மற்றும் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்வதற்கு மட்டுமே கூட்டாண்மை சமூக பொறுப்பிலிருந்து கம்பெனிச் சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது. 2013 ஆம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின் கீழ், மத்திய அரசின் பிஎம் கேர்ஸ் தனியார் அறக்கட்டளை என்றால், கூட்டாண்மை சமூக பொறுப்பு செலவினங்களுக்கு இந்த நிதி பொருந்தாது என்பது தெளிவாகிறது.
கடந்த 2020 மார்ச் 28 ஆம் தேதி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியை பிஎம் கேர்ஸ் நிதிக்காகப் பெறலாம் என கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. ஏற்கனவே 7 ஆவது அட்டவணையில் உள்ள பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் பட்டியலிலேயே இந்த பிஎம் கேர்ஸ் நிதியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் ஒரு நிதி இருக்கும்போது, புதிய நிதியை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?
பிஎம் கேர்ஸ் நிதி மத்திய அரசு அல்லது மாநில அரசுகளைச் சார்ந்து இருக்காது. எந்த ஓர் அரசு சார்ந்த துறைகளின் நிதிக் கட்டுப்பாடு நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ இருக்காது என்று பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வாங்கியது ஏன்? இந்த பணம் மக்கள் பணம் இல்லை என்றால், வெளிநாட்டிலிருந்து ஏன் நிதியைப் பெற்றீர்கள்?
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு வெளிநாட்டினரிடம் நிதி திரட்ட தூதுவர்களைக் காணொளி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில், நீங்களும் வெளிநாட்டு நன்கொடையை வரவேற்றுள்ளீர்கள்.
பிஎம் கேர்ஸ் நிதியில் இடம்பெற்றுள்ள நீங்களும் உங்கள் அமைச்சர்களும் நிச்சயம் நிதியைத் திரட்ட முடியும். இதில் மக்களின் பங்களிப்பும் இருக்கும். ஐசிஏஐ எனப்படும் சாட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவனத்திடமிருந்து அப்போதைய கம்பெனி விவகாரத்துறை அமைச்சக செயலாளர் நன்கொடை கேட்டுள்ளார். இவ்வாறு ஒரு நிறுவனத்திடமிருந்து செயலாளர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக நேரிடையாக நன்கொடை கேட்க முடியுமா?
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிஎம் கேர்ஸ் அரசு சார்ந்தது இல்லை என்று கூறினாலும், அறக்கட்டளைகள், சொஸைட்டிகள், அரசு சாரா அமைப்புகள் (அரசு மற்றும் தனியார்) அரசு நிதியைக் கையாளும்போது, அதனை அரசு நிதியாகவே கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதிக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 2020 மே 19 ஆம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட செய்தியில், பிஎம் கேர்ஸ் நிதிக்கு கிடைத்த 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நன்கொடையில், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், பொதுத் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மூலம் 1,200 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படைத்தன்மை கிடையாது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களோ, செய்யப்பட்ட செலவு குறித்த விவரங்களோ பொது வெளியில் வைக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு பிஎம் கேர்ஸிலிந்து உதவி செய்யப்படவில்லை.
பிரதமர் அவர்களே, மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். 1980 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலேயைப் பற்றி நம் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது, இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்ட்தான் என்ற நிதியை உருவாக்கினார். இது அரசு சார்ந்த நிதி அல்ல. தனிப்பட்ட முறையில் உருவாக்கிய நிதி. ஆனால், அரசு நிதி என்று அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அந்துலே மீது பாஜகவினர் அப்போது குற்றம் சாட்டினர். அதோடு அவர்கள் நீதிமன்றத்துக்கும் சென்றனர். இதன் காரணமாக அந்துலே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அரசு கையாளும் நிதி தொடர்பான விஷயங்களின் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். கடந்த 1975 ஆம் ஆண்டு ராஜ் நாராயண் வழங்கில் நீதிபதி மேத்யூ கூறும்போது, ”அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு உண்டு” என்றார். பிரதமர் தொடர்புடைய விஷயத்தில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, அவரது நிலைப்பாட்டுக்கும் அந்தஸ்துக்கும் அவசியம்.
வாய்மையே வெல்லும்!
இவ்வாறு கடிதத்தை நிறைவு செய்து, 100 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.