குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்துக்குப் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவே காரணம் என விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
போராட்டத்தின் அடையாளமாக செங்கோட்டையில் கொடி ஏற்றுங்கள் என்று அங்கிருந்து இளைஞர்களைச் சித்து தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், போராட்டத்தைத் தவறாகத் திசைதிருப்பும் சித்துவை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதம் செய்வதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி மோட்டார் பைக்கில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் விவசாயச் சங்கங்களுக்குக் கிடைத்துள்ளன.
தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினர் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் தான் பஞ்சாபி நடிகர் சித்து.
இதற்கிடையே, சித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நடிகர் சித்துவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் நடந்த நிகழ்வு வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது செயலை நடிகர் சித்து நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதன் அடையாளமாக விவசாயச் சங்க கொடிகளை செங்கோட்டையில் ஏற்றுமாறு நான் கூறியதில் என்ன தவறு? அங்கிருந்து தேசியக் கொடி அகற்றப்படவோ அல்லது தேசியக் கொடி அவமதிக்கப்படவோ இல்லை என்றார்.
இதற்கிடையே, நடிகர் சித்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விவசாயச் சங்கங்கள், மத்திய அரசின் கைக்கூலியாக நடிகர் சித்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டினர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அரசின் ஏஜெண்டாக சித்து செயல்பட்டுள்ளார் என்று பார்தி கிஸான் சங்க பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கொக்ரிகாலன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இளைஞர்களை செங்கோட்டையை நோக்கி அழைத்துச் சென்று சித்து தவறாக வழிநடத்தியதாகவும், சித்து போன்றவர்களைப் போராட்டக் களத்தில் நாங்கள் அனுமதித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பார்திய கிஸான் சங்கத்தின் குர்னாம் சிங் கூறும்போது, நடிகர் சித்துவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. செங்கோட்டையில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. தீப் சித்துவின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் அரசின் ஏஜெண்ட் என்றே நாங்கள் நம்புகிறோம். கடந்த சில நாட்களாகவே அவர் விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு எதிராகப் பேசி வந்ததோடு, குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
பாஜக பொய் குற்றச்சாட்டு அம்பலம்:
விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், காலிஸ்தான் தீவிரவாதிகளும் இதில் உள்ளே புகுந்துவிட்டதாகவும் பாஜக கூறி வருவதைத் தோலுரிக்கும் வகையில், பல வீடியோ காட்சிகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
முதல் கட்டமாக, செங்கோட்டையில் கொடி ஏற்றியது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அவர்கள் கூறிய குற்றச்சாட்டு பொய்யாகியிருக்கிறது.
பாஜகவின் ஆதரவோடு சமூக வலைத்தளங்களில் இயங்குவோர், செங்கோட்டையில் கொடி ஏற்றியது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று பதிவிட்டனர். அதோடு, தேசியக் கொடி இறக்கப்பட்டதாகக் அபாண்ட பொய்யைக் கூறியிருந்தனர். இத்தகைய பொய்யைக் கூறியவர்களின் மூத்த பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்.
கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் ஒன்று சீக்கிய மதங்களின் ஒன்றான நிஷான் சாஹிப் கொடி என்று வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மற்றொரு விவசாயிகள் கொடி.
தேசியக் கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பொய்யான தகவல்களை 1 லட்சம் பேர் பின்பற்றும் அங்கிட் ஜெயின் வெளியிட்டிருந்தார்.
பாகிஸ்தான் ஃபர்ஸ்ட் என் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கிலும், இதையே பகிர்ந்திருந்தனர்.
எங்களுக்கு காலிஸ்தான் வேண்டும் என்று காகிதத்தில் எழுதப்பட்ட வாசகத்துடன் ஒருவர் நிற்கும் பழைய படத்தையும், தற்போது செங்கோட்டையில் கொடி ஏற்றுவதையும் இணைந்து ஒருவர் பகிர்ந்திருந்தார். டெல்லி தாக்குதலுக்கு ஆளாகிறதா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
ஆனால், செங்கோட்டையில் இருந்து கிடைத்த வீடியோ ஆதாரங்களில் இரண்டுமே காலிஸ்தான் கொடிகள் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையில் இருந்த பத்திரிக்கையாளர்களும் இதையே உறுதி செய்தனர்.
மேலும், தேசியக் கொடியை இறக்கிவிட்டு இந்த இரு கொடிகளை ஏற்றியதாகச் சொல்வதையும் நேரில் பார்த்த அவர்கள் மறுக்கிறார்கள். வெறும் கம்பத்தில் தான் அவர்கள் கொடி ஏற்றினார்கள் என்று ஆதாரத்துடன் கூறுகின்றனர். இதனைப் பல பத்திரிக்கையாளர்கள் ட்விட்டரிலும் உறுதி செய்து கொண்டே இருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தைச் சீர்குலைக்க சித்து என்ற நடிகரையும் களம் இறக்கிவிட்டு, அவர் மூலம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு செங்கோட்டையில் கொடி ஏற்றச் சொல்லிவிட்டு, இப்போது காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் கொதிப்பது எவ்வளவு கபட நாடகம்.
பிள்ளையையும் கிள்ளி விட்டுக் கொண்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல் அல்லவா உள்ளது இந்த இழிச் செயல்.
உள்ளூரில் ஊடகங்கள் இருக்கிறது தப்பித்துக் கொள்வீர்கள். உலகக் கண்கள் உங்கள் கேலிக் கூத்தைப் படம்பிடித்துக் கொண்டிருப்பதை அறிவீர்களா?
நியாயமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை, நடிகர் சித்து போன்ற கைக்கூலிகளை வைத்து வன்முறையாக மாற்றிய இந்த கொடுங்கோலர்களுக்குக் காலம் ஒருநாள் பதில் தரும்.