எதிர்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த தெரிந்த உங்களுக்கு, நாட்டை ஆள தெரியவில்லை என, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
கொரோனா காலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் சாதனை என பட்டியலிட்ட ராகுல்காந்தி, பிப்ரவரியில் நமஸ்தே ட்ரம்ப், மார்ச்சில் மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது, ஏப்ரலில் மக்களை மெழுகுவர்த்தி ஏற்றச் சொன்னது, மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற 6 ஆவது ஆண்டு கொண்டாட்டம், ஜுன் பீகார் பேரணி, ஜுலை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிப்பது…என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஷஹீன்பாக் போராட்டம், கலவரம், ஜ்யோதிராதித்யா சிந்தியா விலகியது, சீனாவுக்கு ஆதரவாக நிற்பது, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தான் காங்கிரஸ் கட்சியின் கடந்த 6 மாத கால சாதனைகள் என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் ஜவடேகரின் இத்தகைய பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கடும் கண்டனத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து கொண்டு அரசியலில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏன் ஏற்படுத்துகிறீர்கள் ஜவடேகர்?. இந்த போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.
ராகுல் காந்தியை விமர்சிப்பதற்குப் பதிலாக, அவர் மீதான உங்கள் சொல்லாடல் கடுமையாக உள்ளது. இதை எல்லாம் விட்டுவிட்டு, நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை சமாளிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஷஹீன்பாக் கலவரம் பற்றி கூறினீர்கள். அந்த கலவரத்தின்போது, சிசிடிவி கேமிராக்களை போலீஸார் உடைத்தது உங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி, ஒவ்வொரு 21 நாட்கள் முடியும் போதும் பிரதமர் பேசுகிறார். ஆனால் இதுவரை அதற்கு முடிவு ஏற்படவில்லை.
சீன விவகாரத்தைப் பொறுத்தவரை, நம் பிரதமர் கூறியதும், சீன அதிபர் ஜின்பிங்க் கூறியதும் ஒன்றாக உள்ளது. அதாவது, இந்திய எல்லையில் ஏதோ நடந்திருக்கிறது என சீனாவுக்கான இந்திய தூதர் தெரிவித்த போதும், நம் நிலத்தில் யாரும் ஊடுருவவில்லை என்று நீங்கள் மட்டும் தான் கூறினீர்கள்.
எதிர்கட்சிகளை எவ்வாறு தாக்குவது என்பது பற்றி மட்டும் தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், நாட்டை எவ்வாறு ஆள வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை.