பதவிக்காலம் முழுவதும் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்குகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் பதவியிலிருந்து வெளியேறும்போது, அவர்களது செயல் திறன் குறித்து சட்ட சமுதாயம் மற்றும் சட்ட வர்ணனையாளர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும்.
நீதிபதிகளின் தீர்ப்புகள் தரத்தை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும். இத்தகைய தீர்ப்பு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும், துல்லியமாகவும், பகுப்பாய்வுடனும் மற்றும் அச்சமின்றி, சார்பற்ற நிலையில் இருக்க வேண்டும். அதோடு, இத்தகைய தீர்ப்புகள், மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.
சரியான நீதி நிர்வாகத்தின் நலன் கருதி இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தேவ் கூறும்போது, ” நீதிபதிகள் வருவார்கள், போவார்கள், ஆனால் சட்ட சமுதாயம் தொடர்ந்து கொண்டிருக்கும்” என்றார். நீதிபதி அருண் மிஸ்ராவும், ”சட்ட சமுதாயம் தான் நீதித்துறையின் தாய்” என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.
கடந்த 2 ஆம் தேதி நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அருண் மிஸ்ரா, இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய நீதிபதிகளில் முதன்மையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குகிறார் என்று, செய்தியாளர்களை சந்தித்து 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி கொடுத்ததை மறக்க முடியாது. அப்போது தான் நீதிபதி அருண் மிஸ்ரா வெளிச்சத்துக்கு வந்தார். நீதிபதி அருண் மிஸ்ராவுக்குத் தான் அப்போதைய தலைமை நீதிபதி முக்கிய வழக்குகளை ஒதுக்கீடு செய்ததாக 4 நீதிபதிகளும் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, அருண் மிஸ்ரா மூத்த நீதிபதியானதும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றதும் சர்ச்சைகள் மேலும் அதிகமானது.
குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முஸ்லீம் அமைப்பினர் மீதான விரைவில் விசாரணை நடந்து, அதன் தொடர்ச்சியாக அமர்வு நீதிமன்றமும் தண்டனை வழங்கியது. எனினும், சரியான சாட்சியங்கள் இல்லை என்று கூறி அமர்வு நீதிமன்ற தீர்ப்பை தூக்கி எறிந்தது உயர் நீதிமன்றம்.
எனினும், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்பட்டபோது. அருண் மிஸ்ரா தான் வழக்கை விசாரித்தார். முஸ்லீம் அமைப்புகளுக்கு அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனை செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளை அவரே பின்பற்றவில்லை. இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததற்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்த காரணங்கள் மோசமானதாக இருந்தன. அவர் கூறிய காரணங்கள் அடிப்படைக் குறைபாடுகள் கொண்டதாக இருந்தன.
ஒருமுறை விடுமுறை கால நீதிமன்றத்தில் வரி தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை பிறப்பித்தார். பொதுவாக, விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுவது வழக்கம். இதில், இறுதி தீர்ப்பை வழங்கியது வழக்கத்துக்கு மாறாக இருந்தது. மேலும் வரி தொடர்பான தொழிலதிபர் அதானியின் வழக்கையும் விடுமுறை நீதிமன்றத்தில் முழுவதும் விசாரித்து, அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
அதானி வழக்குகளை எல்லாம் நீதிபதி அருண் மிஸ்ரா விசாரித்தது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீட்டு நெறிமுறைகளுக்கு மாறாக இருந்தது. அதானி குழுமத்துக்கு ஆதரவான தீர்ப்புகளின் மூலம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அளவுக்கு நீதிபதி அருண் மிஸ்ரா நிவாரணம் அளித்தார். உண்மையிலேயே, அதானி குழுமத்தின் கனவுகளை செயல்படுத்தும் நீதிமன்றமாக அருண் மிஸ்ரா பணியாற்றிய நீதிமன்றம் இருந்தது.
கொச்சியில் மராடு பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிகள் கொண்ட 343 குடியிருப்புகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்ட பகுதியாக அந்த இடம் வகைப்படுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு வந்தபோது, கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆச்சரியம் தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, 343 குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்பக் கமிட்டி அனைத்து உரிமையாளர்களிடமும் விசாரிக்கவில்லை. அதேசமயம், விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டிடங்களை இடிப்பதற்கு தடை விதிப்பதற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகக் கூறியது. ஆனால், இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், 343 வீடுகளைம் இடித்துத் தள்ள நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவிட்டார்.
ஏழைகளும் காயப்பட்டார்கள்: நீதிபதி அருண் மிஸ்ரா கடைசியாக அளித்த தீர்ப்பில், ரயில் பாதையோரம் வசிக்கும் ஏழைகளின் 48 ஆயிரம் குடிசைகளை, நோட்டீஸ் தராமல், விசாரிக்காமல், அவர்களுக்கு மாற்று இருப்பிட வசதி செய்து தராமல், நீதித்துறை மேம்பாட்டு நிவாரணம் தராமல் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.
உரிமக் கட்டணத்தை கணக்கிட, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாயை உட்படுத்தி, மத்திய தொலை தொடர்புத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு ஆதரவாக நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பளித்தார். இதனால், வோடாபோன் நிறுவனம் ரூ. 58 ஆயிரம் கோடிகளும், ஏர்டெல் நிறுவனம் 43 ஆயிரம் கோடிகளும் (ரிலையன்ஸ் ஜியோ இதில் சம்பந்தப்படவில்லை) கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த தொகையை கட்ட இரு நிறுவனங்களுக்கும் 3 மாதங்கள் கால அவகாசம் மட்டும் கொடுத்த அருண் மிஸ்ரா, அதற்குள் முழுத் தொகையையும் கட்டவேண்டும், இல்லையேல், நிறுவனங்கள் இழுத்து மூடப்படுவதை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தொலைத் தொடர்புத் துறையில் வோடாபோன், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே போட்டி நிறுவனங்களாக உள்ளன. இதில், இரு நிறுவனங்களையும் மூடிவிட்டால், ரிலையன்ஸ் ஜியோ தான் தனிக்காட்டு ராஜா என்பது நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியும்.
நீதிபதி அருண் மிஸ்ரா 3 மாதங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தார். எனினும், அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் இடைவிடாமல் வேண்டுகோள் விடுத்து காலக்கெடுவை நீட்டித்து வருகின்றன. அதிர்ஷ்டவசமாக, அரசும் அவர்களுக்கு கால நீட்டிப்பு செய்துவருகிறது.
நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்புகள் அனைத்தும், எதிர்வரும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத வகையில் குருட்டுத்தனமாக இருந்தது. சர்வாதிகாரிகளாக இல்லாமல் சட்டத்தின் எல்லைகளை மதித்து நடுநிலையாக செயல்படுவதற்காகத்தான் நீதிபதிகளுக்கு நாம் அதிகாரத்தைக் கொடுத்துள்ளோம்.
இவற்றை எல்லாம் மீறி நடக்கும்போது, நீதியை மீட்டெடுக்க யார் வருவார்? என்ற கேள்வி இப்போது அடிக்கடி எழுப்பப்படுகிறது. வெறித்தனமாக கட்டுப்பாடற்று ஓடிக் கொண்டிருக்கும் காவலர்களால் ஏற்படும் அபாயத்தை நமக்கு படம் பிடித்து’ காட்டியதற்காக, நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், பிரசாந்த் பூஷன் மீதான அவமதிப்பு வழக்கில் ஆர்வம் காட்டியதன் மூலம், அவர் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்பட்டது.
தான் தொடர்ந்த பல வழக்குகளை நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிக்கக் கூடாது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையே நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிக்கும் நிலை ஏற்பட்டது. நீதிபதியே குற்றம் சாட்டுபவராகவும், அரசு வழக்குரைஞராகவும், சாட்சியாகவும் மற்றும் தீர்ப்பளிப்பவராகவும் இருக்கும்போது, இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு போராட வேண்டியுள்ளது.
தலைமை நீதிபதி தலைக் கவசம் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது குறித்து, ட்விட்டரில் பிரசாந்த் பூஷன் பதிவிட்டது, எந்த வகையிலும் தலைமை நீதிபதிக்கோ அல்லது நீதித்துறைக்கோ கெட்ட பெயரை ஏற்படுத்தப் போவதில்லை. நீதித்துறையையும், கடைசியாக பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளைப் பற்றியும் அவர் விமர்சித்தது, நாட்டு மக்களின் பிரதிபலிப்பு. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், அருண் மிஸ்ரோவோ, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வேகமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து தண்டனையும் கொடுத்திருக்கிறார். சட்ட சமுதாயத்துக்கும் நீதித்துறைக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட அருண் மிஸ்ரா காரணமாக இருந்தார். பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவராக மிஸ்ரா இருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு 45 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், 45 வயதுக்கு குறைவான அவரது சகோதரர் விஷால் மிஸ்ரா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். விதிமுறைப்படி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதி ரமணா ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவால் தன் சகோதரர் உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும்போது, அந்த குழுவில் அருண் மிஸ்ரா இடம்பெறவில்லை. ஆனால், 5 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலீஜியத்தில் நீதிபதி மிஸ்ரா இடம்பெற்றிருந்தார். விஷால் மிஸ்ரா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பல ஆண்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது, கொலீஜியம் மூலம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறைப்படி தேசிய நீதிபதிகள் தேர்வுக் குழுவே தேர்ந்தெடுக்கலாம்.
நல்ல நீதிபதிக்கான எந்த தகுதியும் நீதிபதி அருண் மிஸ்ராவிடம் இல்லை. வழக்குரைஞர்கள் முதல் நீதிபதிகள் வரை மிரட்டல் போக்குடன் நடந்து கொள்வது, ஒரு சார்பாக நடந்து கொள்வது அவரது வழக்கமாக இருந்தது. நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டதன் மூலம், அருண் மிஸ்ரா தான் நீதிமன்ற அவதிப்புக் குற்றத்தை செய்துள்ளார். அவருக்கு அரசியல் சாசனத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொருந்தாதா? பிரசாந்த் பூஷன் மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோருக்கிடையே ஒப்பீடு செய்தால், யார் நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார்கள் என்று தெரியும்.
தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு வாரியத் தலைவர் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் பதவி நிரப்பப்படவுள்ளது. இந்த பழங்களை தேடும் பறவையாக நீதிபதி அருண் மிஸ்ரா மாறலாம். இப்போது, நாட்டின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். நீதிபதி அருண் மிஸ்ராவின் சகோதரர் விஷால் மிஸ்ராவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக தொடரவிட்டால், முறைகேடாக தேர்வு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட முதல் நீதிபதியாக இருப்பார்.
(பார் அண்ட் பெஞ்ச் இணையத்தில் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)