3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தபோதும், அம்பானியும் அதானியும் கொடுக்கும் அழுத்தத்தால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ஜோகீந்தர் சிங் உக்ராஹன் புதிய தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் ஒற்றுமை பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் வியப்படைவீர்கள். மத்திய விவசாய அமைச்சர் டோமர் என்னிடம் தெரிவித்த விஷயத்தைக் கூறுகிறேன். 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தயாராக இருந்ததாகவும், மறுநாளே அம்பானியும் அதானியும் பிரதமரும் அழுத்தம் கொடுத்துத் திரும்பப் பெறவிடாமல் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நவீன இயந்திரங்களைப் புகுத்தியதால் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்நிலையில், புதிய 3 விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்தினால், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கஷ்டங்களை விவசாயிகள் அனுபவிக்க நேரிடும்.
டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த விவாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களுக்கு முன்பு விவசாயிகளை ஆதரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது எங்களுக்குப் பலமாக இருக்கிறது.
தேசிய பிரச்சினையாகத் தொடங்கிய விவசாயிகள் பிரச்சினை, தற்போது உலகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது”என்றார்.
சம்யுக் கிஸான் மோர்ச்சா தலைவர் ருல்டு சிங் மான்ஸா கூறும்போது, ” ஏற்கெனவே 2 உலகப் போரைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடக்கும் போர் வேறுபட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றமோ, அல்லது வேறு உலகத் தலைவர்களோ நம் ஆதரிப்பது பெரிய வெற்றி அல்ல. மக்கள் ஆதரவைத் திரட்டுவதே உண்மையான வெற்றி. உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டு மக்களை வீதிக்கு வந்து போராட அந்த தலைவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையான போராட்டமே ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பிறகு தான் தொடங்கியது” என்றார்.
தொழிலாளர் நலச் செயற்பாட்டாளர் நோடீஸ் கவுர் கூறும்போது, ” மோடி அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்ததால் என்னைக் கைது செய்தனர். கொரோனா காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும் தொழிலாளர்களுக்குத் தர மறுத்தனர். விவசாயிகள் போராட்டத்திலும் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதேசமயம், தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடுவேன்” என்றார்.