உயர்ந்த பொறுப்பிலிருந்து கொண்டு, பொறுமை இழந்து பேசாமல் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது.
இருவரும் பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு ஏற்றதல்ல. தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாவிட்டாலும், தவறான மற்றும் வகுப்புவாதக் கருத்துகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்குகளைப் பெறுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்களை இழிவுபடுத்துவதையும் அவமதிப்பதையும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் செய்யலாமா? அல்லது ஒவ்வொருவரும் மதிக்க, தாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிலைநாட்ட, அவர்களது பேச்சு ஒழுக்கமானதாக இருக்க வேண்டாமா? அவர்கள் வகிக்கும் உயர் பதவிகளை தேர்தல் ஆதாயத்துக்காக சமரசம் செய்யலாமா?
தேர்தலின் போது அவர்கள் பேசும் பேச்சுக்கள் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்காதா? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கருத்துகளால் எல்லை தாண்டி இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் ஏற்பட்டால், அது தேசிய நலனை பாதிக்காதா? அல்லது, உள்நாட்டு அரசியல் பலி பீடத்தில் கவனமாக வடிவமைக்கப்ட்ட வெளியுறவுக் கொள்கையை தியாகம் செய்வது சரியா? மோடியும் அமித்ஷாவும் இந்தியாவின் நலனை மீறி பா.ஜ.க.வுக்கு முன்னுரிமை தரப்போகிறார்களா?
மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நட்சத்திர பிரச்சாரகர்களாக இருந்தனர். தாங்கள் வகிக்கும் உயர் பதவிகளை இழிவுபடுத்தாமல் இருக்க, தங்கள் நாக்குகளை அவர்கள் அடக்கிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் வகிக்கும் உயர் பதவி, இழிவுபடுத்தப்படவோ, மதிப்பிழக்கவோ கூடாது என்றால், அசிங்கமான சிறு அரசியலிலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும். அதனையும் மீறி அவர்களது மோசமான பேச்சுகள் அமைந்தால், அவர்கள் வகிக்கும் பதவிகள் களங்கப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது. அவர்களது இழிபேச்சுகள் அரசாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மோடி மற்றும் அமித்ஷாவின் தேர்தல் உரைகள், வெறுக்கத்தக்கதாக இருந்தால், அது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும். தேசிய ஒற்றுமைக்கு எதிரான அரசியலை முன்னெடுக்காமல், ஒவ்வொருவருக்கும் மரியாதை தர வேண்டியது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கடமை. நாம் ஒற்றுமையாக இருக்காவிட்டால், நம் எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை எப்படி வெளியேற்ற முடியும்? பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீரை எப்படிக் காப்பாற்ற முடியும்? இடதுசாரி தீவிரவாத ராணுவ குழுக்களுடன் எப்படிப் போரிட முடியும்? கொரோனாவுடனான போராட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வர முடியும்? நலிந்துபோன நமது பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு எப்படி கொண்டு வர முடியும்?
அசாம் தேர்தல் பரப்புரையின் போது திஸ்பூரில் பேசிய அமித்ஷா, ‘சுயச்சார்பு அசாம் வேண்டுமா? அல்லது மவுலானா சார்பு அசாம் வேண்டுமா?’ என வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் அசாமில் கூட்டணி அமைத்திருக்கும் பத்ருதீன் அஜ்மலின் ஏஐயூடிஎஃப் கட்சியைத் தான் அவ்வாறு விமர்சித்துள்ளார். ஆகவே, சுயச்சார்பு அசாம் அல்லது அஜ்மல் சார்பு அசாம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்று அவர் வாக்காளர்களிடம் கூறுகிறார். இது நியாயமா? அவர் மவுலானாவை ஏன் குறிப்பிட்டார் என்றால், அவர் முஸ்லீம்களால் மதிக்கப்படும் மத அறிஞர். சிறுபான்மை சமூகத்தைக் கேலி செய்வதாகவும், இந்து மற்றும் முஸ்லீம் வாக்காளர்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் அமித்ஷாவின் இந்த பேச்சு அமைந்துள்ளது. அவரது பேச்சு பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தன்னை முஸ்லீம்களுக்கு எதிரான நபராகப் பார்க்குமாறு முஸ்லீம் மக்களை நிர்ப்பந்திக்கிறார். அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய உள்துறை அமைச்சர் மீதான நம்பிக்கையை இந்தியர்களின் ஒரு பிரிவினர் இழப்பதற்கு, அமித்ஷாவே காரணமாகிறார்.
மவுலானாவை முரண்பாடாக பயன்படுத்துவதை அமித்ஷா தவிர்த்திருக்க வேண்டும். பிரச்சாரம் முழுவதும் ஊடுருவல் காரர்களைப் பற்றி அவர் பேசியது, புதுடெல்லி-டாகா உறவை சிக்கலுக்கு உள்ளாக்கும்.
குறிப்பாக வங்கதேச ஊடுருவல் காரர்களை வெளியேற்றுவோம் என்ற அமித்ஷாவின் பேச்சு, சீனாவுடன் முழுவதும் சார்ந்திருக்கும் நிலையை எடுக்கவும், பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வங்கதேசத்தை இந்தியா தள்ளும் சூழல் ஏற்படும். ஊடுருவல் காரர்களும் அல்லது குஸ்பெத்தியாக்களும் தான் அமித்ஷாவின் குறியாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லைப் பாதுகாப்புப் படை, வங்கதேச எல்லையில் கடமையிலிருந்து தவறிவிட்டதை அமித்ஷாவே ஒப்புக்கொள்கிறார். அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளின் படி பார்த்தால், இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவரை, லஞ்சம் வாங்கிக் கொண்டு எல்லைப் பாதுகாப்புப்படையினர் அனுமதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
அமித்ஷாவை விட தான் வகிக்கும் பிரதமர் பதவியை இழிவுபடுத்துபவர் மோடி தான். பிரதமரின் பேச்சு நாலாந்தர பேச்சாளர்களின் பேச்சு போல் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாஹுவா மொய்ட்ரா கூறியுள்ளளார். மோடியின் நடத்தை கீழ்த்தரமாக இருப்பதாகப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். இது போன்ற புகழ்மாலை வேறு எந்த பிரதமருக்கும் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். மம்தாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததை மொய்ட்ரா கடுமையாகவே கண்டித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை மறைப்பதற்கு, மம்தா மீதான தனிப்பட்ட தாக்குதலை தேர்தல் பரப்புரையில் மோடி நிகழ்த்தியதாக மொய்ட்ரா சுட்டிக்காட்டுகிறார். மம்தாவை கேலி செய்து மோடி பேசுவதை கண்டித்துள்ள மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஷி பஞ்சா, ‘பெண்களை துன்புறுத்துபவர்’ என பிரதமரை விமர்சித்துள்ளார்.
கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி கோண்டாயில் தேர்தல் பரப்புரையில் பேசியதை ‘தி டெலிகிராப்’ நாளிதழ் தெளிவாக வெளியிட்டுள்ளது. அதில், ‘தீதி ஓ தீதீ’ என்று பலமுறை அழைத்து மம்தாவை கேலி செய்துள்ளார். மம்தா யார் பேச்சையும் கேட்பதில்லை என்பதற்காக இப்படி அழைப்பதாக விளக்கமும் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி மம்தா பற்றி வேடிக்கையாகப் பேசினாலும், ஒரு பெண்ணை பற்றி மோசமான கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது, அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். வங்கதேசம் சென்ற எந்த இந்தியப் பிரதமருக்கும் கிடைக்காத மரியாதை மோடிக்கு கிடைத்தது. மோடி டாகாவில் இறங்கியதும், அவரை அவமதிக்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் காலணிகளை கையில் பிடித்து அசைத்துக் கொண்டிருந்தனர். மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். வங்கதேச 50 ஆவது சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடியை அழைத்த ஷேக் ஹசீனாவின் முடிவை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
மோடியின் வங்கதேச பயணத்தின் நோக்கமே, டாகாவுக்கு வெளியே அமைந்துள்ள கோயிலுக்கு செல்வதுதான். மேற்கு வங்க மாநிலத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக அளவில் இருக்கும் மத்துவா சமுதாயத்தினர் அங்கு வாழ்கின்றனர். அவர்களை சந்தித்து மேற்கு வங்கத்தில் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பது தான் மோடியின் திட்டம். தன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலணிகளை காட்டியதையும் மீறி, அங்கு சென்ற ஒரே பிரதமர் மோடி என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அவரது வருகையால் வங்கதேசம் 17 உயிர்களை இழந்தது.
இந்த சம்பவம் உண்மையிலேயே இந்தியா மீது படிந்த கறை தான். மோடி மற்றும் அமித்ஷாவின் பொறுப்பற்ற பேச்சுகள் மற்றும் வெறித்தனமான பா.ஜ.க. நிலைப்பாட்டால், அவர்கள் வகிக்கும் உயர்ந்த பதவி சொற்களாலும் செயல்களாலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.