‘பிரெஞ்ச் டிசால்ட்’ விமான தயாரிப்பு நிறுவனமும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ- வும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ரபேல் தொடர்பான தொழில்நுட்பத்தை மாற்றாததை சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
”ஒப்பந்தம் செய்துகொண்டபடி, ரபேல் போர் விமானத்தின் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மாற்றியதை, அந்நிறுவனம் உறுதி செய்யவில்லை என்று சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கையாளர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, முதல் வருடாந்திர அர்ப்பணிப்பு 2020 செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஒப்பந்தப்படி கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசால் சொல்ல முடியுமா? சிஏஜி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை மத்திய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா?
இலகுரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் எந்திரத்தின் தொழில்நுட்ப மாற்றத்துக்கான செலவு ரூ.60 ஆயிரம் கோடிகளாகும். தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டு விற்பனையாளர் இந்தியாவின் ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை முதலீடு செய்திருக்கவேண்டும். அப்போது தான் ரூ.300 கோடிகளுக்கு மேல் பாதுகாப்புத் துறை போர் விமானங்களை வாங்க முடியும் என்பது இந்திய ஒப்பந்த கொள்கையாகும். ரபேல் ஒப்பந்தத்தில் இந்த முதலீடு 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பிரெஞ்ச் பங்குதாரர்களான டிசால்ட் விமான நிறுவனம், எம்பிடிஏ, சஃப்ரான் மற்றும் தாலேஸ் ஆகிய 4 நிறுவனங்களும் இதனைப் பின்பற்றவில்லை” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா தமது ட்விட்டர் பதிவில், ”முக்கியமான பாதுகாப்பு விசயத்தில் நாட்டை மத்திய அரசு தவறாக வழி நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பிரச்சினை முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படவில்லை என்பதை புதிய சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ இப்போது’ மேக் இன் பிரான்ஸாக’ மாறியுள்ளது. ஒப்பந்தப்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தொழில்நுட்பம் மாற்றப்படவில்லை. இதையும் ‘எல்லாம் நன்மைக்கே’ என்று மோடி சொன்னாலும் சொல்வார் என குறிப்பிட்டுள்ளார்.